இலங்கை வரலாறும் ஈழத்தமிழர் நிலையும்,
இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன? கூடி வந்த குரங்கு ஆண்டால் என்ன?
என்பது ஈழத்தமிழர்களிடம் வாய்மொழியாக சொல்லப்படும் செய்தி. இந்த சொற்தொடர் எவர் ஆண்டாலும் எமக்கு எந்த நன்மையும் இல்லை என்பதாக இருக்கலாம், அல்லது அரசியல் நமக்கு தேவையற்றது என சொல்லலாம், அல்லது எங்களின் உழைப்பிலேயே நாம் வாழமுடியும் என்பதாக இருக்கலாம். ஆனால், ஒரு சில சிக்கல்களை தமிழ் மக்கள் அனுபவித்திருந்தாலும் விடுதலைப்புலிகளின் காலத்தில் மீட்கப்படும் விடுதலை எப்படி அமையும் என்று தமிழ்ஈழத்தில் நடைமுறையில் காட்டப்பட்டது. அதனை மக்களை சரிவர அனுபவிக்கவிடாமல் பல்வேறு தரப்பினரும் குழப்பிக்கொண்டே இருந்தனர். ஆறுதலாக இருந்து, நடுவு நிலையில் சிந்தித்துப்பார்த்தால், விடுதலைப்புலிகளால் மீட்கப்பட்ட விடுதலை எந்த அளவுக்கு எமக்கு நல்வாழ்வை வழங்கியது என்று புரியும். அதனை பின்னர் விரிவாக பார்ப்போம்.
இன்றைய சனநாயக அரசியல் என்பது சாதாரணமான ஒரு குடிமகனுக்கு பொருத்தம் அற்றது எனவும், உயிர் அச்சுறுத்தல் நிறைந்தது எனவும், பலத்த அரசியல் பின்னணி உள்ளவர்கள் மட்டுமே அரசியலில் இறங்கமுடியும் என்றும் உருவகப்படுத்தப்பட்டுவிட்டது. மக்கள்கூட அரசியல் பரம்பரை என்ற சொல்லை முழுமையாக நம்புகின்றனர். ஆனால் உண்மை அதுவல்ல. இது வெறும் கருத்துருவாக்கம் மட்டுமே. அந்நியர் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற நாடு ஒன்றில், ஒருவர் அரசியலில் இறங்கி வெற்றி பெற்றிருந்தால், அந்தக்குடும்பமே அரசியல் குடும்பம் என்று முத்திரை போடுகிறார்கள். ஆனால் நாட்டின் விடுதலைக்காக அவர்கள் எந்த ஒரு சிறிய பணியைக்கூட செய்திருக்கமாட்டார்கள். நாட்டுக்காக பணிசெய்தவர்கள் புறம் தள்ளப்பட்டிருப்பார்கள். இது தொடர்பாக மக்கள் சிந்திப்பதே இல்லை அல்லது மக்களை சிந்திக்கவிடுவதே இல்லை. மக்களின் சிந்தனையை திசை திருப்பவே சொந்தநாட்டில் இனங்களிடையே, மதங்களிடையே, மக்களிடையே குழப்பங்களை உருவாக்கிவிடுவதை வழிமுறையாக அரசியல்வாதிகள் கைக்கொள்கின்றனர்.
