மங்கலாக எரிந்துகொண்டிருந்த விளக்கின் முன் நாளைக்கு முடிக்கவேண்டிய வீட்டுப்பாடங்களை எழுதிக்கொண்டிருந்தாள் நிலா.
சிறு பிராயத்தில் கணித பாடம் என்றாலே அவளுக்கு வேப்பங்காய் போன்றே இருக்கும்.அனைத்து பாடங்களுக்கும் முன்னிருக்கையில் இருந்து வகுப்பை கவனிக்கும் நிலாவிற்கு கணித பாடம் என்றால் மட்டும் தனது தோழியின் பின்னிருக்கைக்கு நகர்ந்துவிடுவாள்.நடுத்தர உயரத்துடன் பொது நிறமாக இருந்தாலும் குழந்தைத்தனமான முகத்திற்கு சொந்தக்காரியான நிலாவிற்கு அவளது வகுப்புத் தோழிகள் செல்லமாக கூப்பிடும் பெயர் ‘இளவரசி” என்பதே. இளவரசி போலவே அழகாக தன்னை அலங்கரிக்கும் நிலாவிற்கு கணித ஆசிரியை மாலதியை மட்டும் எப்போதுமே பிடிப்பதில்லை.
”காலை எழுந்து மிகுதி வீட்டுப்பாடத்தை முடி, இப்போது நித்திரைக்கு போ” என்ற தந்தையின் குரலுக்கு கட்டுப்பட்டு விளக்கை அணைத்துவிட்டு படுக்கையில் அமர்ந்தாள் நிலா. இந்த கணித பாடம் மட்டும் அவளுக்கு புரியாத புதிராக இருந்தது. எப்போதும் கணித பாடத்தில் சிறந்த பெறுபேறுகளை எடுக்கும் விபுவின் பெயரினை சொல்லியே தன்னை காயம் செய்யும் மாலதி டீச்சருக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என்றும் இந்த வருட சாதாரண தர பரீட்சையில் அதி சிறந்த பெறுபேறுகளை எடுக்க வேண்டும் என்றும் மனதுக்குள் எண்ணிக்கொண்டாள் நிலா.
விபுவை விட சிறந்த பெறுபேறு எடுக்க வேண்டுமாயின் அவனிடம் பேச வேண்டும் அவன் பரீட்சைக்கு எந்த புத்தகங்களை வாங்கி கற்றுக்கொள்கின்றான் என்ற விபரங்களை அறியவேண்டும் எனவும் எண்ணியபடி அப்படியே அயர்ந்து உறங்கிவிட்டாள் நிலா.
அதிகாலை நேரம் தாயின் விளக்குமாற்று சத்தம் கேட்டு தூக்கத்தில் இருந்து விழித்து கிணற்றடிக்கு விரைந்தாள் நிலா. பாடசாலைக்கு செல்வதற்கு அவளுக்கு 30 நிமிடங்களும், தன்னை தானே அலங்கரிக்க நிலாவிற்கு ஒரு மணித்தியாலங்களுக்கு எப்போதுமே தேவைப்படும் என்பது எழுதாத விதியாக இருந்தது. கண்ணாடி முன்னிலையில் நின்று தம்மை தாமே ரசிக்கும் சாதாரண பெண் தான் நிலாவும்.
அழகாக தன்னை அலங்கரித்துக்கொண்டு தாயிடம் இருந்து சாப்பாடு பையை எடுத்துவிட்டு தனது இருசக்கர வண்டியில் பாடசாலைக்கு விரைந்து சென்றாள் நிலா. என்றுமில்லாதவாறு விபுவின் நினைவு அவள் மனதுக்குள் மெதுவாக துளிர்விட தொடங்கியது. அவனிடம் இன்று பேசிடவேண்டும் என்று நினைத்த போது சாதாரணமற்ற ஒரு மனநிலையில் சிறு சலனமும் ஏற்பட வேகமாக செலுத்தும் துவிச்சக்கர வண்டி மெதுவாக செல்ல தொடங்கியது.
