அமெரிக்க கண்டம் , ஐரோப்பிய கண்ட நாடுகளில் வசிக்கும் நீக்ரோ இனமக்கள் தமது ஆபிரிக்க வழி வேர்களைத் தேடிச் சென்ற பயணங்கள் இலக்கிய வடிவங்களாக வந்துள்ளன.
சினிமாப் படங்களாகவும் வந்துள்ளன.
எமது ஈழத்து உறவுகள் இலட்சக் கணக்கில் போரின் வெம்மையால் புலம் பெயர்ந்து உலகின் நாலா திசைகளிலும் வசிக்கின்றனர்.
அவர்களது இரண்டாவது தலைமுறை நான் எனது தாய் தந்தையருடன் அவர்களது நாட்டிற்கு போனேன். வாருங்கள் நாங்களும் பார்ப்போம் என தமது பிள்ளைகளுடன் தாய் மண்ணிற்கு வரும் காலம் வரும்.
அவர்கள் புலம் பெயர் வாழ்வில் மூன்றாம் தலைமுறையாக இருப்பார்கள்.
தமது தாய் தந்தையர் அல்லது பாட்டன் பாட்டி பரம்பரை எவ்விதம் வாழ்ந்தார்கள் என தமது வாழ்வியல் சுவடுகளைப் பார்க்க ஆசைப்படுவார்கள்.
தேட முற்படுவார்கள்.
அப்போது அவர்கள் வாழ்வியலைப் பார்க்க தமது இனத்தின் வேர்களைப் பார்க்க நாம் என்ன செய்து வைத்துள்ளோம்.
புலம் பெயர்ந்து சென்ற எமது இரண்டாம் மூன்றாம் தலைமுறை எமது நாட்டை நோக்கி மீள வரும் தூண்டுதலுக்கு நாம் என்ன வைத்துள்ளோம்.
என்ற கேள்வி எழுகிறது.
எமது வாழ்வியல் முறைகளை பழைய கால
திண்ணையுடன் கூடிய மண் வீடு, நாற்சார வீடு, குடிசை வீடு, அம்மி , குழவி,ஆட்டுக்கல்,திருகைக் கல், உரல் உலக்கை, ஆடுகால், துலா மிதித்தல் ,சங்கடப் படலை, சுமைதாங்கி, மாட்டு வண்டில், குல்லா,பாய் மரக் கப்பல் போன்றவற்றை உள்ளடக்கிய ஓர் பாரம்பரிய கிராம அமைப்பு நாம் உருவாக்கி வைத்திருக்க வேண்டும்.
1980 களில் உருக் கொண்ட போரால் வாழ்ந்த பங்கர் வாழ்க்கை, சைக்கிள் டைனமோ சுற்றி றேடியோ கேட்டது. போன்ற போர்க்கால நினைவுகள்,
கிளாலி, கொம்படி , ஊரியான் பாதை பயணச் சுவடுகளின் மாதிரிகள் .
சிலேட், ஊற்று மைப் பேனா போன்றவை.
இவற்றை உள்ளடக்கிய மாதிரிக் கிராம அமைப்பு ஒன்றை நாம் உருவாக்கி எமது இனத்தின் வரலாற்று அரும் பொருள் காட்சியகம் ( நூதனசாலை ) பேணல் வேண்டும்.
யாழ் பல்கலைக் கழகத்தின் சுற்றுலாத் துறைசார் விரிவுரையாளர் ஒருவரது திட்ட முன்மொழிவு ஒன்றில் இன்றைய தினம் கலந்து கொண்டேன்.
அவரது மதிப்பீட்டின் படி 100 மில்லியன் இலங்கை ரூபா இன வரலாற்று அரும் பொருள் காட்சியகத்திற்குப் போதுமானது.
புலம் பெயர் வாழ்வில் விடுபட்டுப் போக உள்ள ஒரு தலைமுறையிற்கு தாய் மண் மீதான ஈர்ப்பை உருவாக்க நாம் இது போன்ற கட்டமைப்பு ஒன்றை உருவாக்கியே தீர வேண்டும்.
தாயக வாழ்வின் சுவடுகளை தலைமுறைகளுக்கு கையளிக்கும் கடமையை செய்தே ஆக வேண்டும்.
நண்பர்களே இப் பதிவு தொடர்பான உங்களது கருத்துக்களைப் பதிவிடுங்கள்.