ஈழம் கிடைத்துவிட்டதென்றா
இத்தனை வெடி முழக்கம்
சொந்த இனத்தவனை
வென்றுவிட்டதாய் எழும்
உங்கள் மகிழ்ச்சியில்
அடுத்தவன் காலினில்
மிதிபட்டு வாழ்கிறோம் எனும்
மாபெரும் உண்மை
மழுங்கடிக்கப்படுகிறதா..?
ஆயுதங்கள் மௌனித்து
பத்தாண்டு ஆகிறதே
இன்னமும் ஆனையிறவிலும்
எங்கள் புனித நிலங்களிலும்
எங்கள் தோல்வியின்
எச்சங்களை தொங்கவிட்டுள்ளனரே
இந்த இலட்சணத்தில்
பழசை மறப்பதற்கு
நாங்கள் என்ன கிலிசைகெட்ட இனமா….?
தனிநாடு கிடைப்பதில்
பாதித் தமிழனுக்கு விருப்பமேயில்லை
அயலவன் முஸ்லீமுக்கு அவ் எண்ணம்
அறவே இல்லை
இந்த இலட்சணத்தில்
நேற்று பிறந்த சில கன்றுக்குட்டிகளும்
எழுந்தமானத்தில் விமர்சனம்
செய்கிறார்கள்..!
கேப்பாப்பிலவு மக்கள் கேட்பாரற்று கிடக்க
காணாமல் போனவரின் உற்றார்
பார்ப்பாரற்று கிடக்க
நல்லாட்சி அரசிடம் சொல்லாட்சி தவிர
எதுவுமில்லை என நல்லாய் புரிந்த மக்கள்
கடைசி வாய்ப்பை கூட்டமைப்புக்கு
தந்ததன் தன்மையை
நன்கு அறிந்து நடவுங்கள் தலைவர்களே..!
உங்களுக்கு பிடித்த நல்லாட்சி
சிங்களருக்கு பிடிக்கலையே
இந்த தேர்தலின் மாற்றம் என்ன சொல்கிறது
தெரியுமா..?
அவர்கள் எவருமே நீங்கள் நல்லாய்
இருப்பதை விரும்பப்போவதில்லை
நூதன இனவழிப்பு தொடங்கப்பட்டு
சில ஆண்டுகள் ஆகிவிட்டது
வடக்கில் ஆயிரம் விகாரையை
அமைப்பேன் என்கிறான் அதி உச்ச
இராஜதந்திரி ரணில்
கலப்பு திருமணம் கட்டாய தேவை
என்றான் மகிந்த
அப்பே ரட( எங்கள் நாடு) என்று
எந்நாளும் சொல்கிறார்கள்
காவிக் காவாலிகள்
புலத்தில் நின்று கழுத்தறுப்பேன் என்கிறான்
ஒரு கயவன்
திருகோனமலையை தொலைத்தது போல்
எம் தேசத்தையும் களவுகொடுக்கும்
காலம் தொலைவிலில்லை
மீண்டெழுந்திருக்கிறது
மகிந்தவின் கதிரை
இன்னும் சில ஆண்டுகளில்
அவர்கள் கட்டைவிரலில்
நசிபடவிருக்கும் எம் உறவுகளுக்காய்
சர்வதேசத்தின் காதோரம் நின்று
கத்தவிருக்கும்
புலம்வாழ் தமிழர்களை
புறக்கணிக்காதிருங்கள்
புலியெதிர்ப்பு புரட்சியாளர்களே..!
அரைகுறை அரசியல் படித்த
சிறு நாற்றக் காளான்களே..!
புலம் ஈழம் இரண்டும் வேறல்ல
போர்க்களம் கண்டு
போரால் வெந்தவர் பலரே இங்குளர்
அதிலும் சிலரே தாய்நிலக் கனவு
தாழாமல் வாழ்கிறார்கள்
இந்த மகத்துவமறியாத
மதிகெட்ட உரைகளை நிறுத்துங்கள்
ஒற்றுமையில்லாத ஓர் இனம்
அதுதான் தமிழினம் என்பதை
அடிக்கடி உணர்த்துகிற அவமானம்
இன்னும் எதற்கு…?
ஒற்றுமையாய் இருப்பதன்றி ஒரு வழியுமில்லை
நாம் மீழ்வதற்கு
இன இணக்கம் ஒரு புறம் இருக்கட்டும்
முதலில் ஒரே இனத்தவர்
நீங்கள் இணக்கமாயிருங்கள்
எதிர்க் கட்சி என்பது
இணக்கக்கட்சியாகிவிட்டது
அடுத்த தேர்தலில்
எதிர்கட்சி பதவி இல்லாது போகும்
பின் எதிர்ப்பார்கள்..
எம் தலைவர்களே!
உங்களை நாங்கள் புறக்கணிக்கவில்லை
அதை புரிந்து செயலாற்றுங்கள்…
எம் புதிய தலைமுறை பிள்ளைகளுக்கு
எதை கற்றுக்கொடுக்கப்போகிறீர்கள்
அடிமைத் தனத்தையா..?
அதிகாரத்தையா..?
– அனாதியன்-