பிரிந்து வாழும் தம்பதி சேர வேண்டுமா? கூடாரவல்லி ஆண்டாளை தரிசியுங்கள்!
(மார்கழி 27-வது நாள்) கூடாரவல்லி என்று சிறப்பித்துக் கூறப்படும் நாள்.
இந்த நாளில் குறிப்பாக வைஷ்ணவர்கள், சிறப்பாக நெய் வடியும் பாலில் செய்த ‘சர்க்கரைப் பொங்கல்’ எனும் அக்காரவடிசல் செய்து வழிபடுவர்.
ஆண்டாள் பிறந்த ஸ்ரீ வில்லிபுத்தூர், ரங்கமன்னார் எனும் அரங்கனின் ஸ்ரீ ரங்கம், ஸ்ரீ பெரும்புதூர் போன்ற ஊரில் பிறந்தவர்கள் வைணவர்கள் அல்லாத சிலரும் கூட இதைச் மரபு வழியாக வருகிறார்கள் காரணம், கோதைநாச்சியார் பாடிய இந்த 27-வது திருப்பாவைப் பாசுரம்தான்.
ண்டாள் அருளிச் செய்த முப்பது பாடல்கள் கொண்ட திருப்பாவையை ஸ்ரீ கிருஷ்ணருக்கு உகந்த மார்கழி மாதம் அதிகாலைப் பொழுதில் பாடி,
27ம் நாள் “கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா” எனும் கீழ்கண்ட பாடலை பாடி, “மூடநெய் பெய்து முழங்கை வழி வார” என்றபடி,
பெருமாளுக்கு நெய் நிறைந்த அக்காரவடிசல் நிவேதனம் செய்து அன்னதானம் செய்வது நலமளிக்கும்.
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா! உன் தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள் வளையே தோடே செவிப்பூவே
பாடகமே யென்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.
முத்தான முப்பது:
திருப்பாவையின் முதல் பத்து பாடல்களில் தன் தோழியரை எழுப்பிய ஆண்டாள், பதினோராவது பாடல் முதல் வாயில் காப்போன், நந்தகோபன், யசோதை, பலராமன் என்று அனைவரையும் எழுப்பி 18-ஆவது பாடலில் கண்ணனுடன் துயிலிருக்கும் நப்பின்னைப் பிராட்டியையும் எழுப்பி 19 -22 பாடல்களில் கண்ணனைத் துயில் எழுப்புகிறாள்.
முதல் பாட்டு (பாவை) நோன்பு ஆரம்பிக்கும் முன் அதன் பலனை எடுத்துக் கூறுவது இரண்டாம் பாட்டு, நோன்பு விதிகளைக் கூறுவது அடுத்த எட்டு பாடல்கள் அஷ்டமஹா சித்திகளை எழுப்புவதுதான்.
23-ம் பாடல், கண்ணன் சிங்கம் போல எழுந்து வந்து சிங்காசனத்தில் அமர்ந்ததைக் கூறுகிறது.
அப்படியானால் இனிமேல் கண்ணனைத் துயில் எழுப்பத் தேவையில்லை. சுப்ரபாதம் முடிந்துவிட்டது. கண்ணன் அலங்கரித்து வந்துவிட்டான்.
அவனை, நாம் வந்த நோக்கத்தை அவனே அறிந்து அருளும்படிப் பணிக்கிறாள், ஆண்டாள். 24-ம் பாடல், அர்ச்சனை (போற்றிகள்).
25-ம் பாடல், தூப-தீபம். நெருப்பை ஒளித்து வைத்தால் புகையும்; இந்த பாட்டில், கண்ணனை ஆயர் பாடியில் ஒளித்து வளர்த்தால் அவன், அங்கே ஒளிந்து கொள்ளாமல், கம்சன் வயிற்றில் நெருப்பாக மாறி ஒளிந்து கொண்டு விடுகிறான்.
அதுதான் தூப-தீபம். 26-ம் பாடல் வாத்திய முழக்கம். தூப-தீபம் முடிந்து நைவேத்யம் படைப்பதை அனைவருக்கும் அறிவிக்க மணி முதலிய வாத்தியங்கள் முழங்க வேண்டும்.
27-ம் பாடல் தான் நைவேதயம்; என்ன படைக்கிறார்கள் – பால்சோறு மூட நெய் பெய்து. அதை கண்ணன் முழங்கை வழிவாரக் கூடியிருந்து (வயிறு) குளிர உண்ண வேண்டுகிறாள். 28-ம் பாடல் பிழைப் பொருத்தருள வேண்டுதல்சா.