ஆற்றல் என்பது ஒவ்வொரு தனிமனிதனுக்கும் வேறுபட்டதாக இருக்கும். ஆனால் தந்தை ஒருவர் செய்யும் சுயதொழிலில் அந்தக்குடும்பமே பங்குபற்றகூடியதாக இருக்கும். உதாரணமாக தந்தை ஒரு கடை வைத்திருந்தால், அந்தக்கடையில் அவரின் முழுக்குடும்பமே தொழிலாற்ற முடியும். அதே போன்றதுதான் இன்று அரசியலும். மன்னர் ஆட்சியும் சரி, இன்றைய சனநாயகமும் சரி, பொதுவுடமையும் சரி இந்தவழியிலேயே பயணிக்கின்றன. தந்தை அரசியலில் இறங்கிவிட்டால் போதும், தனது அறிமுகத்தை வைத்து மனைவி, பிள்ளைகள் மற்றும் சுற்றத்தார் என எல்லோரையும் அரசியலில் இறக்கிவிடுவார். காரணம் ஒருநாட்டின் குடியுரிமை மட்டும் இருந்தால் அவர் அரசியலில் இறங்கலாம் என்கிறது மக்களாட்சி. அவருடைய கல்வித்தகைமை, அனுபவம், திறமை, கொள்கை, மக்கள்சேவை என்று எதுவும் ஆராயப்படமாட்டாது. ஆனாலும் அரசியலில் இறங்குபவருக்கும், அவரை சார்ந்தவர்களுக்கும் நல்ல பேச்சாற்றல் இருத்தல், அல்லது நன்கு உரையாற்றக்கூடியவர்களை கூட வைத்திருத்தல் மேலதிக சிறப்பு தகைமை எனலாம். இதுவே இன்றைய சனநாயகம் என்று எமக்கு காட்டப்படுகிறது. அடுத்து ஒருவர் தேர்தலில் வென்று அரசியல் தலைவர் ஆகிவிட்டால் எதையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் மக்களால் வழங்கப்பட்டதாக முடிவாகிறது. மக்களின் ஆணை பெற்ற ஒருவர் எதையும் செய்யும் தகுதி உடையவராக மாறுகின்றார். அது கல்வி கற்றோர், நீண்ட கால அனுபவம் மிக்கோர் என்று எவரையும் தனக்கு கீழே கையாளமுடியும். இந்த இடத்தில் ஒன்றை சிந்திக்கலாம் அன்றைய மன்னர்கள்கூட தங்கள் ஆட்சியை பிள்ளைகளிடம் கையளிக்கும் போது அமைச்சர், குலகுரு, ஆலோசனையாளர்கள் என்று பல வழிகாட்டிகளை புதிய அரசனுக்கு வழங்கிவிட்டு செல்வார்கள். மேலும் கல்விகற்று, தங்களை தகமைப்படுத்தி செய்யும் தொழில்களுக்கு பரம்பரை தொழில் எனும் பதம் பொருந்தாது. உதாரணமாக வைத்தியனின் மகன் வைத்தியனாக வரமுடியாது. அவன் படித்து தகைமை பெற்றால் மட்டுமே அத்தொழிலை அடையமுடியும். தந்தை வைத்தியன் என்று மகனுக்கு வைத்தியதொழில் கொடுக்கமாட்டார்கள்.
