வாழ்ந்த தேசத்தை விட்டு கோபத்தில் வெளியேறிய நிலாவிற்கு எதிர்காலமே மலைப்பாக தோன்றியது. எங்கே சென்று யாருடன் தான் தங்க முடியும்? என்ற கேள்விக்கு அவளிடம் பதில் இல்லாமல் இருந்ததால் அவளுக்கு எதிர்காலமே மலைப்பாக தோன்றியது. எப்போதே பார்த்து பழகிய தூரத்து உறவுகள் லண்டனில் இருப்பதாக அவளுக்கு தெரிந்து இருந்தாலும் அவர்கள் வீட்டிற்கு சென்று தனது குழந்தைகளுடன் தங்க முடியுமா? என்ற கேள்வியே மேலோங்கி இருந்தது. அவள் வயதை ஒத்தவர்கள் வண்ணத்து பூச்சிகளாக பறந்து திரியும்போது சிறைக்குள் அடைபட்டு வாடி வதங்கிய மானாக அழகிய நிலவு தேய்ந்திருந்தது.
அழகிய பூவொன்று இரண்டு குழந்தைக்ளுடன் மலைத்தபடி அமர்ந்து வெளியே பார்த்துக்கொண்டு இருந்ததை அந்த வயதான தம்பதியினர் கவனித்து அவளை ஆழமாக ஊடுருவி பார்த்தார்கள். அந்த பெண்மணியின் கண்ணுக்கு நிலாவை துல்லியமாக எடைபோடக்கூடியதாக இருந்தது. களங்கமில்லாத அழகிய முகத்தில் சோகத்தின் வாடையே அப்பியிருந்தது. வயிறார உண்டு பல மாதங்கள் போன்று அவளது உடல்வாகு ஒட்டியிருந்தது. அந்த கண்ணுக்குள் தெரிந்த ஆழ் கவலையை தனது அனுபவ அறிவால் கணித்துக்கொண்டு இருந்தாள் அந்த பெண்மணி .இந்த பொண்ணுக்கு கிட்டதட்ட 23 மூன்று வயது இருக்கலாம். அவளுக்கு அருகில் அமர்ந்திக்கும் அந்த குழந்தைகளின் தாயா இவள்? அல்லது இவளது உறவுக்காரர்களின் குழந்தைகளா? என்று புரியாமல் இருந்தார் அந்த பெண்மணி. இந்த பெண் எந்த நாட்டுக்காரி? பார்த்தால் இந்தியாவோ ஈழமோ என்றுதான் எண்ண முடிகின்றது ஆனால் அவள் பேசும் மொழி பிரெஞ்சு மொழியாக இருக்கின்றது என்பதை நோட்டம் போட்டுகொண்டு இருந்தாள் அந்த பெண்மணி.
”pourquoi vous êtes pleurer”? mama
”Je ne pleure pas bébé”
”mama vous ne dit pas mentir”
”es ce que vous pouvez assier s’il vous plaît bebe”
D’accord mama.
எதுவும் புரியாவிட்டாலும் மொழியின் உரையாடலையும் பேசும் குரலின் தொனியையும் காதால் கேட்டபடி நிலாவையே பார்த்துக்கொண்டு இருந்தாள் அந்தப் பெண்மணி .
அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டு இருந்த நிலாவுக்கு மனதில் இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் அழிந்து விட்டிருந்தது. அருகில் இருந்த பெண்மணியை கூர்ந்து கவனிக்கலானாள் நிலா. அவள் தமிழ் மொழியில் உரையாடுவதை அப்போது தான் நிலாவால் உணர முடிந்திருந்தது. ”அம்மா” என்று மெதுவாக அழைத்தாள் நிலா.
”சொல்லு பிள்ளை” உன்னை நான் இவ்வளவு நேரமும் கவனித்து கொண்டுதான் வந்தேன். நீ யார்? எங்கே இந்த பிள்ளைகளுடன் போகின்றாய்? இந்த குழந்தைகளின் தாய் தந்தை யார்? என்று கேள்வி எழுப்பினாள் அந்த பெண்மணி
”அம்மா குழந்தைகளின் தாய் நான் தான் இந்த குழந்தைகளின் தந்தை இறந்து விட்டார்” என்று சொன்னாள் நிலா
”என்னம்மா சொல்கின்றாய் எப்படி இந்த சின்ன வயதில் விதவையானாய்” என்று பதறினாள் அருகில் இருந்த பெண்மணி.
தனது கணவன் இறந்து விட்டதாக கூறியதில் எந்த தவறும் இல்லை என்று ஆழமாக நம்பியே அவ்வாறான பொய் யை சொன்னாள் நிலா.
