முல்லைக் கடற்கரையை
முற்றுகையிட்ட பகைவனிடம்
முழுவதும் அவுத்துக் காட்டிவிட்டோமே
எம் வீட்டு மக்களே..!
திடீரென எங்கள்
முதுகில் இரண்டு குண்டுகள்
முளைத்திருக்கும் எனும் அச்சத்திலா…
தடவிப்பார்ப்பதற்கு தடியர்கள்
நியமனம்
களம்பலவாடிய
எங்கள் பெருந் தளபதிகளை
தொட்டுப்பேசும் சுதந்திரம்
எமக்கிருந்தது
மக்கள் ஆட்சியென
மார்தட்டும் நீங்கள் எம்மவரை
மந்தைகள் போல நடத்துவது
எவ்வகையில் நியாயம்
மேய்ப்பன் அற்ற ஆடுகளை
பாதுகாக்கவெனப்
புறப்பட்ட பொல்லா நரிகளை
எப்படிச் சபிப்பது
72ல் எப்படிப் பிரிந்தோமோ
அப்படியே இன்று
ஆளுக்கொரு கட்சி
தேசம் முழுவதும்
புதையுண்ட எம்மவரை மறந்து
எதற்கு நடக்கிறது
உங்கள் சுயநலத்தின் நீட்சி
உயிர் கொடுக்க உலைக்களம்
போனவனுக்கும்
ஊரான்வீட்டான் காசில்
ஊதிப்பெருத்தவனுக்கும்
வித்தியாசம் தெரியாத சில
விகாரப் பேய்கள்
சதிகாரர் சந்நிதியில்
சவகாசம் செய்யுதுகள்
வேட்டிகட்டுவதால்
வீரம் வந்துவிடாது
விடுதலைக்காய் கத்தியவன்
வீதியோரம் பிச்சையெடுக்கையில்
கண்டவன் நிண்டவன் எல்லாம்
காப்போர் தொழில் அரசியலில்
காப்போர் தொழிலென
அரசியலைச் சுட்டியதால்
பலர் காறி உமிழலாம்
உண்மையில் காப்போர்
தொழில் அரசியல்தான்
ஆனால் கொடுமை யாதெனில்
அந்த அரசியல் களுசடைகளின்
கைகளில்கிடக்கிறது
நாளை இறக்கவிருக்கும்
கிழவனின்
சாரத்துள் கைவைத்துப்பார்க்கும்
உங்கள் விநோதத்தின் முன்
முகம் மூடி
வெட்கப்படுகிறது தமிழ்த்தேசியம்
அட விலைபோன வீணர்களே.,!
பிரபாகரப் பெருந் திறமையை
பெருமைக்காய்க்கூட
பேசத் தகுதியற்றோர்
நீவீரெல்லாம்
தேசியக் கொள்கை எல்லாம்
கொள்ளை என்பீரோ..!
இலட்சம் பிணங்களின்மேல்
அமர்ந்து இலட்சியம் பேசும்
உத்தம உரிமையை
உமக்கார் கொடுத்தது
இது எம் நாடு
எம் வீடு
எம் நாட்டினுள் வாழும்
எம் வீட்டினுள் உறையும் – சில
பெரிய தவளைகளை
பிடித்து எறிந்தால்
சத்தமேதுமின்றி
நித்தம் உறங்கலாம்
சுத்தமாய் வீட்டில்
சுகமாய் உறங்கலாம்
– அனாதியன்-