சட்டென ”நிலா” என ஒரு குரல் அருகில் கேட்க கலவரமுற்று திரும்பி பார்த்தாள் நிலா.அருகில் துவிச்சக்கர வண்டியில் விபு வந்துகொண்டு இருந்தான். வழமையாக பேசும் நிலாவிற்கு இன்று மனம் எதோ தடைபோட ”சொல்லுங்க விபு” என்றாள் மெதுவாக
”என்ன இன்று ஆர்ப்பரிக்கும் நிலவை காணவில்லை” என்று வழமை போன்றே கேள்விகளை தொடுத்தான் விபு. ”ஏதும் இல்லை சாதாரண தலைவலி’ என்று பதிலளித்தாள் நிலா
”ஓ ஓ இன்று கணக்கு பாடம் முதல்” என்றவுடன் தலைவலியா? என்று கிண்டல் செய்த விபுவுக்கு, நிலாவின் முகத்தில் ஏற்பட்ட சோகம் மனதை தைக்க ”சாரி நிலா சாரி” மன்னிச்சிடுங்க நான் சும்மா சொன்னேன்’ என்று சொல்லிவிட்டு அவளை தாண்டி வேகமாக துவிச்சக்கர வண்டியை செலுத்தினான்.விபு தன்னை தாண்டி வேகமாக செல்வதை உணர்ந்த நிலா ”ஓய் விபு ஓய்” ஒரு நிமிடம் நில்லுங்கள் உங்களுடன் பேச வேண்டும் என்றாள்.
என்றும் இல்லாத மாற்றத்தை உணர்ந்த விபு துவிச்சக்கர வண்டியை விட்டு இறங்கி அருகில் இருந்த வேப்பமரத்தின் கீழே நின்றான்,
அவனருகில் வந்த நிலா ”விபு நான் உங்களிடம் ஒன்று கேட்கலாமா? என்று மெதுவாக கேட்டாள்.
”ஓ கேளுங்க, என்னிடம் கேட்க என்ன தயக்கம்?” என்று சாதாரணமாகவே பதிலளித்தான் விபு.
”இல்லை விபு நீங்கள் எங்கே கணித பயிற்சி புத்தகம் வாங்குவீங்க? எப்படி படிப்பீங்க என்று சொல்லுங்கள் என்றாள் நிலா.
”ஓ அதுவா”? பழைய முன்மாதிரி பரீட்சை பேப்பர் எல்லாம் எடுத்து செய்வேன் ஏதாவது கணக்கு விளங்காவிட்டால் எனது அக்காவிடமும் கேட்பேன்” என்றான் அவன்.
”ஓ உங்களுக்கு அக்கா இருக்கின்றா” அதனால் நல்லது என,
எனக்கு யாரும் இல்லை ஏதும் விளங்காவிட்டால் யாரிடமும் கேட்கவும் முடியாது” என்று வருந்திய நிலாவை பார்க்க விபுவுக்கு கவலையாக இருந்தது.
”ஏன் இந்த கவலை? நான் சொல்லிக்கொடுக்கின்றேன்” என்றான் அவன்
”ஓ சத்தியமா செய்வீர்களா? சொல்லிக் கொடுப்பீர்களா?” என்று ஆவலாக கேட்டாள் நிலா.
”செய்யாததை சொல்ல மாட் டேன்” என்று உறுதியாக கூறிய ஆணின் குரலில் சட்டென்று தடுமாற ”சரி சரி” என்று தலையாட்டி வைத்தாள் நிலா.
சரி நாம் போகலாமா? இருவரும் தாமதமாக போக நல்ல நக்கல் இருக்கு” என்று சொல்லியபடி வேகமாக கிளம்பினான் விபு.
”இருக்கட்டுமே அதனால் என்ன” ?என்ற அவளது குரல் காற்றில் மட்டுமே தேய்ந்து மறைந்தது.
வகுப்பறைக்கு சென்ற நிலாவின் விழிகள் விபுவை நோக்கின. அவனோ மிக உன்னிப்பாக கவனித்துக்கொண்டு இருந்தான்,
”ஓய் என்னை கொஞ்சம் பாரேன்” என்று அவளது விழிகள் கெஞ்சின.
”எதுவும் முக்கியமில்லை”என பாடமே கண்ணாக இருந்தான் அவன்.
தொங்கிய முகத்துடன் தனது இடத்துக்கு வந்த நிலாவின் காதுக்குள் ”எதற்கு விபுவை இப்படி பார்க்கின்றாய்?” அவன் வேறு ஒருத்தியை நேசிப்பது தெரியாதா? என்று ரகசியம் பேசினாள் தோழி நிவி.
”என்னடி சொல்கின்றாய்? விபு வேறு ஒருத்தியை நேசிக்கின்றதா எனக்கு தெரியாதே” என்று கூறும்போதே நிலாவின் குரல் தழுதழுக்க தொடங்கியது.
