”விபு என் உயிர் என்று சொல்லிவிட்டு நீ என்னை விட்டு போய் விட்டியா” என்று கதறி அழுதாள் நிலா.கண்ணிமைக்கும் நொடிக்குள் நடந்து முடிந்த மரண ஓலங்கள் அந்த பாடசாலை வளாகத்தையே புரட்டிப் போட்டது. பாடசாலையில் நடந்த மரணத்தால் தொடர்ந்து வந்த நாட்களுக்கு பாடசாலைக்கு செல்லவே நிலாவிற்கு பிடிக்கவில்லை. தாயின் தந்தையின் வற்புறுத்தலின் பாடசாலை சென்றுவந்த அவளுக்கு விபுவின் நினைவு அலைக்கழிக்க பாடசாலை நரகமானது.எப்படியே படித்து சாதாரணதர பரீட்சையை முடித்த நிலாவுக்கு திருமணம் செய்யவேண்டும் என்று பெற்றோர் ஆசைப்பட்டனர். யுத்த சூழல் மோசமாக மாற்றமடைய எங்கே நிலாவிற்கு ஏதும் நிகழ்ந்துவிடுமோ என்று பயந்த தாயும் தந்தையும் உறவுமுறையில் உள்ள ஒருவருக்கு திருமண ஏற்பாடும் செய்தனர்.
நாட்கள் விரைவாக நகர காலச்சூழல் மாற நிலாவிற்கு திருமண ஏற்பாடும் நிகழ்ந்தது. விபுவின் நினைவில் வாழ்ந்த அவளால் திருமண உறவில் ஈடுபட முடியவில்லை. பெண்ணின் புனிதம் உணரப்படவில்லை. வேண்டாத திருமண பந்தம் வீட்டில் நரகமாக மாறியது . காலை மாலையென்று எப்போதும் சண்டைகள் எப்படி ஆரம்பிக்கும் என்றே தெரியாத நிலாவிற்கு வாழ்க்கையின் கோடுகள் தெரியவில்லை. திருமணம் என்றால் என்னவென்றே அறியாத குழந்தையை திருமண பந்தத்தில் இணைத்த அவளது தாயும் தந்தையும் தமது கடமையினை நிறைவேற்றிவிட்டதாக எண்ணிப் பெருமைப்பட்பட்டார்கள். நிலாவின் வாழ்க்கையின் அத்தியாயங்கள் பெற்றவர்களால் உணரப்படமுடியா சூழலில் போரின் பிடிக்குள் அவர்களது வாழ்க்கை முடக்கப்பட்டு இருந்தது. பதினெட்டு வயது நிரம்பிய குழந்தையொன்று திருமண பந்தத்தின் வலிமையினை அறியாது கருவை சுமக்கும் குழந்தையானது. கடவுளின் கொடுப்பனவில் குழந்தை செல்வம் மட்டும் குறைவின்றி நிலாவிற்கு கிடைத்தது. அடியும் உதையும் கிடைத்தே குழந்தையும் கிடைக்க அந்த குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்று தெரியாமலே ஒரு குழந்தை குழந்தைகளை சுமந்தது.
முதற்குழந்தை கிடைத்து 10 நாட்களுக்குள் பாடசாலை சென்று படிக்க நிலா தயாரானாள். குழந்தை கிடைத்த நிலாவிற்கு தனது குழந்தைக்கு பசியாற்ற மார்பில் தாய்ப்பால் சுரப்பதனை கூட உணர முடியவில்லை. தாய்ப்பால் தேங்கிய மார்பக பகுதியின் வலியை எவ்வாறு சமாளிக்கவேண்டும் என்று தெரியாமல் கண்ணீர் சிந்தினாள் நிலா. புரியாத இடம் விளங்காத மொழி எங்கே சென்று என்ன கேட்பது என்று தெரியாத அனாதையாக அவள் பிள்ளையுடன் பாடசாலை சென்று வந்தாள்.
