2011ஆம் ஆண்டு பேச்சுக்கு என்னைத் தனது மாளிகைக்கு அழைத்து மிரட்டும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நடந்து கொண்டார். அவர் மட்டுமல்ல, அங்கிருந்தவர்கள் எல்லோரும் என்னைப் பயமுறுத்தும் வகையிலேயே செயற்பட்டார்கள். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
திருகோணமலையில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
பேச்சுக்கு கூட்டமைப்பை அழைத்தபோதும் கூட்டமைப்பு பேச்சுக்கு வரவில்லை என்று மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணத்தில் வைத்துத் தெரிவித்திருந்தார். அதற்குப் பதில் வழங்கியுள்ள கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்ததாவது-,
இது தொடர்பில் மக்கள் உண்மையை அறிந்து கொள்ளவேண்டும். 2009ஆம் ஆண்டு போர் முடிந்த சில நாட்களின் பின்னர் ஐ.நா. பொதுச் செயலர் இலங்கைக்கு வந்தார். ஐ.நா. பொதுச் செயலருக்கு மகிந்த வாக்குறுதிகளை வழங்கினார்.
பொறுப்புக் கூறல் சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்படும், அரசியல் தீர்வு ஏற்படுத்தப்பட்டு அது நிறைவேற்றப்படும் என்று கூறியிருந்தார். அவை நிறைவேற்றப்படாத காரணத்தால் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் அதை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தார்கள். மகிந்த ராஜபக்ச இந்தியாவுக்கு அழைக்கப்பட்டு, இந்திய தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் இது தொடர்பில் பேசியிருந்தார்.
அமெரிக்காவின் இராஜாங்க உதவிச் செயலர் ரொபேர்ட் ஓ பிளேக் இலங்கைக்கு இந்தக் காலத்தில் வந்திருந்தார். அவர் என்னைச் சந்திக்க வேண்டும் என்றார். ஒரு நாள் காலையில் சந்தித்தேன். அப்போது பிளேக் கூறினார், சம்பந்தன் உங்களுடைய அரச தலைவர் (மகிந்த) ஒரு நாளும் மாறமாட்டார். அவரை நான் நேற்றுப் பின்னேரம் சந்தித்தேன்.
பழைய பாணியில்தான் பேசுகின்றார். அவர் மாறுவார் என்று நான் நினைக்கவில்லை என்று ரொபேர்ட் ஓ பிளேக் கூறினார். நான் பிளேக்குடன் பல விடயங்கள் சம்பந்தமாகப் பேசினேன். எமது நிலைப்பாட்டை அவருக்குத் தெளிவாகக் கூறினேன். சந்திப்பை முடித்துக்குக் கொண்டு வந்தேன்.
அன்று மாலை அப்போதைய அரச தலைவராக இருந்த மகிந்த என்னை அலைபேசியில் அழைத்தார். சம்பந்தன் இன்று நீங்கள் பிளேக்கைச் சந்தித்தாகக் கேள்விப்படுகின்றேன். என்ன பேசினீர்கள் என்று கேட்டார். பேசவேண்டிய எல்லா விடயங்களையும் பேசினேன் என்று கூறினேன். அதன் பின்னர் மகிந்த, அவரை (பிளேக்கை) நான் நேற்றுச் சந்தித்தேன்.
அரசியல் தீர்வு சம்பந்தமாகப் பேசினார். அப்போது நான் பிளேக்கிடம் கூறினேன், அரசியல் தீர்வு சம்பந்தமான விடயங்களில் உங்களின் உதவி தேவையில்லை. அதனை எங்களுக்கு கண்டுகொள்ளத் தெரியும் என்று பிளேக்கிடம் தெரிவித்ததாக என்னிடம் சொன்னார்.
அந்தக் காலத்தில்தான் அமெரிக்கா ஒரு முடிவு எடுக்க ஆரம்பித்தது. மகிந்த தரப்புக்கு ஒரு பாடம் படிப்பிக்கவேண்டும் என்ற முடிவை எடுத்தது.
