சிசுக்கொலைச் சீரழிவு…!
பெண்ணின் கருவும் ஆணின் விந்தும் இணைந்து கருவுற்ற காலத்திலிருந்து பிள்ளை பிறந்து ஒரு வருட காலப்பகுதி வரையுள்ள ஜீவனே சிசு. இச் சிசுவைக் கலைப்பதும் கொலை செய்வதும் சிசுக் கொலை எனப்படும்.
அறிவியல் வளர்ச்சிக்கு முந்திய காலக் கட்டத்தில் கருப்பையில் கள்ளமில்லாமல் வளரும் குழந்தை பெண்ணாகப் பிறந்தால் பெண் பிள்ளை சுமையென்று தாய்ப் பாலுக்குப் பதிலாக கள்ளிப்பால் கொடுத்து பெண் சிசுக் கொலை இடம்பெற்றது.
அறிவியல் வளர்ச்சியின் பின் ஸ்கேன் மூலமாக ஆணா, பெண்ணா என அறிந்து பெண்ணாக இருப்பின் கருகலைப்பு மேற்கொள்வதன் ஊடாக பெண் சிசுக் கொலை என்ற கொடூரச் செயல் தொடர்ந்தது எனலாம்.
இத்தகைய பெண் சிசுக் கொலை இந்தியா,சீனா,கொரியா ஆகிய நாடுகளில் செறிவாகக் காணப்பட்டமையால் அந்நாடுகளில் பெண்களின் விகிதாசாரம் குறைந்தது.
பெண் சிசுக் கொலையை தடுப்பதற்காக இந்தியாவில் ‘கருவில் பாலினத்தை கண்டறிவதை தடுக்கும் சட்டம்’ 1944 ம் ஆண்டு நடைமுறைக்குக் கொண்டு வந்து கருவிலிருக்கும் சிசு ஆணா? பெண்ணா என தெரிவிக்கும் மருத்துவருக்கு மூன்று மாத காலச் சிறைதண்டனை வழங்கல் மற்றும் பல்வேறுபட்ட விழிப்புணர்வு திட்டங்கள் மூலம் பெண் சிசுக் கொலைகளை தடுப்பதில் வெற்றிக்கண்டுள்ளது இந்தியா.
மேலும் இன்று பெண்கள் கல்வி மட்டத்தில் உயர்ந்து உயர் தொழில்களில் தடம் பதிப்பதினால் பெண்கள் தொடர்பான எண்ணக்கரு மாற்றமடைந்து ஏனைய நாடுகளிலும் பெண் சிசுக் கொலை கணிசமாக குறைவடைந்துள்ளது.
இருப்பினும் எம் சமூகத்தில் பொருளாதார நெருக்கடி, குழந்தை பெற முன் ஆயித்தமின்மை,தொடர்ச்சியான பிள்ளைப் பேறு, வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு குழந்தைப் பராமரிப்புச் சிக்கல், தவறான உடலுறவு, திருமணத்திற்கு முன் உடலுறவு, ஐாேதிட நம்பிக்கை போன்ற பல்வேறு காரணங்களால் இன்று ஆண், பெண் இரு பாலினமும் கருகலைப்புக்கு உள்ளாகின்றது.
இலங்கையில் பலாத்காரம்,சிறுவயது கர்ப்பம்,ககர்ப்பப்பை கோளாறு, அங்கக்குறைப்பாடு போன்ற சூழ்நிலைகளை தவிர ஏனைய சந்தர்ப்பங்களில் பொது வைத்தியசாலையில் கருகலைப்பு மேற்கொள்வது தடைசெய்யப்பட்டுள்ள போதிலும் தனியார் வைத்திய அதிகாரியின் துணையுடன் மறைமுகமாக கருசிதைவு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் ஒரு சில பெண்கள் வைத்திய உதவியை நாடாது மருந்துகள், நாட்டு மருந்துகள், உணவு வகைகள், சில கைமுறைகள் ஊடாக கருகலைப்பு என்ற கொடூரச் செயலை மேற்கொள்கின்றார்கள்.
இச் சிசுக்கொலையை மறைப்பதற்கு சமூகத்தில் கௌரவமாக சொல்லும் சொல்லே கருகலைப்பு.
இலங்கையில் தினமும் 550 தொடக்கம்
600 வரையான கருகலைப்பு சம்பவங்கள் இடம்பெறுவதாகக் கூறப்படுகிறது.
