“காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு” என்பது தமிழரிடையே நிலவும் ஒரு பழமொழி. அதாவது காக்கை அழகற்றது, ஆனாலும் அதனுடைய குஞ்சு காக்கைக்கு உயர்வானது என்பர். இதைவிட வேறு கருத்தும் இருக்கலாம். ஆனால் தமிழ்மக்கள் அதிலும் ஈழத் தமிழ்மக்கள் “பிறர் பிள்ளை தலை தடவ தன்பிள்ளை தானே வளரும்” என்ற நல்ல கொள்கையை கடைப்பிடித்து வாழ்வார்கள் என்று நான் நினைக்கின்றேன். இப்போது செய்திக்கு போவோம்.
ஒரு குரல் அடங்கியது. அக்குரலுக்குரியவர் பாடினார், ஆடினார், படங்கள் நாடகங்களில் நடித்தார். ஆனால் இப்போது அமரநிலை அடைந்துவிட்டார். ஈழத்தில் எழுபதுகளில் இளைஞர்கள் பாடல்களை இயற்றி, அவற்றிற்கு இசை அமைப்பாளர்கள் மூலம் இசை அமைத்து, “பொப்” இசை என்ற ஒரு அடையாளத்துடன் இசைக்குழு நிகழ்ச்சிகளில் பாடிவந்தனர். அன்று அந்த இளைஞர்கள் வரிசையில் பிரதான இடம் பிடித்தவர் “பொப்” பாடகர் ஏ. ஈ. மனோகரன் என்று சொல்லமுடியும். இவருடைய நிகழ்ச்சிகளுக்கு மக்கள் குறிப்பாக அன்றைய இளைஞர்கள் அதிகமாக வருவார்கள். உண்மையில் எழுபதுகளில் எங்களது ஈழத்து பாடல்கள் என்னும்போது இலங்கை ஒலிபரப்புகூட்டுத்தாபனம் உருவாக்கும் ஈழத்து பாடல்கள் வானொலியில் ஒலிக்கும். அதன்பின் இந்த “பொப்” இசைக்கலைஞர்களின் பாடல்கள் அறிமுகமாயின, இசைக்கச்சேரிகளில் மட்டுமன்றி இலங்கை வானொலியிலும் இந்தப்பாடல்கள் ஒலித்தன. மக்களும் அதை விரும்பி இரசித்தனர் என்று உறுதியாக சொல்லமுடியும். இன்றும் அப்பாடல்கள் எம்மிடையே உலாவருகின்றன. சில நிகழ்வுகளில் இன்றும் ஈழத்து துள்ளிசை பாடல்கள் பாடுகின்றனர். “பொப்’ பாடல்களே துள்ளிசைப்பாடல்கள் என்று தமிழில் அழைக்கப்படும்.
அன்றைய நாட்களில் ஈழத்தில் பல இசைக்குழுக்கள் இயங்கின. அவை கண்ணன் – நேசம், பரமேசு – கோணேசு, யாழ்- இரங்கன், ஈழ நல்லூர் – மண்டலேசுவரன், அருணா, இப்படி இன்னும்பல. எனக்கு இந்த சில இசைக்குழுக்கள் ஞாபகம்.’ இந்த இசைக்குழுக்கள் திருவிழாக்கள், மேடை நிகழ்ச்சிகள், திருமணவீடுகள், இதுபோன்ற பல சிறப்பு நிகழ்வுகளில் மக்களின் அழைப்பின் பெயரில் வந்து பின்னணி இசையுடன் பாடல்களை பாடுவார்கள். இன்றுபோல அன்றும் சினிமாப்பாடல்கள் தான் அந்த இசைக்கச்சேரிகளில் பாடப்படும். பக்திப் பாடல்களுடன் ஆரம்பித்து, புதிய, பழைய திரைப்பாடல்கள் என்று அது தொடரும். துள்ளிசை இசைக்கலைஞர்களும் பக்திபாடல்கள் இயற்றிப்பாடியிருக்கின்றனர். பொதுவாக