2010ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் மகிந்தவுக்கும் எனக்கும் இடையில் தனிப்பட்ட சந்திப்பு இடம்பெற்றது. சுமார் 40 நிமிடங்கள் அவரிடம் நான் பல விடயங்களைப்பற்றி பேசினேன். குறிப்பாக மக்களை மீள்குடியமர்த்துவது தொடர்பில் பேசினேன். அமைதியாகப் பொறுமையாக எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தார். அரசியல் தீர்வு காணப்படும் என்று நீங்கள் வாக்குறுதி கொடுத்திருக்கின்றீர்கள்.
அது நிறைவேற்றப்படவேண்டும். அதைக் காண்பதற்கு உங்களுக்கும் எங்களுக்கும் இடையில் பேச்சு நடத்தப்படவேண்டும் என்று கூறியிருந்தேன். ஒரு வார்த்தைகூட பதிலுக்கு மகிந்த பேசவில்லை.
தனது உதவியாளரை அழைத்து, ஜி.எல்.பீரிஸ் வெளியே இருக்கின்றார். அவரை வரச் சொல்லுங்கள் என்று கூறினார். ஜி.எல்.பீரிஸ் வந்ததும், சம்பந்தன் அரசியல் தீர்வு சம்பந்தமாக பேசுகின்றார். பேச்சை ஆரம்பிக்கவேண்டும் என்று சொன்னார்.
இது சம்பந்மாக அப்போதைய இந்தியத் தலைமை அமைச்சர் அவருடன் பேசியிருந்தார். எங்களுக்கும் அவர்களுக்கும் இடையிலான பேச்சு 2011ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பமானது. ஒருமித்த நாட்டுக்குள் அதிகாரப் பகிர்வு தொடர்பில் முதலாவது பேச்சு மேசையிலேயே நாங்கள் கூறியிருந்தோம்.
எழுத்துமூலமாக எங்கள் கோரிக்கைகளைக் கேட்டார்கள். சமர்ப்பித்தோம். மார்ச் மாதம் கொடுத்துவிட்டு அவர்களின் பதிலை நாங்கள் கேட்டோம். பதிலை தந்தால்தான் அடுத்துப் பேசலாம் என்றும் சொன்னோம்.
ஜூலை மாதம் வரையில் பதில் வழங்கவில்லை. ஓகஸ்ட் மாதம் நாம் அவர்களுக்குச் சொன்னோம், நான்கு மாதங்களாக நீங்கள் பதில் தரவில்லை. நாங்கள் பொறுமையாகக் காத்துக் கொண்டிருக்கின்றோம்.
நீங்கள் பதில் தராவிட்டால் என்ன செய்வது என்பது எங்களுக்குத் தெரியும். பேச்சு முடிவதற்குள் பதில் வேண்டும் என்று கேட்டோம். உங்கள் பதிலை தராமல் அடுத்த பேச்சுத் திகதியை நிர்ணயிப்பதை நாங்கள் விரும்பவில்லை என்று சொன்னோம். திகதி நிர்ணயிக்கப்படவில்லை.
அடுத்த நாள் காலை மகிந்த ராஜபக்ச என்னிடம், நீங்கள் பேச்சிலிருந்து வெளியேறிவிட்டீர்கள். தயவு செய்து நான் உங்களைச் சந்திக்க விரும்புகின்றேன். வாருங்கள் என்று அழைத்தார். நான் சென்றேன். பதில் தரவேண்டும். பதில் தராவிட்டால் பேச்சு நடத்துவதில் எந்தப் பயனும் இல்லை. எழுத்தில் எமது நிலைப்பாட்டைக் கூறியிருக்கின்றோம். அதற்குப் பதில் நீங்கள் எழுத்தில் தரவேண்டும் என்று நான் கூறினேன்.
பதில் தரமுடியாது என்றும், தந்தால் அது பல பிரச்சினைகளை உருவாக்கும் என்றும் மகிந்த சொன்னார். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசும், நாங்களும் பேசுகின்றோம். எங்கள் நிலைப்பாட்டை தெளிவாகச் சொல்லியிருக்கின்றோம். அதற்குப் பதில் வரவேண்டும். பதில் தரமுடியாது. என்னை மன்னிக்க வேண்டும் என்று மகிந்த சொன்னார்.