சாதாணமாக பூஜைகளில் “யதக்ஷர பதப்ரஷ்டம்” “மந்த்ர ஹீனம் க்ரியா ஹீனம் பக்தி
ஹீனம் ஸுரேஸ்வர: யத் பூஜிதம் மயா தேவ பரிபூர்ணம் ததஸ்துதே” என்ற ஸ்லோகத்தைக் கூறுவர்.
அதாவது மந்திரங்கள் சொல்வதில் ஏற்பட்ட குறைகளும் கிரியைகள் செய்வதில் ஏற்பட்ட குறைகளும், பக்தி ஈடுபாட்டில் ஏற்பட்ட குறைகளும் கடவுளை பூஜிப்பதால் பரிபூர்ணமாகட்டும் என்பதே அதன் பொருளாகும்.
அதே போல் ‘சிறுபேர் அழைத்தனவும் சீறியருளாதே’ – கண்ணன் சீறுவது கூட ஆண்டாளுக்கு அருள்தான் – என்று பொறுத்தருள வேண்டுகிறாள். 29-ம் பாடல் திரும்பவும் வணங்குதல் (புனர் பூஜை என்று வடமொழியில் கூறுவார்கள். பூஜையை ஒரே நாளில் முடித்துவிடாமல் தினமும் தொடர வேண்டும் என்பதற்காக அடுத்த நாள் காலையில் செய்வார்கள்).
ஆண்டாள் ‘எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உற்றமேயாவோம் உமக்கே யாம் ஆட்செய்வோம்’ என்று அடுத்த தினம் மட்டுமல்லாமல் அடுத்தடுத்தப் பிறவிகளிலும் தொடர்ந்து வணங்குவதை உறுதிச் செய்கிறாள்.
30-வது பாடல் பலச்ருதி – அதாவது பூஜையினால் அடைந்த/அடையும் பலன்களைக் கூறுவது. என்ன பரிசு – ஈரிரண்டு மால்வரைத்தோள் செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் – என்று அவன் அருளைத் தவிர பெரிய பரிசு தனக்கு எதுவுமில்லை என்று மீண்டும் உறுதி செய்கிறாள் ஆண்டாள்.
27-வது நாள் இவ்வாறு நைவேத்யம் படைப்பதால் “கூடாரை வெல்லும்” என்ற அந்த பாசுரத்தின் பெயராலேயே, இந்த நாள் கூடாரை வெல்லும் கோவிந்தனின் மனதுக்கு உகந்தவளான “கூடார வல்லி” கோதை நாச்சியார் பெயரால் வழங்கப் படுகிறது. இந்த நோன்பு நிறைவைக் கொண்டாடும் விதமாக இந்நாளில், பாலில் செய்த சர்க்கரைப் பொங்கலை நெய் விட்டுப் படைப்பர்.
ஜோதிட ரீதியாக கூடாரவல்லி:
ஜோதிட ரீதியாக கூடாரவல்லிக்கு குருவும் சுக்கிரனுமே காரக கிரகம் ஆகின்றனர். குருவும் சுக்கிரனும் ஜோதிடத்தில் நைசார்கிக சுபர்கள் ஆவர். அவர்கள் இருவரும் ஒருவருடைய ஜாதகத்தில் நல்ல நிலையில் அமைந்துவிட்டாலே வாழ்வில் கூடாதது என்பது கிடையாது எனலாம்.
திருமணம், குழந்தை பேறு, வசதி வாய்ப்பு , மகிழ்ச்சியான வாழ்க்கை இப்படி எது வேண்டுமானாலும் குரு மற்றும் சுக்கிரனின் அருள் இன்றி நிறைவேறாது.
தற்போது குரு பகவான் துலா ராசியில் வரும் கடந்த செப்டம்பர் 12 முதல் துலாராசியில் ப்ரவேசித்து தனது பயணத்தை தொடர்வதால் இந்த ஆண்டு ஒரு சிறப்பான வருடமாகும்.
அதன் காரணமாகவே ஸ்ரீ ரங்க நாதனின் ப்ரியமானவளான அன்னை காவேரிக்கு காவேரி ஆற்றில் புஷ்கரம் கொண்டாடப்பட்டது.
தற்போது குருபகவான் ஜெனரஞ்சக ராசியான துலாராசியிலும், சுக்கிர பகவான் வெற்றியை தரும் தனுர் ராசியிலும் வீடு மாறி பரிவர்தனை செய்து
யாரெல்லாம் அக்காரவடிசலை விரும்பி உண்பார்கள்?