மன்னர் ஆட்சிக்காலங்களில் மன்னரின் பிள்ளைகளே ஆட்சிக்கு வரலாம் என்று கொள்கை வகுக்கப்பட்டிருந்தது. அதன்படி தங்களது ஆட்சியுரிமை போகவிடாது காப்பதற்கு மன்னரின் பிள்ளயையே மன்னர் ஆக்குவர். அவ்வாறு ஆக்குவதாயினும், அந்த பிள்ளைக்கு மன்னர் ஆகும் தகுதி இருக்கவேண்டும் என்பதற்காக போராடும் வித்தைகளையும், ஆட்சி நுட்பங்களையும் கற்றுக்கொடுத்த பின்பே மன்னர் பட்டம் சூட்டுவர். மன்னனின் பிள்ளை சரியான தகுதி கொண்டிருக்காவிடின் அவன் நாடாள தகுதி அற்றவன் என்று மகாபாரதம் கூறுகின்றது. அதாவது மன்னனின் முதற்பிள்ளை என்று சொல்லப்பட்டாலும் விழி இல்லாததால் திருதராட்டினன் ஆளமுடியாது, பாண்டு உடல்குறை இருந்ததாலும் கண்பார்வை உள்ளவன். விதுரன் வேலைக்காரி பிள்ளை, குலவேறுபாடு காரணமாக அவனும் தகுதியற்றவன். கேள்விகேட்காதீர்கள் மூன்று பிள்ளைகளுமே மன்னருடையது அல்ல என்று. இது மகாபாரத செய்தி. ஆளும்தகுதி என்பது மன்னனின் பிள்ளைகட்கு அதாவது இளவரசர்களுக்கு இருந்தாலே அவர்கள் ஆட்சிக்குவரமுடியும் என்பதையே சொல்கின்றேன். அதேவேளை ஆளும் தகுதி அற்றவனிடம் நாடு சிக்கியதால் அங்கு நடந்த அவலங்களை நீங்களே அறிந்திருப்பீர்கள். இது ஏன்? ஈழத்து போராட்டத்துக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்பது எனக்கும் புரிகிறது. ஆனால் ஈழத்தமிழ்மக்களிடையே அரசியல் தொடர்பான சரியான தெளிவின்மையே எங்களை இந்த நிலைக்கு இழுத்துவரக்காரணம் என்பதை நன்கு தெரிந்துகொள்ளவே இதை நான் முன்வைக்கின்றேன். ஆழ்ந்து சிந்திக்கும் போது இது உங்களுக்கு தெளிவாக புரியும்.
பண்டைய இலங்கை என்பது இன்றைய சிறீலங்கா போன்று ஒன்றாக இருந்ததாக சான்றுகள் இல்லை. அன்றைய இலங்கை மன்னர்களால் ஆளப்பட்டுள்ளது. அது தமிழ் மற்றும் சிங்கள மன்னர்களாக இருந்ததாக வரலாறு காட்டுகிறது. இலங்கைக்கே உரித்தான மன்னர்களும் இந்தியாவிலிருந்து படை கொண்டு வந்த மன்னர்களும் இலங்கையை ஆண்டிருக்கின்றனர். தனித்து ஒரே மன்னனின் ஆட்சியின் கீழ் ஒன்றுபட்ட இலங்கையாக இல்லாது வேறுபட்ட இராச்சியங்களாக அமைந்திருந்த அதேவேளை, ஆரோக்கியமான இராச்சியங்களாக அவை செயற்பட்டுள்ளன என்று சொல்லமுடியும். ஒரு இராச்சியத்தின் தலைமை ஒரு மன்னனிடம் இருந்தாலும் பல குறுநில அல்லது சிற்றரசுகளும் இயங்கியிருக்கின்றன. மன்னர்களுக்கிடையே நிலத்துக்கான போர்கள் நடந்திருக்கின்றன. ஆனால் மக்களை குறிவைத்து அல்லது மக்களை கொல்லும் நோக்கில் சண்டையிட்டதாக தெரியவில்லை. அதாவது சிங்களவருக்கும் தமிழருக்கும் இனமோதல்கள் நடைபெற்றதாக சான்றுகள் இல்லை.