கச்சேரியின் இறுதிக் கட்டத்தில்தான் துள்ளிசை இசைப்பாடல்கள் பாடத்தொடங்குவர். ஒரு காலகட்டத்தில் திரைப்பட பாடல்களிலும் துள்ளிசை பாடல்களில் இளைஞர்கள் அதிக விருப்பம் கொள்ள ஆரம்பித்தனர். கச்சேரியின் ஒருகட்டத்தில் துள்ளிசை பாடல்கள் பாடும்படி கேட்க ஆரம்பித்துவிடுவர். இப்பாடல்கள் எங்கள் இளைஞர்களால் பாடப்படுவதாலும், எங்கள் பாடல்கள் என்ற எண்ணம் இருந்ததாலும், எங்கள் ஈழத்தின் அல்லது இலங்கையின் சூழலை பாடுவதாலும், துள்ளிசைப்பாடல்களாக உற்சாகமூட்டுவதாலும் பாடல்களை விரும்பியிருக்கலாம். அதிலும் ஏ.ஈ.மனோகரன் எனின் மேலும் உற்சாகம் அடைவர். காரணம் அன்று பல்வேறு பாடகர்கள் இருந்தபோதும் ஆடலும் பாடலுமாக துள்ளிசை பாடல்களை வழங்குவதில் ஏ.ஈ. மனோகரன் பிரபல்யமாக இருந்தார். அவருக்கென இரசிகர்களும் இருந்தனர் என்பது மறுக்க முடியாத மறைக்க முடியாத உண்மை. இந்த நேரத்தில் இன்னொரு முக்கிய செய்தியை சொல்லவேண்டும். இந்த இசைக்கச்சேரிகளை நிகழ்த்தும் கலைஞர்கள் எங்கள் பண்பாடு கலாசாரங்களை மீறாது நடந்து, மக்களின் நன்மதிப்பை பெற்றிருந்தனர். ஒரு காலகட்டத்தில் துள்ளிசை பாடல்களை இசைக்கச்சேரிகள் பார்க்கும் மக்கள் மட்டுமன்றி வானொலி நேயர்களும் விரும்பினார்கள், அதுமட்டுமல்ல, விளம்பரங்களுக்கு கூட ஈழத்து துள்ளிசை பயன்பட்டதாகவும், ஈழத்து ஆக்கங்கள் என்ற வகையில் தங்களிடம் இருந்த பாடல்களும் இவை என இலங்கை வானொலி அறிவிப்பாளர் பீ. எச். அப்துல் கமீட் குறிப்பிட்டிருக்கிறார்.
எண்பதுகளின் பின் எல்லாமே மாறத்தொடங்கிவிட்டது. இதனால் ஒவ்வொருவரும் ஆள்வேறுபாடு இன்றி கால்போனதிக்கில் புறப்பட்டு அவரவருக்கு கிடைத்த இடங்களில் வாழ ஆரம்பித்தனர். இதில் சிலர் இலங்கையிலே இடம்மாறி வாழ்ந்தனர், சிலர் இலங்கையை தாண்டி வெளியில் வந்தனர். அப்படி வந்தவர்களில் ஏ.ஈ.மனோகரனும் ஒருவர். இந்தியா சென்று அங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். இன்று அவர் இறந்துவிட்டார். இவர் இலங்கையில் வாழ்ந்திருக்கிறார். இலங்கை தொடர்பாக துள்ளிசை பாடல்கள் பாடியிருக்கிறார். புகழ் பெற்ற துள்ளிசை பாடகராக இருந்திருக்கிறார். திரைப்பாடல்களையும் தாண்டி துள்ளிசை பாடல்களை மக்கள் மத்தியில் பரவவிட்டிருக்கிறார். துள்ளிசைப்பாடல்கள் ஈழத்தவரின் பாடல்கள் என்னும் அளவிற்கு உயர்த்தியிருக்கிறார். அவ்வாறான ஒரு கலைஞனின் இழப்பு ஈழத்தவர்களுக்கு பெரிதாக தெரியவில்லை. அது ஏனென்றும் புரியவில்லை.
