ஏனைய சமூக மக்களுக்கு இணையாக மலையக தமிழ் மக்களுக்குரிய அடையாளங்களையும் பெற்றே தீருவோம் என தேசிய சகவாழ்வு மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையை திறந்துவைப்பதற்காக, அங்கு சென்ற பாரத பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அமைச்சர் மனோ தமது உரையில் மேலும் தெரிவிக்கையில்-
”நாட்டில் புதியதோர் வரலாறு படைக்கப்பட்டுள்ளது. நாங்கள் அனைவரும் இந்திய வம்சாவளியினர். மகா வம்சமும் அதனையே சொல்கின்றது.
1800ஆம் ஆண்டுக்குப் பிறகு, சமீபத்திய இந்திய வம்சாவளி மக்களாக நாங்கள் இங்கு இருக்கின்றோம். அதனால்தான் பாரத பிரதமர் எங்களை வந்து சந்தித்துள்ளார்.
இன்று ஜனாதிபதி மைத்திரி மற்றும் பிரதமர் ரணில் தலைமையிலான நல்லாட்சியில், புதியதோர் அந்தஸ்தையும் அடையாளத்தையும் பெற்றுள்ளோம்.
தமிழ் முற்போக்கு கூட்டணி அதனை தக்கவைத்துக்கொள்ள பெரும் பாடுபடுகின்றது. தற்போது மாற்றமொன்று ஏற்பட்டுள்ளது. அந்த மாற்றத்திற்கு வலுசேர்க்கும் வகையில், பாரத அன்னையின் தவப் புதல்வர் நரேந்திர மோடி இங்கு வந்து எம்மை சந்தித்துள்ளார். அவரை நாம் அனைவரும் கைகோர்த்து வரவேற்க வேண்டும்.
இந்நாட்டில், சிங்கள மக்கள், முஸ்லிம் மக்கள் மற்றும் வடக்கு கிழக்கு மக்களுக்கு இணையாக சகல அந்தஸ்தும் பெற்று தலைநிமிர்ந்து, தன்மான தமிழர்களாக மலையக தமிழர்கள் வாழவேண்டும். ஏனைய சமூகங்களுக்கு இணையாக மலையக மக்களும் தமது அடையாளங்களை பெற்றே தீர வேண்டும். அந்த மாற்றத்தை பெற்றே தீருவோம்” என்றார்.