சரி உங்களுக்குப் பதில் தரமுடியாவிட்டால், 13ஆவது அரசமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் முனசிங்க அறிக்கை, சந்திரிகா அம்மையார் காலத்து தீர்வுத் திட்டம், தலைமை அமைச்சர் ரணில் காலத்து திட்டம், உங்களின் காலத்து அரசியல் தீர்வுத் திட்டம் ஆகியவை எழுத்தில் உள்ளன.
அவை பேச்சு மேசைக்கு வரவேண்டும். நீங்கள் பதில் தராவிட்டாலும், அவை பேச்சு மேசைக்கு வந்தால் பேச்சைத் தொடரத் தயார் என்று கூறினேன். நீண்ட விவாதத்துக்குப் பின்னர் அதனைச் செய்யத் தயார் என்று கூறினார் மகிந்த.
அதன் பின்னர் பேச்சு ஆரம்பமானது. பேசினோம். ஒரு விடயத்திலும் இணக்கப்பாடு இல்லை. டிசெம்பர் மாதம் வரை பேச்சு தொடர்ந்தது. பின்னர் பேச்சு ஒத்திவைக்கப்பட்டது. 2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மூன்று நாள்கள் பேச்சு திகதி நிர்ணயிக்கப்பட்டது. மூன்று தினங்களும் நாங்கள் பேச்சுக்குச் சென்றோம். அவர்கள் வரவில்லை. இதுதான் உண்மை.
தெரிவுக்குழு நியமித்து, தெரிவுக் குழுவுக்கு வருமாறு மகிந்த கேட்டார். என்னை நேரடியாகச் சந்தித்துப் பேசினார். தெரிவுக்குழுவுக்கு வருமாறு அவர் கேட்டார். நானும் நீங்களும் பேசி சில முக்கியமான விடயங்களில் ஓர் இணக்கத்துக்கு வரமுடியாமல் இருக்கின்ற சூழலில் நான் தெரிவுக்குழுவுக்கு வந்து என்ன பிரயோசனம். அங்கே என்ன நடக்கப் போகின்றது.
நீங்கள் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்களையும் தூண்டிவிட்டு எதிர்க்கச் சொல்லிச் சொல்வீர்கள். ஒன்றும் நடைபெறாது. நானும் நீங்களும் பேசி சில முக்கிய விடயங்கள் தொடர்பில் உடன்பாடு ஏற்படுமாக இருந்தால் நான் வரத் தயார் என்று மகிந்தவிடம் கூறினேன். இல்லையெனில் நான் வரமாட்டேன் என்றும் தெரிவித்தேன்.
சில வாரங்களின் பின்னர் என்னை மீண்டும் மகிந்த அழைத்தார். என்னைப் பயமுறுத்தும் வகையில் அவரது மாளிகையில் இருந்த எல்லோரும் என்னுடன் நடந்துகொண்டார்கள். தெரிவுக்குழுவுக்கு வராவிட்டால் உமக்கு ஆபத்து ஏற்படலாம் என்று சொன்னார். என்னுடைய கருத்தை நான் உங்களுக்குச் சொல்லியிருக்கின்றேன்.
நானும் நீங்களும் பேசி ஓர் ஒழுங்குக்கு வராவிட்டால் தெரிவுக்குழுவுக்கு வருவதில் என்ன பிரயோசனம். ஆனால், இந்த விடயம் சம்பந்தமாக நான் முடிவெடுக்க முடியாது. எனது கட்சி முடிவெடுக்கவேண்டும். எனது கட்சியின் முடிவை மீறி நடக்க முடியாது என்று மகிந்த தரப்பிடம் கூறினேன்.
தெரிவுக்குழு ஆரம்பிக்கப்படவில்லை. அதன் பின்னர் சில முயற்சிகள் நடந்தன. அதுவும் கைகூடவில்லை. அரசியல் கட்சி என்ற வகையில் எங்களால் முடிந்தவற்றை நாம் செய்தோம். இதை மகிந்த ராஜபக்ச மறந்திருக்க முடியாது.
எங்களுடைய மக்களுக்கு ஏற்பில்லாத தீர்வை நாங்கள் ஒருபோதும் ஏற்கமாட்டோம். எமது மக்களின் பிரச்சினைக்கு தீர்வாக அமையாத ஒரு தீர்வை நாங்கள் ஒருபோதும் ஏற்கமாட்டோம் – என்றார்.