அவர் இந்தியாவில் வாழ்ந்திருக்கிறார். அங்கு திரைப்படங்களிலும் தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்திருக்கிறார். இந்திய நடிகர்களோடு பழகியிருக்கிறார் சேர்ந்து நடித்திருக்கிறார். ஆனால் அவர்களும் கலைஞன் என்ற வகுதிக்குள் அவரை உள்வாங்கவில்லை. அமரர் ஆகியபின் ஒருசிலர் மட்டும் அவரின் இறுதி பயணத்துக்கு வந்திருக்கிறார்கள் என்று செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன. இது ஏன் என நாம் கண்டிப்பாக சிந்திக்கவேண்டும். இலங்கை மக்கள் ஏன் கைவிட்டனர் என்றும் தெரியவில்லை. இந்திய மக்கள் ஏன் தேடவில்லை என்றும் புரியவில்லை. மொத்தத்தில் ஏ. ஈ. மனோகரன் என்ற ஒரு கலைஞனின் வாழ்க்கையின் இறுதிப்பயணம் சிறக்கவில்லை என்றே தெரிகிறது. கடைசிப்பயணத்துக்கு மக்கள் வரவில்லை என்று கண்டிப்பாக கவலைப்படவேண்டிய அவசியமில்லை என்பது வேறு செய்தி. காரணம் உழைக்கும் மக்களுக்கு வழிகாட்ட புறப்பட்டு அதற்காக தன்வாழ்நாள் முழுவதும் செலவழித்து துன்பத்திலே வாழ்ந்து மடிந்த கார்ல் மாக்ஸ் இறந்தபோது இறுதி சடங்குக்கு வந்தவர்கள் எத்தனைபேர். ஆனால் இப்போது அவர் பற்றி பேசவில்லையா?. இல்லை, பாரதியார் இறந்தபோது வந்தவர்கள் எத்தனை பேர்? இன்று அவர் மதிக்கப்படவில்லையா?. மனிதனால் மனிதன் எப்போது புரிந்து கொள்ளப்படுகின்றான் என்பது கண்டறியமுடியாத ஒன்று. ஆனால் ஒரு கலைஞன் இறப்பில் சிறப்பு வராவிடின் அது ஒரு வேதனைநிலை என்பது யாராலும் மறுக்க முடியாது.
இன்று ஈழத்தில் மட்டுமல்ல உலகம் பூராகவும் ஈழத்தமிழன் பரந்துவாழ்கின்றான். ஆனாலும், வெளிநாடுகளுக்கு வந்தும் வாழ்க்கையை மாற்றாத பல மக்கள் உண்டு. எண்ணங்களை மாற்றியவனும் உண்டு. இயல்பாகவே மனதினில் சில ஒவ்வாமைகளை வளர்த்துக்கொண்டு அலையும் ஒருகூட்டமாக ஈழத்தமிழர் காணப்படுகின்றனர். அதாவது மனதளவில் சில முடிபுகளை தம்மிடம் வைத்திருக்கின்றனர். அவற்றை மாற்றவே விரும்புவதில்லை. அதில் ஒன்று ஈழத்து கலைஞர்கள் தரம் குறைந்தவர்கள் என்ற முடிபு. இது எல்லா ஈழத்தமிழனுக்கும் பொருந்தாது. என்னைக்காப்பாற்ற இதை சொல்லவில்லை. எங்கள் ஈழத்தமிழ் கலைஞர்களை உயர வழிவகுத்ததும் இதே ஈழத்தமிழர்கள்தான். அதேவேளை இந்திய கலைஞர்கள் உயர்வென்று முழுமையாக நம்புவது. அதையே தமக்குரிய ஒரு பெரும் தகைமையாகவும் கருதிக்கொள்வது. இந்திய கலைஞர்களை மட்டுமல்ல எந்த ஒரு கலைஞனையும் உயர்வாக கணிப்பது தவறல்ல. ஆனால் இலங்கை கலைஞர்களின் கலைச்சேவைக்கு துணை செய்வதால் நாம் நன்மை பெறுவோமே தவிர நட்டமடைய மாட்டோம் என்ற மனநிலை இன்மைதான் தவறு. அன்றும் சரி, இன்று சரி, ஈழத்தமிழ் கலைஞன் ஒருவன் கலையை விரும்புவது கலைமேல் கொண்ட தாகமே தவிர வருவாய்க்காக அல்ல. அந்தக்கலை மூலம் பெறும் வருவாய் அவன் வாழ போதுமானதாக அமையும் என்று சொல்லமுடியாது. அன்றும் இந்த துள்ளிசை இசைக்கலைஞர்கள் இசைக்கச்சேரிகளை நடாத்தினார், ஆனால், அதன் மூலம் வாழ்க்கை நடாத்தினார்கள் என்று சொல்லமுடியாது. அனேகமாக வேறு தொழில்களும் புரிந்தே வாழ்க்கை வண்டியை நகர்த்தினார்கள் என்பது அன்று வாழ்ந்த அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இது இலங்கையில் வாழ்ந்த ஏனைய இசைக்கலைஞர்கள் அல்லாத கலைஞர்களுக்கும் பொருந்தும். ஒரு கலைஞன் என்பவன் தனித்து கலைக்காக மட்டும் வாழ்ந்தால் அவனது வாழ்வு மிகவும் சோகமுடிவை எட்டும் நிலையில் ஈழத்து கலைஞர்கள் உள்ளனர்.