தலைவர்கள் என்று மதிப்பளிக்க வேண்டியவர்கள் எப்படி இருக்கவேண்டும் என்று குறித்த வரையறைக்குள் இலகுவாக அடக்கிவிடமுடியாது. ஆனால் நல்ல தலைவர்களும், தவறான தலைவர்களும் அன்றும் இருந்திருக்கின்றனர். இன்றும் இருக்கின்றனர். ஒரு தலைவனிடம் இருக்கவேண்டிய முக்கிய பண்பு தனது வாழ்வு அல்லது தன் சுற்றத்தின் வாழ்வு அல்லது தனது இனத்தின் வாழ்வு மட்டுமல்ல. தன்னை நம்பியுள்ள அல்லது தனது எல்லைக்குட்பட்ட அனைத்து சமுதாயத்தினதும் நல்வாழ்வு என்றே இருக்கவேண்டும். தனது நாட்டில் வாழும் மக்களின் சமகால வாழ்வு மட்டுமன்றி, அவர்களின் எதிர்கால நலன்கள் தொடர்பான நீண்ட பார்வை, நாடுபற்றிய தூரநோக்கு சிந்தனை என்பன அவரிடம் இருக்கவேண்டும். குறுகிய வட்டத்துக்குள் நின்று தனது ஆட்சியை அல்லது தனது அதிகாரத்தை நிலைக்கவைக்க என்ன செய்யலாம் என்று மட்டும் சிந்திக்ககூடாது. உண்மையில் பண்டைய இலங்கை மன்னர்கள் தூய, நல்ல, தேசிய, தொலைநோக்கான சிந்தை உள்ளவர்களாகவே இருந்துள்ளனர். நாட்டின் வளம், எதிர்கால வாழ்வு என்பவற்றை தெளிவாக புரிந்துகொண்டு, இலங்கை ஒரு விவசாய நாடு என்ற அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். காரணம், இலங்கைநாட்டில் பாரிய குளங்கள், நீர்த்தேக்கங்கள் மன்னர்களால் அமைக்கப்பட்டுள்ளன. அது மட்டுமன்றி கால்வாய்கள், வாய்க்கால்கள் அமைத்து நீர்ப்பாசனம் செய்யும் வசதிகளை மேம்படுத்தி, பயிர் செய்யும் வசதிகளை அதிகரித்துள்ளனர். இன்றைய அரசியல் தலைவர்கள் நாடு தொடர்பாக எப்படி சிந்திக்கிறார்கள் அல்லது எதைப்பற்றி சிந்திக்கிறார்கள் என நாமும் சிந்திக்கவேண்டும். எனவே, அன்று சிறந்த நல்லாட்சி நிலவிய ஒரு நாடாக இலங்கை இருந்திருக்கிறது. மக்களும் நிம்மதியாகவும், அமைதியாகவும் வாழ்ந்திருகின்றனர்.
அன்றைய சிங்களமன்னர்கள் உண்மையாகவே தூயபௌத்தர்களாகவே இருந்திருக்கின்றனர். புத்ததர்மத்தை பின்பற்றி இருக்கிறார்கள். ஏனெனில் உண்மையில் பௌத்தம் என்பது மதம் என்று கொள்வதிலும், சிறந்த பகுத்தறிவுச் சிந்தனை என்றே கொள்ளமுடியும். இன்றைய பௌத்தம், இது இலங்கை மட்டுமன்றி இந்த உலகில் பரவியுள்ள மொத்த பௌத்தமும் மனிதனை வதைப்பது, கொடுமைப்படுத்துவது என்பதையே மூலமாக கொண்டுள்ளது. அதாவது பௌத்தம் என்பது மக்களால் வெறுக்கப்படும் ஒரு மதமாக, அந்த மத தலைவர்களான புத்தமத துறவிகளாலே மாற்றப்பட்டுவிட்டது என்று சொல்லமுடியும். தமிழீழ தேசிய தலைவர் அவர்கள் சொல்லிய ஒருசெய்தி ஜெ.ஆர். ஜெயவர்த்தனா உண்மையான பௌத்தனாக இருந்திருந்தால் நாம் ஆயுதம் ஏந்தி போராடவேண்டிய அவசியம் இருந்திருக்காது. காரணம் உண்மையான பௌத்தன் அறவழியில் தெளிவாக சிந்திப்பானே தவிர, குறுக்குவழியில் பாதகமான செயலில் ஈடுபடமாட்டான். உயிர்க்கொலையை விரும்பமாட்டான். ஒற்றுமையே விரும்புவான். மக்களின் நலவாழ்வில் இன்பம்கொள்வான். இந்த உண்மையை என்று பௌத்தமக்கள் புரிந்துகொள்கிறார்களோ அன்று பௌத்த வேடம் கட்டும் பெரியவர்களும், பௌத்தத்தின் போர்வையில் ஆளும் ஆட்சியாளர்களும் என்ன கதிக்கு ஆளாவார்களோ தெரியாது. ஆனாலும் பௌத்தமதம் விழித்துக்கொள்வது கண்டிப்பாக நடந்தேதீரும். இன்று பௌத்தத்தை தவறாக நடத்துபவர்களின் செயற்பாடுகள்தான் புத்தர் பிறந்த நாட்டில் இருந்து அந்த மதத்தை அகற்ற காரணமாக அமைந்திருக்கலாம்.