கூடாரவல்லியின் சிறப்பு உணவான அக்காரவடிசலுக்கும் குருவும் சுக்கிரனும்தான் காரகர். ஆம்! நெய் மற்றும் இனிப்பின் காரகர் குரு பகவான். சுவையான இனிப்பு உணவிற்க்கு சுக்கிரனும் காரகர் தான்.
கால புருஷ ராசிபடி குரு பகவான் ஒன்பது மற்றும் பன்னிரெண்டாம் வீடுகளான தனுசு மற்றும் மீன ராசிகளுக்கு அதிபதிகளாக விளங்குகிறார். மேலும் சந்திரனின் வீடான கடகத்தில் உச்சமாகிறார்.
சுக்கிர பகவான் போஜன ஸ்தானம் எனப்படும் இரண்டாம் வீடான ரிஷபம் மற்றும் கணவன் – மனைவி, நண்பர்கள், பொதுத்தொடர்பு, கூட்டாளிகள் ஆகியவர்களை குறிக்கும் ஜென ரஞ்சக ராசியான துலாராசிக்கும் அதிபதியாவார்.
1.தனுசு மற்றும் மீனத்தை லக்னமாகவோ சந்திர ராசியாகவோ கொண்டவர்கள்.
- தனுசு மற்றும் மீனத்தை போஜன ஸ்தானமாக கொண்டவர்கள்.
3.ரிஷபம், துலாம் ராசிகளை லக்னமாகவோ, சந்திர ராசிகளாகவோ கொண்டவர்கள்.
- ரிஷபம் மற்றும் துலா ராசிகளை போஜன ஸ்தானமாக கொண்டவர்கள்
5.எந்த ராசி லக்னமாக இருந்தாலும் லக்னத்தில் அல்லது போஜன ஸ்தானமான இரண்டாம் வீட்டில் குருவோ சுக்கிரனோ இருவரும் சேர்ந்தோ நிற்கபெற்றவர்கள்.
- குருவும் சுக்கிரனும் திரிகோணத்தில் ஆட்சி/உச்சம் பெற்றவர்கள்
- குரு பகவான் ஆட்சி உச்சம் பெற்று லக்னம் மற்றும் சந்திர கேந்திரங்களில் நின்று பஞ்சமகா புருஷ யோகங்களில் ஹம்ச யோகத்தை பெற்றவர்கள்.
- சுக்கிர பகவான் ஆட்சி உச்சம் பெற்று லக்னம் மற்றும் சந்திர கேந்திரங்களில் நின்று பஞ்ச மகா புருஷ யோகங்களில் மாளவியா யோகம் பெற்றவர்கள்
- குரு ஆத்ம காரகனாகவும் சுக்கிரன் அமாத்ய காரகனாகவும் பெற்றவர்கள்.
10.குரு ஆத்மகாரகனாகி காரகாம்சத்திற்கு இரண்டில் சுக்கிரன் நிற்க பெற்றவர்கள்.
- சுக்கிரன் ஆத்ம காரகனாகி காரகாம்சத்திற்கு இரண்டில் குரு நிற்க பெற்றவர்கள்
- குருவும் சுக்கிரனும் எந்த விததிலேனும் பரிவர்தனை பெற்றவர்கள்.
இந்த கூடாரவல்லி நாளில் திருமண பாக்கியம் அமையாமல் இருப்பவர்கள் தகுந்த கணவன் மனைவியுடன் கூடவும், சண்டை போட்டு பிரிந்து வாழும் கணவன் மனைவி கூடவும், வேலை காரணமாக கணவனும் மனைவியும் படுக்கையில் இணைய முடியாமல் தவிப்பவர்கள் கூடவும், வியாபரத்தில் பிரச்சனை தரும் கூட்டாளிகள் இணக்கமாகவும், அனைத்து பகைவர்களும் நட்பு பாராட்ட விரும்புபவர்களும் அன்னை ஆண்டாளை வணங்குவது சிறப்பாகும்.
என்ன நேயர்களே! “ஸ்வீட் எடு-கொண்டாடு” என்பது போல் நாமும் குருபகவானின் நாளில் பாவை நோன்பினை கடைபிடித்து சுக்கிரனின்
அதிதேவதையான மஹாலக்ஷ்மியின் அம்சமான ஆண்டாளை வணங்கி குரு-சுக்கிர இணைவான அக்காரவடிசலை நைவேத்தியம் செய்து அனைவருக்கும் வழங்கி நம்முடன் கூடாமல் இருப்பவர்களுடன் கூடலாம் அல்லவா?