சிசு முகம் அறியாது இடம்பெற்ற கருகலைப்பிலும் பார்க்க இன்று “படைத்த பிரம்மனே படைப்பை அழிப்பது போல்”பெற்ற தாயே பெற்ற பச்சிளங்குழந்தையை குப்பைத்தொட்டி, புல்வெளி, மலசலகூடம், வீதி,கிணறு ஆகியவற்றில் வீசுதல், சிசுவை உயிருடன் மண்ணில் புதைத்தல் போன்ற சிசுக் கொலைகள் எம் சமூகத்தில் சர்வசாதாரணமாக இடம்பெறுவது வேதனைக்குரிய விடயமாகும்.
மிருகம் கூட தான் பெற்ற குட்டியை கொன்ற வரலாறு இல்லை. ஆனால் இன்று மனிதன் தான் பெற்ற குழந்தையை கொன்று மிருகத்திலும் பார்க்க கீழ் நோக்கி செல்கின்றான்.
தவறான உடலுறவு, திருமணத்திற்கு முன் உடலுறவு,கணவன் இறந்த பின் தவறான உறவு போன்று சமூக சீர்கேடுகளினால் உருவான சிசுவை சமூகத்தின் முன் வெளிப்படுத்த முடியாத நிலையில் தன்னை தற்காத்துக்கொள்வதற்காகவும் சமூகத்தில் அவப்பெயரை தவிர்ப்பதற்காகவும் பிறந்த சிசுவை கொள்கிறார்கள்.
ஆயுதப் போராட்டக் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெற்ற பதிவுகள் இல்லாத போதும் யுத்த முடிவின் பின் சமூக சீர்கேடுகள் அதிகரித்து, இத்தகைய சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம் பெறுகின்றமை மறைக்க முடியாத உண்மையாகும்.
இவ்வாறான சிசுக் கொலையை தவிர்ப்பதற்கு தாய்,தந்தை,சமய நிறுவனங்ள், பாடசாலை, அறநெறிகள் என்பன சிறு வயதில் இருந்து பிள்ளைகளுக்கு ஒழுக்காற்றுகளை கற்பித்தல் வேண்டும்.
பாடசாலை பாடத்திட்டங்களில் சமயம், பாலியல் கல்விக்கான முக்கியத்துவத்தை அதிகரித்து ஆசிரியருக்கு பாலியல் கல்வி தொடர்பான பயிற்சிகள் வழங்கல் வேண்டும்.
கருத்தடை சாதனங்கள் தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்துதலும் அவசியமாகிறது.
இளம் வயதில் கணவனை இழந்த பெண்களுக்கு மறுமணம் செய்விக்க சமூகம் முன்வரல் வேண்டும்.
சிசுவைச் சுமந்து பிள்ளையைப் பெறும் போது தாய்மார்கள் உடல்,மன ரீதியாக பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளாகி சிசுக் கொலையை மேற்கொள்வதனால் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு விசேட உளநல ஆலோசனைகளை வழங்கும் செயற்றிட்டங்களை மேற்கொள்ளல் வேண்டும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் “தொட்டில் குழந்தை திட்டம்” என்பதை நடைமுறைப்படுத்தி பிறந்த சிசுவைக் கொலை செய்வதை தவிர்த்தல் வேண்டும்.
கருக்கலைப்பு,பிறந்த சிசுக் கொலை ஆகியவற்றை மேற்கொள்ளும் தரப்பினருக்கு கடுமையான தண்டனைகள் வழங்கல் வேண்டும்.
பெண்களுக்கு உரிய வயதில் திருமணம் செய்வித்தல் வேண்டும்.
கருவில் பாலினத்தை கண்டறியும் தடுப்புச்சட்டங்களை நடைமுறைப்படுத்தல்.
போன்ற பல்வேறு செயல்களினால் சிசுக் கொலையை குறைக்க முடியும்.
இறைவன் கொடுத்த பெரிய வரமே குழந்தைப்பாக்கியம். குழந்தை இன்றி சமூகத்தில் ‘மலடி’ என்ற பெயர் எடுக்கும் பெண்களுக்கே அதன் தார்ப்பரியம் தெரியும்.
“உனக்கு குழந்தை வேண்டாம் என்றால் உன் கருப்பையை பிறருக்கு தானம் செய்”
சி.அபிகாசினி
ஊடகப்பயிலுனர்
குறிப்பு:- எமது ஊடகப் பயிலுனர்களால் பயிற்சிக்காக எழுதப்படுகின்றன கட்டுரைகள் இங்கே தொகுக்கப்படுகின்றன. தொடர்ச்சியாக இத்தளத்தில் வெளியிடப்படும் கட்டுரைகள் தொடர்பான கருத்துக்களை நண்பர்கள் பகிர்ந்து கொள்ளளலாம்.