புத்தரின் பகுத்தறிவு தொடர்பாக ஒரு விளக்கம் சொல்லிவிட்டு நாம் அடுத்தகட்டத்துக்கு நகரலாம் என நினைக்கிறேன். “பிள்ளை இறந்த தாய் ஒருத்தி தன் பிள்ளையை உயிர்ப்பித்து தருமாறு புத்தரிடம் வேண்டுகின்றாள். பொதுவாக மதங்களை பொறுத்தவரை இவ்வாறான ஒரு நிலையில் கடவுளர்கள் அல்லது இறைதொண்டர்கள், அல்லது இறைதூதர்கள் செய்யும் அற்புதம் மூலம் பிள்ளை உயிர்த்ததெழும். அந்த செய்தி வழிமுறையாக சொல்லப்படும். ஆனால் சித்தார்த்தன் அப்படி எதுவும் செய்யவில்லை. அந்த தாயிடம் வேண்டுகை ஒன்றை விடுத்தார். உன்பிள்ளையை உயிர்ப்பிக்க சிறிது கடுகு வேண்டும் என்றார். அதை தானமாக யாரிடமாவது வாங்கிவந்தால் பிள்ளையை உயிர்ப்பிக்கமுடியும் என்றும் சொன்னார். அவள் புறப்படும் போது இன்னும் ஒரு நிபந்தனை கூறினார், அது நீ கடுகு வாங்கும் வீட்டில் இறப்பு எதுவும் நடந்திருக்க கூடாது என்பதாகும். இறப்பு நடக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திய பின்பே கடுகு வாங்கவேண்டும் என்பதையும் தெரிவித்தார். பிள்ளையின்தாய் புறப்பட்டாள். வீடுவீடாக சென்றாள். கடுகு கிடைத்தது, ஆனால் இறப்பு நிகழாத வீடு ஒன்றுமே இருக்கவில்லை. இப்போது அவள் புரிந்துகொண்டாள், இறப்பு என்பது வாழ்வின் ஒரு அங்கம். அதனை யாரும் தாண்டிவிடமுடியாது. திரும்பி வந்தவள் உண்மையை விளங்கிக்கொண்டு தன் பிள்ளையின் இறந்த உடலை தூக்கிகொண்டு சென்றுவிட்டாள். இவ்வாறு மக்களின் சிந்தனைகளுக்கு உயிரூட்டி பகுத்தறிவு வழங்கியவன் சித்தார்த்தன். இன்று இலங்கையில் சிங்களமக்களை தெளிவடையவிடாது ஆட்சியாளர்கள் நினைத்ததை சாதிக்க பயன்படும் ஒரு மதமாக பௌத்தம் மாறிவிட்டது என்பது கவலைப்படக்கூடிய ஒரு செய்தி தான். இது விரைவில் மாறத்தான் போகிறது என்பதும் நம்பிக்கையான செய்திதான்.
