திறமைக்கு கவி எழுதும்
முறைமைக்குள் நான் இல்லை
இறைமைக்குள் எட்டியதை என்
தகமைக்காய் எழுதுகிறேன்.
கந்தகம் சுமக்காத கரும்புலியே
கடலடி காணாத கடல் புலியே
வானேறிச் செல்லாத வான் புலியே
வரிகளால் எனையாளும் வரிப்புலியே
நெஞ்சத்து வெறி கொண்டு வஞ்சம்
தீர்த்தாய்
வஞ்சத்து திறம் கொண்டு நெஞ்சம் சேர்த்தாய்
கெஞ்சற்கு தமிழ் இல்லை அஞ்சற்க என்றாய்
அஞ்சற்கு எலி இல்லை துஞ்சற்க
என்றாய்
வேழத்தின் திறல் கொண்ட பெரு மன்னவா
ஈழத்தின் கவிக்கெல்லாம் கவியாண்டவா
ஆழத்தில் புதையாத மொழி கொண்டவா
காலத்தில் உயிர் வாழும் கவி தந்தவா.
எரித்தாலும் எரியாது உந்தன் மேனி-பகை
சிதைத்தாலும் சிதையாது உந்தன் பாணி
விதைத்தாயே ஆழத்தில் விதைகள் எல்லாம்
புதைத்தாலும் புதையாது புலியாய் வாழும்
இருப்புக்கு முன்னாடி நீயோர் புலி -உன்
நெருப்புக்கு முன்னாடி நானோர் பொறி
விருப்புக்கு கவி கொண்டேன் உந்தன் மீதில்
எழுத்துக்கு துணை நிற்பாய் எந்தன் வாழ்வில்.
– கவிப்புயல் சரண்.