மதிய இடைவேளையின் போது மரத்தடியில் கூடிய நண்பர்களுடன் விபு நின்றுகொண்டு இருந்தான். அருகில் இருந்த சுமன் ”என்னடா மச்சி நிலவு அருகில் வருகின்றது போல” என்று கிண்டல் செய்தான். ”இல்லையே ட எதற்கு அப்படி கேட்கின்றாய்”? என்று சிறு வியப்புடன் கேட்டான் விபு.
”காலையில் உன்னையே வைத்த கண் வாங்காமல் நிலவு நோக்கியதே”அதுதான் கேட்டேன் என்று சுமன் சொல்ல “அப்படியா” என்று ஆச்சரியப்பட்டான் விபு.
தூரத்தில் நின்ற நிலாவை நோக்கி அவன் கண்கள் விரைந்தோடியது.
நிலா அழகிய தேவதை. அவளை எப்போதும் விபுவுக்கு பிடிக்கும். முதல் முதல் அவளை கண்ட போதே ஆணுக்கான வயதில் மனதில் காதலை வளர்த்து இருந்தான் அவன்.
தூரத்தில் இருந்து அவளை ரசிக்க முடிந்த அவனுக்கு அவளை நெருங்கும் துணிவு ஏற்படவே இல்லை. அவனது காதல் அவனது நண்பர்களுக்கு ஏற்கனவே தெரிந்து இருந்தது. தமக்குள் பேசி சிரிக்கும் அவனது நண்பர்கள் விபுவின் காதலை பற்றி வகுப்பறையில் யாருக்கும் கூறிடவில்லை.
நண்பர்களின் கூக்குரலுக்கிடையில் காதை செவிடாக்கும் ஓசையாக வானத்தில் ”கிபீரின்” சத்தம் ஒலித்தது. ”ஐயோ இன்று என்ன நடக்க போகின்றதோ” என்று பயந்த ஆசிரியர்கள் மாணவர்களை பதுங்கு குழிக்குள் ஓடுமாறு கூக்குரலிட்டனர். பயத்தில் சிதறி ஓடிய மாணவர்களுக்கிடையில் நிலாவை நோக்கி ஓடினான் விபு.நிலாவும் விபுவை நோக்கியே ஓடிவந்துகொண்டு இருந்தாள். ”விபு விபு” என்று கூவிய அவளது ஓசை அவனுக்கு கேட்டுக்கொண்டே இருந்தது. விபு எனக்கு பயமாக இருக்கு ஏதாவது நடந்துவிடுமா? என்று கண்கலங்கினாள் நிலா
”ஓய் லூசாடி நீ” ஏதும் நடக்காது இவர்கள் சும்மா சுத்தி விட்டு போய்விடுவார்கள் நீ பதுங்குகுழிக்குள் இரு வெளியில் வராதே என்று கூறிக்கொண்டு அவளை பதுங்குழிக்குள் தள்ளினான் விபு.
”ஏய் நீ எங்கே போகின்றாய்”? என்று கூவிய நிலாவின் காதில் ”உன்னை விட்டு எங்கும் போகமாட்டேன் நீ என் உயிரோடு” என்றான் விபு.
ஆச்சரியத்தில் விழிகள் பிதுங்க ”என்னடா சொல்கின்றாய்” என்று கண்ணில் காதல் பொங்க கேட்டாள் நிலா.
”அடியே திருடி, நீ தான் என்னை திருடி வருடங்கள் மூன்றடி” இன்றுதான் நீ உணர்ந்தாய் போல என்று மகிழ்ச்சி ஆர்ப்பரிப்பில் சிரித்தான் விபு.
அவனது சிரிப்பில் மயங்கிய நிலா அவனது அழகிய உதட்டில் கண்கள் நிலைகுத்தி நிற்க சிலிர்த்துக்கொண்டாள்.
இந்த பார்வைதான் ரதியின் பாணமோ என்று சிரித்த விபு மெதுவாக நாக்கு குழற தொடங்கினான். ”டேய் என்னடா எதனால் உனக்கு நாக்கு தடுமாறுகின்றது என்று கேட்டபடி பதுங்குழிக்குள் இருந்து வெளியில் வர துடித்த நிலாவை வெளியே வராதபடி அவனது கரங்கள் தள்ள அப்படியே மயங்கி சரிந்தான் விபு…