இன்னுமொரு முக்கியமான செய்தி. இலங்கை என்ற நாட்டின் வரலாறு தொடர்பாக மகாவம்சம் மூலமாகவே அறியக்கிடக்கிறது. அது சிங்களம், பௌத்தம் தொடர்பான நூல். தமிழர்கள் தொடர்பாக தமிழ்மூலமான வரலாற்று நூல்கள் உள்ளதாக சான்றுகள் இல்லை. இதிலிருந்து ஒரு பிரதான செய்தியை நாம் புரிந்துகொள்ளவேண்டும். தமிழ் எழுத்தாளர்கள் பொதுவாக வரலாறுகளை எழுத ஊக்குவிக்கப்படுவதில்லை. அதையும் மீறி தன்முனைப்புடன் எழுதுபவர்களும், வாழ்க்கை என்று வரும்போது வறுமைக்குள் தள்ளப்படுகின்றனர். அன்றைய நாட்களில் தமிழ் இலக்கியங்கள் அல்லது தமிழ் வரலாறுகளை எழுதியவர்கள் வறுமையில் வாடியதையும், புலவர்களும் அவர்களின் குடும்பங்களும் உணவின்றி தவித்ததையும் பல தமிழ் இலக்கிய பாடல்கள் எமக்கு சான்று கூறிநிற்கின்றன. இதனால் எழுத்தாற்றல் உள்ளவர்கள் மன்னனையோ அல்லது பணஉதவி செய்பவனையோ சார்ந்தே வாழவேண்டும் என்ற நிலை வந்தது அல்லது வருகிறது. அப்படி வாழும்போது தனது வறுமையை போக்குவபனை புறம்தள்ளி, சொந்தமாக எழுதுவதும் ஒரு கடினமான செயலாக அமையும். இன்றும்கூட ஈழத்தமிழர்கள் எவ்வளவு பணம் கொடுத்தும் பாடப்புத்தகங்கள் வாங்கி பிள்ளைகளுக்கு படிக்க கொடுப்பார்கள். ஆனால் வரலாறுகளை அறிவதற்கு ஊக்குவித்தல், வரலாறு தொடர்பான புத்தகங்கள் வாங்கி படிக்க கொடுத்தல் என்பதில் நாட்டம் குறைவு என்றே சொல்லமுடியும். இதற்கும் மேலாக மன்னர்கள் யுத்தங்களில் ஈடுபடும்போது அங்கு இருக்கும் வரலாற்று சான்றுகளையும் அழித்துவிடுவார்கள். இதனால் சரியான தகவல்களை பாதுகாத்துவைத்தல் என்பதும் மிகவும் கடினமான ஒரு பணியாகவே தெரிகிறது. எனவேதான் எங்களை நாங்களே இனம் காணமுடியாமலும், எங்கள் அடிமுடி தெரியாமலும் வலுவான இனப்பற்றோ அல்லது தேசப்பற்றோ இல்லாமலும் அலையும் ஒரு கூட்டமாக மாறிவிட்டோம்.
ஒருநாட்டில் வாழும் குடிமகன் தனக்கு பாதுகாப்பு இல்லை என்று உணரின் அவன் அந்த நாட்டினை துறந்து வேறு நாட்டுக்கு செல்லமுடியும் என்று மகாபாரதம் கூறுகிறது. அவ்வாறு ஒருவன் நாட்டினை துறப்பின் அது ஆட்சியாளனின் திறமைக்குறைவே என்று மகாபாரதம் கருத்துரைக்கிறது. இந்த ஒரு நிலையால் இலங்கையில் இருந்து பலர் புலம்பெயர்ந்தனர். ஆனால் இலங்கையில் வாழ்பவர்கள் புலம் பெயர்ந்தோரை கேலி செய்கின்றனர். புலம் பெயர்ந்த மக்கள் இலங்கையில் இருக்கும்போது அவர்களை அதேநாட்டில் தங்கிவாழ ஏதாவது ஒரு உதவிகூட செய்யாதவர்கள், அல்லது இலங்கையில் இருந்து நிம்மதியாக வாழவிடாது துன்பங்களை