இப்போது அவரின் கவிதைகளை தேடித் தேடிப்படிக்கின்றனர்.அவரை ஆணவப்படுத்த தொடங்கியிருக்கின்றனர்.அவரின் கவிதைகளில் இருக்கும் கனமான சுழற்சிமிக்க கலகத்தை எண்ணி சிலர் வியக்கின்றனர். இந்தத் தலைமுறையினருக்கு தனது கவிதைகளில் உக்கிரத்தை வழங்கிய இன்குலாப் என்கிற மானுடக் கவிஞனின் தடங்கள் இலக்கியக் கலகமாய் நீண்டு கொண்டே இருக்கும்.
“எழுதமாட்டேன்
ஒருவரி கூட
நீ ஒப்பும்படி”
என்கிற அவரின் கவிதையே இலக்கிய வெளியில் உருவாகிக் கிடந்த ஆதிக்கத்துவ அழகியலை தகர்த்து அகற்றியது. மோசமான தமிழ் இலக்கியப் பரப்பில் அரசியல் படைப்புக்கள் மீது தொடுக்கப்படும் பல்வேறு மதிப்பீட்டு போரை இன்குலாப் எதிர்கொண்ட அளவுக்கு வேறுயாரும் எதிர்கொண்டிருக்கமாட்டார்கள். ஆனாலும் தனித்துவமான ஒரு படைப்பாளியாக அவர் எங்குமே சோரம் போனவரில்லை.
அடக்கப்படும் மக்கள் அடக்குமுறைக்கு எதிராக செய்யும் வன்முறைக்கு ஆதரவாக தனது படைப்புக்களை சிருஸ்டித்தார். அந்த வகையில் இன்குலாப் படைப்புக்கள் ஒரு அரசியல் இயக்கமாகவும் தன்னைப் பரிணமித்துக்கொண்டது என்றால் மிகையில்லை. நான் சொல்லும் இந்தக்கருத்துக்கு பெரும் வெளிச்சமாக இருப்பது பின்வரும் கவிதையே என உங்களாலும் உணரமுடியும்.
“சதையும் எலும்பும் நீங்க வச்ச
தீயில் வேகுது
ஒங்க சர்க்காரும் கோர்ட்டும் அதுல
எண்ணய ஊத்துது
எதை எதையோ சலுகையின்னு
அறிவிக்கிறீங்க
நாங்க எரியும் போது எவன் மசுர
புடுங்கப்போனீங்க?”
இந்தவரிகளை எழுதுவதற்கு இன்குலாப் தமிழனாகவோ, அடக்கப்படுபவனாகவோ இருந்திருக்க வேண்டுமென்று அவசியமில்லை. ஆனால் அவர் மானுடன். எந்தமூலையில் மாந்தஅவலத்தின் கூக்குரல் கேட்குமோ, அந்தத் திசையெங்கும் நீதி கேட்கும் அவரின் வார்த்தைகள் எதிரொலிக்கும்.
தமிழீழ விடுதலைப்போராட்டம் பற்றி தமிழகத்தின் இலக்கியவாதிகளும், சில இடதுசாரி செயற்பாட்டாளர்களும் கொண்டிருந்த மொன்னைத்தனமான, அறிவிலித்தனமான நிலை இன்றும் தொடர்கிறது. சுதந்திர இந்தியாவில் ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்பட்ட மிலேச்சத்தனமான நெருக்கடிக்கால கட்டத்தையும், பின்னர் இந்திய அமைதிப்படையையும் ஆதரித்த எழுத்தாளர் ஜெயகாந்தன்,தமிழீழ விடுதலைக்கு எதிராகவும்,களத்திடையில் குருதி சிந்திக்கொண்டிருந்த விடுதலைப் போராளிகளையும் மிக அவதூறாக சித்திரித்து மேடையொன்றில் உரையாற்றினார். அந்த உரையில் புலிகளை அவர் மிகவும் தாக்கிப்பேசினார். புலிகள் மானுடத்திற்கு எதிரானவர்கள் என்றெல்லாம் அவர் பேசியவார்த்தைகளை ஈழப்போராட்டமும், ஈழத்தமிழ் மக்களும் மறந்து போகோம்.
