மாற்றுக்காணிகளில் சென்று வாழக்கூடிய நிலையில் நாங்கள் தற்போது இல்லை, எனவே நாங்கள் குடியிருக்கின்ற காணியை எங்களுக்குப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு கிளிநொச்சி பன்னங்கண்டி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிளிநொச்சி, பன்னங்கண்டி மக்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் இன்று 53ஆவது நாளாகவும் தொடர்கிறது.
அந்த வகையில் தனியார் காணியொன்றில் வசித்து வரும் 120 வரையான குடும்பங்கள் குறித்த காணியை தங்களுக்கு வழங்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த வாரம் வடக்கு மாகாண ஆளுனர் உள்ளிட்ட உயரதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடிய போது,
குறித்த காணியானது தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியாகக் காணப்படுவதால் இதில் அதன் உரிமையாளருடன் பேசி ஒரு இணக்கப்பாட்டின் அடிப்படையில் காணியைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இல்லாவிடின் மாற்று காணிகளை பெற்று கொடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.
அவ்வாறு மாற்று காணிகளை பெற விரும்பினால் அருகில் உள்ள கண்டாவளை பிரதேசத்தில் காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் அதிகாரிகள் தரப்புக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே மாற்று காணிகளில் சென்று வாழக்கூடிய நிலையில் நாங்கள் தற்போது இல்லை. எங்களுக்கு நாங்கள் குடியிருக்கின்ற காணியை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.