- யோவான் அப்பு
இப்போது உயிருடன் இருக்கின்றாரா இல்லையா என்று அவர் குடும்பம் தேடிக்கொண்டு இருக்கின்றார்கள் 99 வீதம் சாத்தியமில்லை அவர் இருக்க ஆனாலும் அந்த குடும்பம் ஏதோ நம்பிக்கையில் தேடிக்கொண்டியிருக்கின்றது
இப்போது அவர் இருந்தால் ஒரு 80,85 வயது இருக்கும்.அவர் பூர்வீகம் எங்கே கிளிநொச்சிக்கு அவர் எப்போது வந்தார் எந்த வயதில் வந்தார் போன்ற பதிவுகள் எவையும் இல்லை. கிளிநொச்சியின் ஆரம்பகால குடிகளில் ஒருவராக இருக்கலாம்.
நல்ல உழைப்பாளி கட்டுமஸ்தான தேகம் கருப்பு கலர் சுருட்டை முடி என்று அந்தக்கால ஹீரோவாம் அவர் ஊரில். எத்தனையோ பெண்களின் கனவு நாயகனாம் அவர் இளைமைக்காலத்தில்.
தன் உழைப்பை மட்டுமே நம்பி வாழ்ந்த மனிதன்.வயல்களில் தினக்கூலியாக தன் வாழ்கையை ஆரம்பித்தவர்.அதன் பிறகு சிறுக சிறுக சேமித்து தனக்கு என்று ஒரு நிலம் வாங்கி விவசாயத்தில் ஈடுபட்டு மெல்ல மெல்ல முன்னேரிக்கொண்டு இருந்த காலத்தில் நாட்டில் ஏற்பட்ச யுத்தத்தால் அவர் சிறுக சிறுக உழைத்து கட்டிய தேன்கூடு கல் எறிபட்டு மீண்டும் தினக்கூலியாக வேலைக்கு போகும் நிலை வந்த போதும் நம்பிக்கையை தளரவிடாத மனிதர்.
என் சிறுவயது நினைவுகளில் அவர் பற்றிய நினைவுகள்.உண்டு ஆம் எங்கள் வயல்களில் வேலை செய்ய வரும் போது அறிந்த முகம். நிறைய படக்கதைகள் சொல்லுவார்.தீவிரமான எம் ஜி ஆர் ரசிகர்.அந்தக்காலத்தில் கிளிநொச்சியில் இருந்து யாழ்பாணத்துக்கு 70 கிலோமீட்டருக்கு சைக்கிளில் சென்று படம் பார்த்து வருவார்களாம். கிளிநொச்சியில் அதன் பிறகு மூன்று தியேட்டர்கள் வந்த பிறகு எம் ஜி ஆர், சிவாஜி குரூப் என்று ரசிகர்கள் பிரிந்து முட்டி மோதிக்கொள்வார்களாம்.
ஆனால் கிளிநொச்சியில் இப்போது 30,40 வயதுகளில் இருக்கின்ற யாரும் கிளிநொச்சியில் தியேட்டரில் படம் பார்த்தது இல்லை 30 வருடங்களுக்கு முன்பே தியேட்டர்கள் இல்லாமல் போய்விட்டது.கிளிநொச்சியில் இருந்த பிரபல தியேட்டர்களை பெயர்களில் மட்டுமே என் தலைமுறை அறிந்திருக்கின்றது. ஈஸ்வரன் தியேட்டர் ஒழுங்கை என்று ஒரு வீதியிருக்கு ஆனால் அதில் எங்கே ஈஸ்வரன் தியேட்டர் இருந்தது என்று என் தலைமுறைக்கு தெரியாது. பராசக்த்தி தியேட்டர் மட்டும் இடிந்த கட்டிடம் மட்டும் எஞ்சிப்போய் கிடக்கின்றது.வரலாற்றின் சின்னமாய்
எம் ஜி ஆர் எம் ஜி ஆர் தான் என்று அவர் கத்திசண்டை பற்றி யோவான் அப்பு விவரித்து கூறியதை சிறுவயதில் வியந்து பார்த்திருக்கேன்.நம்பியாரை பிடிக்காது அவருக்கு எப்ப பார்தாலும் எம்.ஜி
ஆர் கூட சண்டைக்கே நிக்கிறான் நேரில் பார்த்தால் கொல்லவேண்டும் நம்பியாரை என்பார் யோவான் அப்பு. யோவான் அப்பு கதைப்படி சிறுவயதில் நானும் நம்பியாரை மோசமான கொடியவன் என்றே நம்பிக்கொண்டிருந்தேன் ஆனால் நிஜவாழ்வில் மாமிசம் கூட சாப்பிடாத சுத்த சைவம் என்றும் யாருக்கும் தீங்கு நினைக்காத அருமையான மனிதர் நம்பியார் என்றும் யோவான் அப்புவிற்கு தெரியாது.அவரை பொருத்தவரை நம்பியார் எம்.ஜி.ஆரின் எதிரி.
இப்படி சினிமா பற்றி நிறைய கதைகள் சொல்லுவார் யோவான் அப்பு.எங்கள் ஊரில் எல்லோறுக்கும் பிடித்தமான ஒரு மனிதர் அவர்.
கடந்த 2009 இறுதியுத்தத்தில் இடப்பெயர்வுகளில் ஒரு முறை மாத்தளனில் ஒரு முறை கண்டேன்.மிகவும் மெலிந்து போய் வயோதிபம்,வறுமை என்று அவர் வாழ்கை மாறிப்போயிருந்தது.
யுத்தம் முற்றாக ஓய்ந்து மீள் குடியேற்றத்தின் போது அவரது குடும்பம் மீண்டும் கிளிநொச்சிக்கு வந்த போது யோவான் அப்பு வரவில்லை.எங்கே என விசாரித்தபோது முள்ளிவாய்க்கால் இடப்பெயர்வில் காணாமல் போய்விட்டாராம். எங்கு தேடியும் இல்லையாம். இப்போதும் அவர் குடும்பம் நம்பிக்கொண்டு இருக்கின்றது எங்கேனும் இருப்பார் உயிருடன் என்று
தெரிந்த சனம் தெரியாத கதைகள்(தொடரும்)