எதிர்வரும் சனிக்கிழமை லண்டனின் முக்கிய இடம் ஒன்றில் சிங்கள மக்களின் பேரணி ஒன்று நடைபெறத் திட்டமிட்டுள்ளதாக செய்தித் தளங்கள் தமது செய்தியில் குறிப்பிட்டுள்ளன. இந்த நிலையில் அந்த பேரணியின் நோக்கம் “தமிழீழத் தேசியக் கொடியை ” சர்வதேசம் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை விடுப்பதாக அமைந்திருக்கிறது.
இந்த நிலையில், சிங்கள இனத்தை சார்ந்தவர்கள் வீதியில் இறங்கி போராட ஆயுத்தமாகி வருகிறார்கள். அவர்கள் வென்றுவிட்ட இனம் என்ற இறுமாப்போடு எங்கள் அடையாளங்களையும் அழிக்க நினைக்கிறார்கள்.
ஆனால் எமது முகநூல் நட்புக்கள் சிலர் முகப்புத்தகத்தில் முகப்புப் படத்தில் எம் தேசியக் கொடியை வைக்குமாறும் அதனூடாக எமது ஒற்றுமையை காட்டுங்கள் என்றும் கோரிக்கை விடுக்கிறார்கள். அதை தவறாக நான் கூறவரவில்லை. இது ஒவ்வொருவரினதும் மனதுக்குள் இருக்கும் இனபற்றும் கொடி மீதான விசுவாசமுமாக இருக்கலாம். ஆனால் இந்த முகப்புப் படத்தை மாற்றுவதால் எமக்கு கிடைக்கப் போகும் முடிவின் சாதகம் அல்லது பாதகம் எவ்வளவு என்பதை கட்டாயமாக உணர்ந்தே ஆக வேண்டும்.
அன்பானவர்களே…!
40000 இற்கும் அதிகமான மாவீரர்களினதும், பல லட்சம் மக்களினதும் குருதியில் உருவாகி நிமிர்ந்து நிற்பது எம் தேசத்தின் கொடி. அது ஏற்றப்படும் போதும் அல்லது ஏறி நின்று பட்டொளி வீசிக் காற்றில் பறக்கும் போதும், வார்த்தைகளில் சொல்ல முடியாத உணர்வு எழுவதை அனைவரும் உணர்ந்தே இருப்பீர்கள்.
அதை எப்போதும் நான் உணர்வேன். ஒற்றைக் கையை நெஞ்சில் வைத்து கொடி வணக்கம் செய்யும் அந்த கணம் உணர்வுகளை எல்லாம் என் நெஞ்சுக் குழயில் கொண்டு வந்திருப்பேன். இதை ஒவ்வொரு தடவையும் நான் உணர்ந்திருக்கிறேன்.
இப்போதெல்லாம் (2009 ஆம் ஆண்டுக்கு பின்பு) எப்போதாவது நடக்கும் ஏதோ ஒரு நிகழ்வில் நடக்கும் கொடி வணக்கத்தை நான் என்றும் தவற விட்டதில்லை. அப்போதெல்லாம் பல தடவை அழுகை வரும். ஏன் என்று தெரியாது ஆனால் பல தடவை விழி கரைந்திருக்கிறேன். இது எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும் நடந்திருக்கும். ஒரு தடவை மனதை திறந்து பாருங்கள் அப்போது புரியும் அந்த உணர்வு.
என்னைப் பொறுத்தவரை எம் தேசியக் கொடி என் இனவுணர்வு. என் அடையாளம். அது வெறும் துணியல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். எங்கள் ஆன்மாவோடு ஒன்றிப் போன இன உணர்வின் அடையாளம். அதில் இருக்கும் வண்ணங்கள் வெறும் சிகப்பு, மஞ்சள், கறுப்பு , வெள்ளை அல்ல. எமது உணர்வுகளின் வெளிப்பாடுகள். அவற்றை பாதுகாக்க வேண்டியது எமது கடமை.
முள்ளிவாய்க்காலில் எமது இனத்தை கருவறுத்த சிங்கள அரசு, தொடர்ந்து வரும் காலங்களில் எமது மொழியை, எமது அடையாளங்களை, எமது உணர்வுகளை, எமது இருப்பிடங்களை, மெல்லக் கொல்லும் நஞ்சைப் போல அல்லது உள்ளே இருந்து அரித்து தின்னும் கறையானைப் போல எமக்குத் தெரியாமலே இரகசியமாக அரித்துக் கொண்டு வருவதை உணருங்கள்.