அன்றைய ஈழத்து பாடகர்களை பொறுத்தவரை பெண்களை கேலிசெய்து, நகைக்சுவையாக பாடியிருப்பார்கள். பெண்களை இழிவுபடுத்தி பாடுவது மிகவும் குறைவு. ஈழத்தில் வாழ்ந்த கவிஞர்கள், புலவர்கள் கூட ஈழத்து வாழ்க்கையை சுவைபடவே பாடியிருப்பார்கள். சோகத்தில் பாடுதல், பிறரை குறைகூறிப்பாடுதல் மிகவும் குறைவாகவே இருந்துள்ளது. இன்று தமிழ் திரைப்பாடல்கள் பெண்களை திட்டிப்பாடுவதை பிரதான பாடுபொருளாக கொண்டிருக்கிறது. படங்கள் பெண்களை தரக்குறைவாக காட்டுவதிலேயே முனைப்பாக உள்ளது. இதனை பின்பற்றி இன்றைய ஈழத்தமிழ் பாடகர்களும் பெண்களை வசைபாடும் பாடல்களை பாடுகின்றனர்.. இந்திய பாடல்களை பின்பற்றி ஈழத்தவர்களும் அதையே செய்ய முற்படுகின்றார்கள் என்பது ஏற்றுக்கொள்ளவேண்டிய ஒன்று.. இதற்கான காரணம் ஈழத்தமிழர்களை பின்பற்றி முன்னேற முடியாத நிலையில், மாற்று வழியை தேடுவதே எனலாம். எனவே ஈழத்தமிழராகிய நாங்களும் அவர்களை ஏற்றுக் கொள்ளாததன் விளைவே இந்த மாற்றம் என்ற செய்தியை ஒவ்வொரு ஈழத்தமிழனும் புரிந்து கொள்ளவேண்டிய தருணம் இது. இந்திய திரைப்படப்பாடல் எழுதுவோர் தமிழ் இலக்கியபாடல்கள் வழிதொடர்ந்து, அவற்றை பின்பற்றி, இயல்பு வாழ்வுக்கு அப்பால் போய் நின்று, நடைமுறை பற்றி சிந்திக்காது, செயற்கைத்தனமான சினிமாக்களுக்காக பெண்களை வசைபாடும் பாடல்களை எழுதுகிறார்கள். உண்மையில் வாழ்வியல் நிலையில் ஈழத்தமிழர் வாழ்வியலுக்கும் தமிழ் திரைப்படங்கள் அல்லது நாடகங்களில் காட்டப்படும் வாழ்க்கைக்கும் பெருத்த இடைவெளி உண்டு. இதனை உள்வாங்கி எங்கள் இயல்பை, வாழ்வியலை மாற்றிக்கொள்ளக்கூடாது. இந்திய கலைஞர்களை ரசிப்பது தவறல்ல. எங்கள் கலைஞர்களை புறம் தள்ளுவதுதான் தவறு. நாங்கள் எங்கள் கலைஞர்களை சிறப்பாக பேணுவோமானால், அவர்கள் மேலும் உற்சாகமடைவர், சாதனைகள் படைப்பர் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
வெளிநாடுகளில் இந்திய கலைஞர்களின் நிகழ்வுகளுக்கு விரைவாக அனுமதி சீட்டுக்களை விற்கலாம் எனவும், அதே நிகழ்வில் ஒரு ஈழத்துபாடகர் அல்லது குறித்த வெளிநாட்டில் பிறந்த அல்லது வசிக்கும் ஒரு ஈழத்தமிழன் பாடினால், ஆடினால், நிகழ்ச்சி ஒன்றை ஆக்கியளித்தால், நிகழ்வினை பார்க்க வந்த மக்கள் கேள்வி கேட்பார்களாம். அதாவது இந்திய கலைஞர்களின் நிகழ்ச்சி என்று தானே சொன்னீர்கள், இப்போது இவர்கள் நிகழ்ச்சி செய்கிறார்கள், நாங்கள் மகிழ்ச்சியாக, உல்லாசமாக இருக்க வருகிறோம், நீங்கள் பணத்தை வாங்கிவிட்டு எங்களை ஏமாற்றுகிறீர்கள், இதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்பார்களாம். இது நிகழ்ச்சி ஒழுங்கமைத்தவரின் முடிபா? அல்லது மக்களின் கேள்வியா? என்று தெரியவில்லை. வெளிநாடு ஒன்றில் வாழும் ஈழத்தமிழன் நிகழ்ச்சி ஒன்றுக்கு அழைக்கப்பட்டு, அவன் நடத்தப்படும் விதமும், படும்வேதனைகளும் மதன், மாமா இருவராலும் நன்கு நடித்து காட்டப்பட்ட ஆக்கம் ஒன்று உன்குழாயில் பரவி இருந்தது. அதிலும் அங்கு வந்த இந்திய கலைஞரே அவரை ஏன் அவமானப்படுத்துகிறீர்கள் என்று கேட்குமளவிற்கு அந்த நிகழ்ச்சி இருக்கிறது. இது ஒரு அனுபவத்தின் குறிகாட்டியே.
