இராண்டாம் உலக போரில் பங்கேற்ற முதலாவது ஈழத்தமிழனின் 100 ஆவது பிறந்ததினம் திருகோணமலையில் கொண்டாடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் உடுவில் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் செல்லையா கனகசபாபதி. 1918 ஆம் ஆண்டு பிறந்த இவரை 20 ஆவது வயதில் தொழில் எதுவும் செய்யாததால் பெற்றோர் வீட்டை விட்டு வெளியேறும்படி கூறியுள்ளனர். இதனால் சாதித்து காட்ட வேண்டும் என்னும் நோக்கில் பிரிட்டிஷ் விமான படையில் இணைந்துள்ளார்.
1941 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் விமான படைக்கு தெரிவான 18 பேருடன் இவரும் ஒருவராக இங்கிலாந்திற்கு பயிற்சிக்கு சென்றுள்ளார். இங்கிலாந்தில் சீ.கே.பதி என பெயரை மாற்றிய செல்லையா கனகசபாபதி பயிற்சிகளின் பின் கனடாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். கனடாவில் பெரும் இன்னல்களுக்கு மத்தியில் உயிர்தப்பியுள்ளதாகவும், முதல் தடவை இடம்பெற்ற பரீட்சையில் சித்தியடையாமல், மீண்டும் 2 ஆம் தடவை பரீட்சை எழுதி சித்தியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பின் மீண்டும் இங்கிலாந்திற்கு விமானியாக அனுப்பிவைக்கப்பட்ட செல்லையா கனகசபாபதி 2 ஆம் உலக போரில் இங்கிலாந்தின் போர் விமான விமானியாக செயற்பட்டுள்ளார். மேலும் 2 ஆம் உலக போரில் இவரது விமானத்தின் மூலம் பல தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளார். அது மட்டுமன்றி நீர்மூழ்கி கப்பல் ஒன்றையும் தாக்கியுள்ளார்.
தொடர்ந்து 2 ஆம் உலக போர் நிறைவடைந்ததும் இங்கிலாந்தின் கரையோர பாதுகாப்பு படையிலும் பணியாற்றியுள்ளார். அதனை தொடர்ந்து இலங்கை திரும்பிய கனகசபாபதி ஏயார் இந்தியா விமானியாகவும் 27 வருடங்கள் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில் தற்போது தனது பணியில் இருந்து ஓய்வு பெற்ற கனகசபாபதி திருகோணமலையில் உள்ள அவரது விடுதியில் தங்கியுள்ளதாகவும், 100 ஆவது பிறந்ததினத்தை கொண்டாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 1944 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் விமான படையில் கடமையாற்றிய முதலாவது ஈழத்தமிழன் கனகசபாபதிக்கு பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.