”சரி எவ்வாறு இறந்தார்? எங்கே இறந்தார்? என்று வழமையாக கேட் கும் தனிப்பட்ட கேள்விகளுக்குள் அந்தப் பெண்மணி
”அம்மா என் தனிப்பட்ட விடயம் உங்களுடன் பகிர எனக்கு விருப்பம் இல்லை” நான் வசித்த நாடு பிரான்ஸ். இப்போது பிரான்சில் இருந்து வெளியேறி விட்டேன். இலண்டனியில் நான் தங்குவதற்கு ஒரு இடம் உங்களால் கொடுக்க முடியுமா? ஒரு மாதத்துக்குள் நான் வேறு வீடு எடுத்துக்கொண்டு சென்றுவிடுவேன் என்று சத்தியம் செய்தாள் நிலா.
”அப்படியா சரி’,’ தனியாக இந்த வயதில் வெளிக்கிட்டு வந்து இருக்கின்றாய் உன்னை எப்படி நன்றாக கணிக்க முடியும்” ஆனாலும் ஒரு மாதம் மட்டுமே என்றால் எங்கள் வீட்டில் தங்கிவிட்டு மாத வாடகை தந்துவிட வேண்டும் என்று கறாராக கூறினார் அந்த பெண்மணி.
”உங்கள் நிலையில் இருந்து பார்த்தால், எல்லாமே சரிதான் அம்மா நீங்கள் கூறியபடி ஒரு மாதத்துக்குள் நான் உங்கள் வீட்டை விட்டு வெளியேறி விடுவேன்” என்று சத்தியம் செய்து விட்டு அவள் கொண்டுவந்து இருந்த 1500 ஐரோவில் 300 ஐரோவை அந்த பெண்மணியிடம் கொடுத்தாள் நிலா.
இன்று இரவு எங்கே தங்கப் போகின்றோம்? என்ற பெரிய கேள்வி ஒன்றிற்கு விடை கிடைத்த சந்தோசத்தில் மெதுவாக கண்ணயர்ந்தாள் நிலா. அவள் உறங்கி ஐந்து நிமிடத்துக்குள் அவளின் மனக்கண்ணில் விபுவின் நினைவு நிழலாடியது. ”நீ மட்டும் என்னை விட்டு விட்டு போயிராவிட்டால், நான் இப்படி துன்பப்பட வேண்டி இருக்காதே, ஏனடா என்னை விட்டு சென்றாய்? என்னால் உன்னை மறக்க முடியவில்லையே” என்று மனதுக்குள் அழுதாள் நிலா.
விபுவினது கடைசி காதல் பார்வை மனதுக்குள் ஊஞ்சலாடியது. அழகான மனதுக்குள் அலைபாய செய்யும் அவனது குரலில் எப்போதுமே மயங்கி இருந்திருந்தாள் நிலா. காதலை காதல் என்று உணராமலே அவனை திட்டியதும் அவனுடன் பேசியதும் அவளின் மனதுக்குள் கானலில் தெரிந்த நீராக வந்து வந்து மறைந்தது. உண்மை காதலை உணர்ந்தவர்கள் அவர்கள் நினைவில் இறுதிவரை வாழ்வார்கள் மனதால் என்று ஆழமாக நம்பத் தொடங்கினாள் நிலா. ”கல்யாணம் என்பது ஒரு பெண்ணை துன்பம் மட்டுமே செய்யுமென்றால் அந்த விலங்கினை உடைத்தெறிய வேண்டும்” என்ற துணிவு எப்போது ஏற்பட்டது என்ற பிரமிப்பை அவளால் உணர முடியவில்லை. கலாச்சாரம் பண்பாடு என்று சொல்லி ஒரு பெண்ணை அடியோடு அழிப்பதே கலாச்சாரம் என்றால் அந்த கலாச்சாரம் எதற்கு? என்று நிலாவின் பகுத்தறிவு கேள்வி கேட்கத் தொடங்கியது.
இலண்டன் ”செயின்ட் பங்கிராஸ்” என்ற இடத்திற்கு யூரோ ஸ்டார் வந்து நின்றதும் கையில் இருந்த ஒரு பெட்டியுடன் அந்த பெண்மணியை பின்தொடந்து சென்றாள் நிலா. அவள் மனம் துவளும் நேரத்தில் அவளால் எழுதப்பட்ட கிறுக்கல்களின் தொகுப்பு ஒன்றை அவள் பத்திரப்படுத்தி வைத்திருந்தாள். வேறு ஒரு ரெயின் எடுத்து மீண்டும் ஒரு மணித்தியால பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று அந்த பெண்மணி கூறியவுடன் தனது கவிதை கொப்பியை எடுத்து மெதுவாக வாசிக்க தொடங்கினாள் நிலா. அவளால் எழுதப்பட்ட ஒவ்வொரு வரிகளுக்குள்ளும் காதலும் கோபமும் துரோகமும் அவமானமும் நிறைந்திருக்க தன்னை மறந்து கண்களில் நீர்வழிய கவிதை தொகுப்பை வாசித்துக்கொண்டு இருந்தாள் நிலா.