மெதுவெதுவாக வேற்று மொழி கற்றுக்கொண்ட நிலா தனக்கான இடம் எது என்ற தேடலில் கூண்டை விட்டு வெளியேறிட துடித்தாள்.அவளது கணவனின் அடியும் உதையும் குழந்தைகளுக்கு கிடைக்கும் ஈவு இரக்கமற்ற அடிகளும் அவளது மனதை வெகுவாக கல்லாக்க தொடங்கியது.”பொறுக்க வேண்டும், பொறுக்க வேண்டும்” என்று பொறுமையை இழுத்து பிடித்த நிலா ஒருவாறு நான்கு வருடங்கள் திருமண பந்தத்தை ஏற்றுக்கொண்டாள். வாழ்வின் நாட்கள் செல்ல செல்ல வாழ்வில் மாற்றங்கள் ஏற்படும் என்று எண்ணத்தொடங்கினாள். ஆனால் நிலாவின் ஆசைகள் எதனையும் நிறைவேற்ற கூடாது என்று இறைவன் எழுதிவிட்டான் போல. அவளது பொறுமையும் நம்பிக்கையும் சிறிது சிறிதாக உடையத்தொடங்கி முற்றாகவே உடைந்தது. நாளுக்கு நாள் சண்டைகளும் மேலைநாட்டு நாகரீக சொற்களின் அலங்காரங்களும் அவளின் செவிப்பறையை கிழித்தது .தன்மீது விழும் சொற்களையும் அவமானங்களையும் தாங்கிய நிலாவிற்கு குழந்தைகள் மீதும் அந்த சொல்லாடல்களும் அடிகளும் விழுவதை பொறுக்க முடியவில்லை. என்ன செய்வது என்று முடிவெடுக்க தெரியாத அவளும் இந்த சிறையில் இருந்து வெளியேறிட வேண்டுமென்று துடிக்க தொடங்கினாள்.
அவளது பொறுமைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக நிலாவுக்கு தாலிகட்டியவனின் சொல் ஒன்று அவளது காதில் ஈயத்தை ஊற்றியது. அவள் புனிதமாக போற்றிய காதலையும் காதலனையும் மிகவும் கீழ்த்தரமாக சித்தரித்து விபுவினால் உருவாக்கப்பட்ட குழந்தைக்கு நான் அப்பனா ? என்ற கணவனது கேள்வியினால் நிலைகுலைந்து போனாள் நிலா. ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற நிலா தனது தாலியை கழட்டி அவனிடம் எறிந்துவிட்டு அவளது கணவனின் வீட்டில் இருந்து வெளியேறினாள்.
வழியெங்கும் கண்ணீருடன் சென்ற நிலாவிற்கு அவள் வாழ்ந்த தேசமே வெறுத்துப் போக கையில் இருந்த ஒற்றைப்பெட்டியுடன் அருகில் இருக்கும் நாட்டிற்கு குழந்தைகளை அழைத்துக்கொண்டு ரெயிலில் கிளம்பிச்சென்றாள்.பிள்ளைகளுடன் கிளம்பிச்சென்ற நிலாவிற்கு ,என்ன செய்வேன் எப்படி இந்த குழந்தைகளுடன் வாழுவேன் என்று தெரியாமல் கண்ணீர் சுரக்கத் தொடங்கியது. முன்னரும் இதே போன்றே அவளது கணவராலும் கணவனின் தம்பியாலும் அடித்து விரட்டப்பட போகும் வழி தெரியாமல் இரண்டு நாட்கள் வீதியில் இருந்துவிட்டு மீண்டும் பிள்ளைகளுக்காக கணவன் வீட்டிற்கு சென்ற அவள் வாழவேண்டும் என்றே ஆசைப்பட்டவள் தான் நிலா .ஈழத்து கலாச்சார சூழலுக்குள் வாழ்ந்தே பழகிப்போன அவளுக்கு தாலி என்பது புனிதமானது என்றே போதிக்கப்பட அந்த வேலியை உடைத்தெறியும் எண்ணம் இருக்கவே இல்லை ஆனாலும் அவளை அந்த வேலியை உடைத்தெறிய செய்த பெருமையை அவளது கணவனே வழங்கினான்.