ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்கவை உடனடியாக முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று கபே அமைப்பு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
பதுளை தமிழ் மகளிர் வித்தியாலயத்தின் அதிபரை மண்டியிட வைத்து அவமானப்படுத்திய ஊவா மாகாண முதலமைச்சர் பௌத்த பிக்குகள் மூவரை தாக்க முற்பட்டுள்ளதாக கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் குற்றம்சாட்டியுள்ளார்.
ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்கவின் அழைப்பொன்றின் பேரில் அவரது அலுவலகத்திற்கு சென்ற, பதுளை மகளிர் தமிழ் கல்லூரியின் அதிபர் பவானி ரகுநாதனை, முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க, அச்சுறுத்தியதுடன், முழந்தாளிட்டு மன்னிப்பு கேட்க வைத்துள்ளார்.
இந்த சம்பவத்தை கண்டித்து நாடு தழுவிய ரீதியில் போராட்டங்கள் இடம்பெற்றுவரும் நிலையில் இன்று ஊவாக மாகாண முதலமைச்சர் தொடர்புபட்ட மற்றுமொரு சம்பவத்தை நீதியும் – நியாயமுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பான கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் வெளியிட்டிருக்கின்றார்.
ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் மூன்று மாதங்களுக்கு முன்னர் தனது அலுவலகத்திற்கு அழைத்திருந்த பௌத்த பிக்குகள் மூவரை தாக்க முற்பட்டுள்ளதாக கீர்த்தி குறிப்பிட்டுள்ளார்.
மிகவும் பாரதூரமான இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்தாது பொலிசாரையும் கொண்டு மூடி மறைத்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ள கீர்த்தி தென்னகோன் பௌத்த மதத்தை பாதுகாப்பதற்காக எதனையும் செய்யத் தயார் என்று கூறும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தனது கட்சியான சுதந்திரக் கட்சியின் உறுப்பினரான சாமர சம்பத்தை எவ்வாறு ஊவா மாகாண முதலமைச்சர் பதவியில் தொடர்ந்தும் வைத்திருக்கின்றார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
பெண் அதிபரை முழந்தாளிட்டு அவமானப்படுத்தி தற்போது பௌத்த பிக்குகளையும் தாக்க முற்பட்டு அவமானப்படுத்தியிருப்பதால் ஊவா மாகாண முதலமைச்சரை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கீர்த்தி தென்னகோன் ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ளார்.