இன்றைய தினம் சமூக வலைத்தளங்களில் ஒரு கொதிநிலை இருந்ததைக் காண முடிந்தது.
நிலத்தில் உள்ளவர்களும் புலத்தில் உள்ளவர்களும் இயக்க வேறுபாடு இன்றி கடுமையான ஆட்சேபனைகளை வெளியிட்டுள்ளதைக் காண முடிந்தது.
யாழ் நாகவிகாராதிபதியின் அமரத்துவம் அடைந்த உடலுக்கான இறுதிக் கிரியைகள் யாழ் முற்றவெளியில் நடந்தது.
இந்த நிகழ்வே சமூக வலைத்தளங்களிலும் இணைய தளங்களிலும் கொதி நிலையில் பேசுபடு பொருளாக இருந்தது.
இன்றைய தினம் பணி முடிந்து பஸ்ஸில் வந்து கொண்டிருந்த போது ஓர் நண்பர் இது போன்ற பல நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டி மீண்டும் ஒரு ……………………………………………………………………………. உருவாகுவதற்கான ஆத்திரமூட்டல்கள் நடைபெறுகிறது. மீண்டும் வரப் போகிறது என்றார்.
அவருக்குச் சொன்னேன் மீண்டும் அந்த நிலை வரவே வராது .
ஏன் என்றார் சமூக உளப்பாங்கு மாற்றமே இதற்கான காரணம் என்றேன்.
அடேல் பாலசிங்கம் எழுதிய Will to freedom எனும் நூல் அன்ரன் பாலசிங்கத்தால் சுதந்திர வேட்கை என்ற பெயரில் மொழி பெயர்க்கப்பட்டு தமிழில் 2003 இல் வெளியாகியது.
அதில் அவர்களது போர்க்கால அனுபவங்கள் பல பதிவிடப்பட்டிருந்தது.
ஓரிடத்தில் குறிப்பிடுகின்றார் ” 1987 ஒக்ரோபரில் இந்தியப் படைகளுடன் விடுதலைப் புலிகள் போரைத் தொடுத்தனர். அப்போது தலைவர் பிரபாகரன் தனது உறுப்பினர்களுடன் சண்டையிட்டபடியே முல்லைத்தீவை நோக்கிச் சென்று விட்டார்.
அவரது மனைவி மதிவதனி குழந்தைப் பருவத்தில் இருந்த தமது இரு பிள்ளைகளுடன் நல்லூர் கந்தசுவாமி கோயிலில் இடம் பெயர்ந்து இருந்த பல்லாயிரக் கணக்கான மக்களுடன் கலந்து இருந்தனர்.
அப்படி இருந்த மக்களில் குறைந்தது 100 பேராவது தலைவரின் மனைவியைத் தெரிந்தவர்களாக நிச்சயமாக இருந்திருப்பார்கள்.
ஆனால் ஒருவருமே அவர்களை இந்தியப் படையினரிடம் காட்டிக் கொடுக்கவில்லை.
இந்தியப் படைகள் நல்லூர் பிரதேசத்தைக் கைப்பற்றி மக்களை வீடுகளுக்கு செல்ல அனுமதித்த போது இவர்களும் நிச்சயமாக சோதனைக்கு உட்பட்டே சென்றிருப்பார்கள்.
யாருமே இவர்களைக் காட்டிக் கொடுக்கவில்லை. பின்னர் இவர்கள் தமது விசுவாசிகள் மூலமாக பாதுகாப்பாக முல்லைத்தீவுக்கு தலைவரிடம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இங்கு நான் விடுதலைப் புலிகள் ஆதரவாளர் என்ற கருத்து நிலையிலிருந்து பதிவிடவில்லை.
அன்றைய மக்களது சமூக ஒற்றுமை உளப்பாங்கு எவ்வளவு தூரம் விசுவாசமாக இருந்தது என்பதையே குறிப்பிட வருகிறேன்.
அன்றைய நாளது சமூக ஒற்றுமை உணர்வு நிலை இன்றைய மக்களிடம் இருக்கிறதா?
இல்லை. இப்படியான நிலையில் நீங்கள் கூறிய அது வரவே வராது.
வரலாறு எமக்கு கற்றுத் தரும் பாடங்களை வைத்து தான் வாழ்வியல் குறித்த தீர்மானங்களை எடுக்க வேண்டும்.
சுதந்திர வேட்கை நூலில் கருணா குறித்த தனியான பதிவு இருந்ததால் 2004 மார்ச் மாதம் கருணா பிரிந்த உடனேயே அந்த நூல் பொது சமூக நீரோட்டத்திலிருந்து மீளப் பெறப்பட்டு விட்டது.
இன்றைய நாளில் உள்ளுராட்சி தேர்தலுக்காக படும் அடிபாடுகள் எமக்கு சொல்லித் தரும் சேதிகள் ?