நல்லாட்சி அரசைத் தொடர்ந்து கொண்டு செல்வதற்கு ஒரு விசேட குழு அமைக்கப்படவேண்டும் என, ஜனாதிபதி – பிரதமர் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு காணப்பட்டுள்ளது.
உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளையடுத்து இலங்கை அரசியலில் ஒரு குழப்ப நிலை தோன்றியுள்ளது. இந்திய – அமெரிக்க தூதர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் இருந்து, இந்தத் தேர்தல் முடிவுகள் உள்நாட்டு ரீதியாக மட்டுமன்றி சர்வதேச ரீதியாகவும் சிறு தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை உணர முடியும்.
தேர்தல் முடிவுகள் வெளியானதை அடுத்து நேற்றுக் (13) காலை முதல் ஐதேக மற்றும் ஸ்ரீலசுக ஆகிய கட்சிகள் பல்வேறு பேச்சுவார்த்தைகளை நடத்தின.
குறிப்பாக, ஐ.தே.க. அமைச்சர்கள் சிலர் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்கள். அவர்களையடுத்து கட்சியின் பின்வரிசை பிரமுகர்கள் சிலரும் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஐ.தே.க. தனித்து ஆட்சியமைக்க வேண்டும், அதற்கு ஸ்ரீல.சு.க. சில விட்டுக்கொடுப்புகளைச் செய்ய வேண்டும் என்று கோரப்பட்டதாகவும் பேச்சுக்கள் அடிபட்டன.
எவ்வாறெனினும் இந்தப் பேச்சுவார்த்தைகள் மூலமான இறுதி முடிவை எடுப்பதற்காக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அக்கட்சியின் சுமார் பத்து அமைச்சர்கள், நேற்று மாலை சுமார் 8 மணியளவில் ஜனாதிபதியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தனர்.
இதனிடையே, பொதுத் தேர்தல் ஒன்றை நடத்த ஜனாதிபதி விரும்புவாராயின், அதற்கான திருத்தங்களை பாராளுமன்றில் அங்கீகரிக்க கூட்டு எதிரணி தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பல மணிநேரம் நீண்ட இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில், வெளியேறிய அமைச்சர்களை ஊடகவியலாளர் கடும் சிரமங்களுக்கு மத்தியில் சந்தித்து பேச்சுவார்த்தையின் முடிவுகள் குறித்துக் கேள்விகள் எழுப்பினர்.
பல அமைச்சரவை பிரதானிகள் ஊடகவியலாளர்களைச் சந்திக்காமலேயே வெளியேறியபோதும் ஓரிரு அமைச்சர்கள் பேச்சுவார்த்தையின் முடிவு குறித்து கருத்துத் தெரிவிக்கத் தவறவில்லை.
குறிப்பாக, ஐதேகவின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான சஜித் பிரேமதாச, விசேட குழு ஒன்று அமைக்கப்பட்டு அதன் மூலம் ஐதேக-ஸ்ரீலசுக நல்லாட்சியை இந்த அரசின் பதவிக்காலம் வரை எடுத்துச் செல்வது குறித்து ஆராயப்படும் எனத் தெரிவித்தார்.