விழைவித்தோர், புலம்பெயர்ந்தோரை குறை கூற விரும்பக்கூடாது என்பதையும் அவர்கள் நினைத்துப்பார்க்கவேண்டும். தமிழர்களை விடுதலைப்புலிகளின் பயங்கரவாதத்தில் இருந்து மீட்கிறோம் என்று இலங்கையில் 2008 -2009 இல் நடைபெற்ற போரில் செய்வதறியாது திகைத்து கால்போனதிக்கில் இடம்பெயர்ந்து இலங்கையின் பிறபகுதிகளிலும், இலங்கையில் பாதுகாப்பில்லை என்று நம்பி இலங்கையைவிட்டு ஓடியும் பிறநாடுகளில் ஈழத்தமிழர்கள் அகதிகளாக தஞ்சம் கோரினர். அப்போது இரண்டாம் உலகப்போர்காலத்தில் அல்லது இலங்கை பிரித்தானியாவின் ஆட்சிக்குட்பட்ட காலத்தில் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் சிங்களவர்களும் தாங்கள் யார் என்பதை மறந்து தமிழர்கள் அகதிகளாக அலைந்து தஞ்சம் கோருகின்றனர் என்று கேலி செய்தமையும் மறக்கமுடியாத ஒன்று. ஆனால் இந்த உலகில் பெரும்பாலானோர் இலங்கையில் தமிழன் நிம்மதியாக, அமைதியாக, சுயமரியாதையுடன் வாழ எந்த வகையிலும் உதவி செய்யவில்லை என்பதை ஏற்றுத்தான் ஆகவேண்டும். காரணம் இன்றும் ஈழத்தமிழர்கள் மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் வன்முறைகள் பிரயோகிக்கப்படுகின்றன. மகிழ்ச்சியாக வாழ்வதாக சித்தரிக்கப்பட்டு துன்பத்தில் வாழ்கின்றனர் என்பது மறைக்கமுடியாத உண்மை ஆகும்.
ஈழத்தமிழ் மக்கள் அமைதியான வாழ்கையை விரும்பும் இயல்பினர். தாம் உண்டு தம் உழைப்புண்டு. அதைப்பயன்படுத்தி தங்கள் வாழ்க்கை உண்டு என்பதே அவர்கள் சித்தாந்தம். கடினமாக உழைக்கும் போக்கு அவர்களிடம் இருந்தது . இதனுடன் பணம் சேர்க்கும் ஆசையும் அவர்களிடம் இருக்கிறது. இலங்கையில் ஈழப்போர் என்று வெளிப்படையாக 1983 இல் தொடங்கியது. அதன்பின்பே இடப்பெயர்வுகளும் ஆரம்பித்தது. ஆனால் ஈழத்தமிழ் மக்கள் 1983 இற்கு முன்பே நல்ல வசதிகள் பெற்று வாழ்ந்திருந்தார்கள். புதிய முறையில் கட்டப்பட்ட வீடுகள், தனிப்பட்ட சொந்த வாகன வசதிகள், அரச தொழில்கள், தனியார் முதலீடுகள், சுயதொழில்கள் என்று கடின உழைப்புடன் முன்னேறினர். இதற்கு அன்று எந்த வெளிநாட்டு பணமும் அவர்கள் பெறவில்லை. முற்றுமுழுதாக அவர்களின் சொந்த உழைப்பு. இதுவும் சிங்கள தலைவர்கள் தமிழர்களை வீழ்த்தவேண்டும் என்று முடிவெடுக்க பிரதானமான ஒரு காரணம் என்பதை யாரும் மறுக்கமுடியாது. அன்றைய நிதி அமைச்சர்கள் இதற்கு எதிராகவும் திட்டங்கள் போட்டுள்ளனர். இன்று அநேக ஈழத்தமிழர்கள் தங்கள் உழைக்கும் சக்தியை மறந்து, தங்களது சந்தர்ப்பங்களை பிறருக்கு தாரைவார்த்து