நெருக்கடி நிலைகால கட்டத்தை ரஷ்யா ஆதரிக்கிறது என்கிற ஒரே காரணத்தால் அவ்வளவுபெரிய ஜனநாயக ஒடுக்குமுறையை ஆதரித்த இடதுசாரி ஜெயகாந்தன் புலிகளை மானுடத்திற்கு எதிரானவர்கள் என்று பேசியதெல்லாம் அந்தக்காலத்திலும் பகிடியானது தான்.
ஆனால் இன்குலாப் இதன் எதிர்த்திசையில் நின்று தமிழீழ மக்களின் விடுதலையைப் பறைசாற்றினார். திராவிட அமைப்பில் இருந்து விலகி தன்னையொரு பொதுவுடைமைவாதியாக, மார்க்சிய சித்தாந்தவாதியாக ஆக்கிக்கொண்ட இன்குலாப் என்கிற படைப்பாளி தமிழீழவிடுதலைக்கு எழுதிய படைப்புக்கள் அதிகம்.
இந்திய அமைதிப்படைக்கு அடிப்படையாக அமைந்த ஜே.ஆர் –ராஜீவ் ஒப்பந்தத்தை கேள்வி கேட்கும் படியாயும், அதன் சாயத்தை போகும்படியாகவும் இன்குலாப் எழுதிய ஒரு பாடல், தமிழீழ விடுதலைப்புலிகளின் முதல் இசைக்கோர்ப்பில் இடம்பெற்றது.
“ஒப்புக்கு போர்த்திய அமைதித் திரையின்
ஓரங்கள் பற்றி எரிகின்றன
ஒடுக்கமுடியாத உண்மையின் குரல்கள்
உலகின் முற்றத்தில் ஒலிக்கின்றன
ஏழு கடல்களும் பாடட்டும் – இன்னும்
எட்டாத வானம் கேட்கட்டும்
ஈழவிடுதலை புலிகளின் குருதியில்
எழுதப்படுகின்ற மானுட கானத்தை
ஆயிரம் பறவைகள்
எங்கள் கானக மரங்களில்
கூடு கட்டலாம்
அலைகள்
உலக சமத்துவம்பாடி
எங்கள் கரைகளில்
முட்டலாம்
போர் விமானம் எம் தலைக்கு மேலெனில்
புகையும் எங்கள் துப்பாக்கி
போர்க்கப்பல் எம் அலைக்கு மேலெனில்
கடலே எதிரிக்கு சமாதி
இதை
ஏழு கடல்களும் பாடட்டும் – இன்னும்
எட்டாத வானம் கேட்கட்டும்”
இன்குலாப்பின் இந்த வரிகளை ஒவ்வொரு தமிழீழத்தவனும் இன்றும் உச்சரிக்கிறார்கள். இவரின் கவிதைகளும், உரைகளும், போராட்டக்களங்களும், நாடகங்களும் தமிழ்ச்சமூகத்தின் நிமிர்வான இலக்கியவெளிக்கு இன்னுமொரு படையாற்றலாய் இருக்கிறது.
தனது வாழ்நாளெங்கும் எழுத்தின் வழியே நடமாடித்திரிந்தவன். ஆதிக்க கொடுங்கோலர்களால் எரிக்கப்படும் குடிசைகளின் சாம்பல் மேட்டை நெருப்பின் கருப்பையாக மாற்றிய கவிஞன் இன்குலாப். மானுட விடுதலைக்கும், சமத்துவ நீதிக்கும் தன் எழுதுகோலை அர்ப்பணித்தவன். சனத்திரளின் கைதட்டுக்காய் மட்டும் முற்போக்கு பேசியவர்கள் நிரம்பிக்கிடக்கும் பீடையான தமிழ்ச்சமூகத்தில் சனத்திரளின் கண்களைத் திறந்தவர். கேள்வியையும் பதிலையும் தனது எழுத்துக்களில் சொன்னவன். விடுதலை என்றொரு கடலில் அவனின் வார்த்தைகள் எல்லாம் ஆதிக்கத்தை நொருக்கும் பேரலைகள்.இந்தப் பிரபஞ்சத்தில் ஒடுக்கப்படும் அனைத்து மக்களின் சார்பாகவும் இரண்டாயிரம் ஆண்டுகால மொழியில் கவிதைகளை எழுதியவன் இன்குலாப். தமிழீழ மக்களின் சார்பாக இன்குலாப் என்கிற விடுதலை விரும்பிக்கு என்னுடைய அகவணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி
காக்கைச் சிறகினிலே இதழ்.
2018 ஜனவரி