சந்திர ஒளி குழைத்து
மந்திர புன்னகை நிறைத்து
மதிமயங்கும் மாலை வேளை
மலர்களின் எழில் ஊற்றி வார்த்த
மங்கள அழகின் உருவே…
சிந்தையை பந்தாடும்
அழகோவியப் பாவையே…
கறுப்பு வானவில்லும் – உன்
புருவத்தை மெருகேற்ற,
வெள்ளை முகிலும் நீந்தும்
கறுப்பு நிலா உன் விழியில்…
குட்டிச் சூரியன் போல்
வட்டப் பொட்டும் ஒளிரும்
வகையாக எழிலாடும்
நெற்றியின் மையத்திலே !
கொவ்வைப் பழமென்று
கிளிகளும் மருண்டுவிடும்
உருண்டு திரண்டு பழுத்த
தேன் கசியும் செவ்வுதடு கண்டு !
தங்கங்களும் தோற்றுவிடும்
பவளம் போல் மின்னும்
கன்னங்களோடு போட்டியிட்டால் !
இத்தனை மொத்த அழகும்
இதயத்தை இதமாகத் தாக்க
சித்தமும் பறி போகிறதே…
சிந்தனையும் கவி பாடியதே !
– வேலணையூர் ரஜிந்தன்.