பாரினில் நாம் தேடியதெல்லாம் நம்முடன் கூட வராது. ஆனால் பாடையில் ஏறும்போது இருக்கும் சிறப்பே எங்கள் வாழ்வின் பெருமையை விளக்கி நிற்கும். சிந்தியுங்கள். நாங்கள் செய்யவேண்டியத்தை சிந்தியுங்கள். இந்திய கலைஞர்கள் எங்களால் தூக்கி வளர்க்கப்படவேண்டியவர்கள் என்று சொல்லமுடியாது. ஆனால் எங்கள் ஈழத்து அல்லது புலம்பெயர்ந்த அல்லது புலம்பெயர்ந்த நாடுகளில் பிறந்த கலைஞர்கள் ஈழத்தமிழர்களால் கைதூக்கி உயர்த்தப்படவேண்டியவர்கள். ஈழத்து தமிழ்கலைஞர்களை ஏற்றிவைக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளோர் நிறைய உண்டு. இந்திய கலைஞர்கள் கூட இதற்கு உதவுகின்றார்கள். அதிலும் இன்றைய கலைஞர்கள் புதியவர்களை ஊக்குவிப்பதில் மிகவும் அக்கறை காட்டுகின்றனர். உலக புகழ் வாய்ந்த ஏ.ஆர. ரகுமான் முதல் ஒவ்வொரு கலைஞனும் புதியவர்களை கண்டறிவதில், அவர்களுக்கு உதவுவதில், ஊக்குவிப்பதில் மிகவும் அக்கறை காட்டுகின்றனர். இசை அமைப்பாளர் இமான் நூறு படங்களில் நூற்றைம்பது பாடகர்களை அறிமுகப்படுத்தியதாக மகிழ்ச்சியடைகிறார். இவை ஒரு சில உதாரணங்கள் மட்டும் தான். ஆனால் புதிய கலைஞர்களை அறிமுகப்படுத்துகின்றவர்கள் இன்னும் அதிகம் உண்டு..
ஈழத்தமிழராகிய நாங்களும் புலம்பெயர்ந்த மக்கள் என்று காலம்முழுக்க சொல்லாது, நாம் வாழும் நாடுகளில் கலைஞர்களை உருவாக்கவேண்டும். உள்ளூர் கலைஞர்களின் நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். உள்ளூர் கலைஞன் அல்லது ஈழத்தமிழன் நிகழ்ச்சி செய்தால் பார்க்க மாட்டோம் என்பதை விடுத்து, எல்லோரையும் விரும்பும் மனநிலையை வளர்ப்போம். தனித்து கல்விக்கு உதவுகின்றோம், மருத்துவத்துக்கு உதவுகிறோம் என்பதை விடுத்து ஈழம் மற்றும் ஈழம் கடந்து உருவாகும் கலைஞர்களும் வளர்ந்துவர செயலாற்றுங்கள். அவர்களும் சிறக்கட்டும். ஈழத்தமிழராகிய நாம் எங்கள் கலைஞர்களையும் ஏற்றமாக பார்ப்போம் அவர்களை உயர்த்த நாமும் உழைப்போம். இதுதான் இனிவரும் நாட்களில் எங்கள் கலைஞர்கள் சிறப்புற சிறந்தவழி மட்டுமல்ல, எங்களால் நிறைவேற்றப்பட வேண்டிய சமுதாய கடமையும் கூட.
ஏ,ஈ. மனோகரன் போல இன்னொரு கலைஞன் சோகத்தை சந்திக்காது இருக்கவும், பரந்து சிதறி இருக்கும் எங்கள் கலைஞர்களை ஒன்றிணைக்கவும், புதிய கலைஞர்கள் உருவாகவும், கலைகளில் விருப்பம் கொள்வோர் வளர்ந்துவரவும் நாம் கைகொடுப்போம். அவர்களின் சிறப்பினில் நாங்கள் மகிழ்வோம்.
– பரமபுத்திரன்.