யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் என்ற வகையிலும், தமிழ் மக்களையும் தாய் மண்ணையும் ஆழமாகி நேசிப்பவன் என்ற வகையிலும் பல சூழ்ச்சிகளையும் துரோகங்களையும் தாண்டி எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக எனது நிலைப்பாட்டை தமிழ் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய தேவையை உணர்கின்றேன்.
அந்தவகையில்,
வடக்கு கிழக்கு வாழ் தமிழ்மக்களாகிய நாம் இவ்வாண்டு மாசி மாதம் 10ம் திகதி மீண்டும் ஓர் உள்ளூராட்சித் தேர்தலை சந்திக்கின்றோம்.
மத்தியப்படுத்தப்பட்ட (Centralized) ஆட்சிச் சமுதாயத்தில் அடிமட்டத்திலுள்ள மக்களிற்கு நன்மையளிப்பது கடினம், ஆகவே ஆட்சியதிகாரங்கள் மத்தியிலிருந்து அடிமட்டம் வரை பரவலாக்கம் (Decentralization) செய்யப்ப்ட வேண்டும்.
மற்றும் அடிமட்டத்திலுள்ள மக்களும் கொள்கை உருவாக்கச் செயற்பாடுகளில் ஈடுபட்டு தங்களைத் தாங்கள் ஆட்சி செய்ய வேண்டும் என்ற நல்லெண்ண நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது தான் உள்ளூராட்சி அமைப்பு முறைமை
தமிழ் மக்கள் உள்ளூராட்சிஅமைப்புக்களில் ஆட்சிஅமைத்து தத்தமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய வேண்டிய அதேசமயம் தமிழ் மக்களின் தேசியம், இறைமை மற்றும் சுயநிர்ணயம் என்பவற்றிற்கு வலுச்சேர்க்கச் கூடியவகையில் இவ்வுள்ளூராட்சி அமைப்புமுறைகள் வடக்கு– கிழக்கு பூராகவும் இயங்கவேண்டும்.
2009ல் தமிழ் மக்களின் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின் உள்ள தமிழ் மக்களின் அரசியல் பிரநதிநிதிகள் உண்மையாகவும் நேர்மையாகவும் தாற்பரியம் அறிந்தும் தமிழ்மக்களை பிரதிநிதித்தவம் செய்கின்றார்களா?என்பது தற்பொழுது தமிழ் மக்கள் மத்தியில் மிகப்பெரும் கேள்விக்குரியவிடயம் ஆகியுள்ளது.
சர்வதேச விசாரணை மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் இல்லை, அரசியல் தீர்வு தொடர்பாக தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுகள் எவையும் உத்தேச அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையில் (Interim Report) இல்லை. சிங்கள பௌத்தமயமாக்கல் வடக்குக்கிழக்கில் மிகவும் தீவிரமாக நடந்தேறி வருகின்றது.
அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான நீதி வழங்கும் செயற்பாடுகள் எவையுமில்லை. இது போன்ற பல்வேறுவிடயங்கள் இன்னமும் விடை காணப்படாதவையாகவும் தமிழ் மக்களின் இருப்பினை கேள்விக்குட்படுத்துபவையாகவும் நடந்தேறி வருகின்றன.
இப்பிரச்சினைகள் தொடர்பாகத் தொடர்ந்தும் தற்பொழுது இருக்கின்ற தமிழ்மக்களின் அரசியல் பிரதிநிதிகள் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளாது சலுகைகளிற்கு விலைபோவது கண்டிக்கத்தக்கது.
குறிப்பாக அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக யாழ்ப்பாணப்பல்கலைக்கழக சமூகம் போராடிய போது தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்கள் யாவரிற்கும் திறந்த கலந்துரையாடல் ஒன்றிற்கு யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் மாணவர் ஒன்றியம் விடுத்த அழைப்பிற்கு பொறுப்புக்கூற வேண்டிய அனேக பாராளுமன்ற உறுப்பினர்களால் அவமரியாதை செய்யப்பட்டது.
உண்மையாக கண்டிக்கத்தக்கதுடன் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களின் பொறுப்பற்றதன்மைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகவும் இச்சம்பவம் அமைந்துள்ளது.
கடந்த 3 தசாப்தங்களிற்கு மேலாக வடகிழக்கு தமிழ்மக்களின் வாழ்வியலுடன் இணைந்து தமிழ் மக்களை சரியான பாதைக்கு வழிகாட்டும் ஓர் பொறுப்புள்ள அமைப்பான யாழ்ப்பாணப்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் என்ற வகையில் உள்ளூராட்சித் தேர்தலில் மக்களை சரியான பாதையில் வழிகாட்ட வேண்டிய பொறுப்பினை உணர்ந்து கொள்கின்றேன்.
எனவே இவ் அறிக்கையில் இனங்காணப்பட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழ் மக்கள் இந்த உள்ளூராட்சித் தேர்தலில் அபிவிருத்தி மற்றும் தமிழ்த்தேசியத்திற்கு வலுச்சேர்க்கக்கூடிய பிரதிநிதிகளைத்தெரிவு செய்யுமாறு எமது மக்களை உரிமையுடனும் பணிவுடனும் கேட்டுகொள்கின்றேன்.
-கி.கிருஸ்ணமீனன்-
தலைவர்
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்