கொடுத்துவிட்டு, தங்களை இயலாதவர்கள் என்று நினைத்துக்கொண்டு, வெளிநாடுகளை நம்பியும், அவ்வாறு வெளிநாடுகளில் இருந்து பணம் பெறுவோரை கொள்ளையடித்தும் வாழும் மக்களாக மாறிவிட்டார்கள் என்ற கசப்பான உண்மை ஏற்கப்படவேண்டியது. ஈழத்தமிழர்களின் உழைக்கும் ஆற்றலை முற்றாக மறக்க வைத்ததும், வலுவுள்ளோர் நாட்டைவிட்டு செல்லதூண்டியதும் சிங்களஅரசு பெற்ற வெற்றிதான் என்பது முக்கியமான ஒன்று. இருப்பினும் ஈழத்தமிழர்கள் என்றுமே போரை விரும்பியவர்களாக தெரியவில்லை. கூடி வாழ்ந்து கோடி நன்மை பெறுவதே எண்ணமாக இருந்துள்ளது. இலங்கையில் அரசியல் செய்பவர்கள் உள்நாட்டில் இனங்களுக்கிடையே எதிர்ப்புகளை விதைத்து, சண்டையை மூடிவிட்டு, ஆட்சியாளர்களாக உருவெடுப்பதும், நாட்டை ஆள்வதுமே வரலாறாக உள்ளது.
மேலே சொல்லப்பட்ட அடிப்படையில் நோக்குகையில் ஈழத்தமிழர்களை ஒடுக்குவது என்பது தூய சிங்களவர்கள் அல்லது தூய பௌத்தர்களின் நோக்கமுமல்ல அவர்களின் முடிபுமல்ல. காரணம், சிங்கள அரசியல்வாதிகளும், பௌத்த மதவாதிகளும் எவ்வளவு முயற்சித்தும் சிங்களவரை அல்லது பௌத்தர்களை தமிழர்களுக்கு எதிராக பாரியளவில் திசை திருப்பவோ அல்லது கலகம் செய்விக்கவோ முடியவில்லை. ஏனென்றால் ஒப்பீட்டளவில் குறைந்த எண்ணிக்கையினர்தான் தமிழர்களுக்கு அல்லது முசுலீம்களுக்கு எதிர்நடவடிக்கைகள் செய்கின்றனர். இவர்களை ஒருசில பௌத்த துறவிகளும், அநேக அரசியல்வாதிகளும் உருவாக்குகின்றனர். விடுதலைப்புலிகள் கொடியவர்கள் என்று சிங்களமக்களுக்கு சொல்லிக்கொண்டு, இராணுவத்தை பயன்படுத்தி விடுதலைப்புலிகளை அழிப்பதாக கூறி மக்களை அளித்தனர். அந்தவேளையில் அதனை பொறுக்கமுடியாத சில இராணுவ உறுப்பினர்களே மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும், சரணடைந்த புலி உறுப்பினர்கள் அனுபவித்த துயரங்களையும் வெளிக்கொணர்ந்துள்ளனர். எனவே தூய சிங்களமும் உண்மை பௌத்தமும் இன்னும் உயிர்வாழ்வதற்கு இது நல்ல சான்று. இன்றும் போதைப்பொருட்பாவனை, கொலை, கொள்ளை வன்முறை என்பன தமிழ் மக்கள் மீது கட்டவிழ்க்கப்பட்டு விடப்பட்டுள்ளது. இது அவர்களின் முன்னேற்றம் தடைப்படும் ஒரு வழிமுறைதான்.
இன்று ஈழத்தமிழர்கள் சிந்திக்கவேண்டிய முக்கியமான, முதன்மையான ஒரு உண்மை என்னவென்றால் ஈழத்தமிழர்களின் வீழ்ச்சியை எதிர்பார்ப்பவர்கள் யார்? அதன் பின்னணி என்ன? ஏன் எங்களை வீழ்த்துகிறார்கள்? இதிலிருந்து நாம் மீளுவது எப்படி? இந்த வினாக்களுக்கு விடை காண்பது?
– பரமபுத்திரன்