அண்மையில் ஒரு செய்திக் கட்டுரையில் அதன் ஆசிரியர் குறிப்பிட்டிருந்தார். இராவணன் என்ற மூவுலைகையும் ஆண்ட தமிழ் அரசன் என்று புராதன இலக்கியங்களில் காட்டப்படும் அரசனை தமிழன் இல்லை என்றும் மூத்த சிங்கள அரசன் என்றும் கூறி வருகிறதாம் சிங்களம் அதற்கான ஆதாரம் இப்போது என்னிடம் இல்லை என்றாலும், இது நியமாக இருக்கலாம் ஏனெனில் “மகாவம்சம் “என்ற நூலினூடாக திரிவுபடுத்தப்பட்ட வரலாற்றை உருவாக்கி இலங்கையின் பூர்வீகக் குடிகள் சிங்களம் என்ற மாயையை தோற்றுவிக்க முயலும் சிங்கள அரசுக்கு இப்போது இராவணன் தமிழன் என்ற வரலாறும் பெரும் தடையாக இருக்கிறது. அதை அவர்கள் மாற்ற வேண்டிய தேவை இருக்கிறது. அதை அவர்கள் திட்டமிட்டு “இராவணன் “அல்ல அது “இராவண ” என்ற பெயர் கொண்ட சிங்கள அரசன் என்று வரலாற்றை மாற்ற முனைகிறார்கள்.
இதன் ஒரு செயற்பாடாக கருதக் கூடியது அம்பாறை மாவட்டத்தில் இருக்கும் “உகந்தை முருகன் ஆலயம்” இது இராவணன் ஆட்சிக் காலத்தில் இராவணனால் கட்டப்பட்டு வழிபடப் பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த உண்மை நிலையை மாற்றி, தென் தமிழீழத்துக்குள் உள்ளடக்கப்படாமலே சிங்கள பகுதியாக திட்டமிட்டு உள்வாங்கப்பட்டுள்ளது. ” பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்கும் ” என்ற பாடல் வரிகளில் வரையறுக்கப் பட்ட தமிழீழ எல்லை உண்மையில் உகந்தை வரை நீண்டிருக்க வேண்டும் என்பதே வரலாற்று உண்மை. இதை மறைந்த மாமனிதரும் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாமனிதர் சந்திரநேரு அவர்கள் அடிக்கடி குறிப்பிடுவார். கதிர்காமம் முருகன் ஆலயம் எவ்வாறு சிங்கள மயமாக்கப்பட்டதோ அவ்வாறு தான் உகந்தை முருகன் ஆலயமும் சிங்களமயமாக்கப்பட்டது.
இதைப் போலவே எமது ஒவ்வொரு அடையாளங்களும் பறி போய்க் கொண்டிருப்பதை நாங்கள் உணர வேண்டும். அதற்காக என்ன வரலாற்று செயற்பாடுகளை நாம் செய்ய வேண்டுமோ? அதை செய்ய வேண்டும். இதை உணருங்கள். முகப்புத்தக முகம்பு படத்தை நாம் மாற்றுவதாலோ அல்லது முகப்புத்தகத்தில் வீர வசனம் பேசிக் கொண்டிருப்பதாலோ எமக்கு எதுவும் நடக்கப் போவதில்லை என்பதை உணர்வோம்.
தமிழ்த் தேசிய ஆன்மாவை முள்ளிவாய்க்காலில் நாம் புதைத்து விடவில்லை. ஆயிரம் ஆயிரம் மக்களின் உயிரற்ற உடற்க் குவியலுக்கும் எம் வீர மறவர்களின் வித்துடல்களுக்கும் மேல் ஏறி நின்றே நாம் இன்று உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதை நாம் புரிந்து கொண்டால், எதிர்வரும் சனிக்கிழமை 24.02.2018 அன்று நடைபெறும் சிங்களத்தின் பேரணி மட்டுமல்ல தாயகத்தில் நடைபெறும் மறைமுக மொழியழிப்பு, இனவழிப்பு, வரலாற்றழிப்பு, வாழ்வாதாரவழிப்பு, என்று எம் மீது திணிக்கப்படும் எந்த அழிநிலை என்றாலும் அதை நாம் எதிர் கொள்ளவும் சிங்களத்துக்கு எதிராக அந்த நடவடிக்கையையே திருப்பி விட்டு எம் இனவுணர்வுகளை நிலைப்படுத்தலாம். இதை புரிந்து செயற்படுவோம் நட்புக்களே…
இப்படியே முகப்புத்தகத்தில் உறைந்து போவோமா அல்லது உலகை ஆண்ட தமிழன் என்று நிரூபிப்போமா? முடிவு எம் கையிலே…
நாம் இதற்கு என்ன செய்ய வேண்டும் ? என்ற வினாவுக்கு சரியான பதிலைத் தேடுவோம். முகப்புத்தகத்தையும் தாண்டி..
அன்புடனும், உணர்வுடனும்….
கவிமகன்.இ
22.02.2018