கருப்பைகள் கனக்கும் போதெல்லாம்
கதறியழுவார் காரிகைகள்
தகதகக்கும் சூரியனை
அடிவயிற்றில் சுமக்க
எப்படி முடிந்ததம்மா உன்னால்…?
உலகத் தமிழனுக்காய்
உன் உதிரம் கொடுத்தாயே..!
எங்கள் தாய்களை விடவெல்லாம்
நீங்கள் ஒரு படி மேலே
நோயிலே வீழ்ந்த உன்
மேனியை காத்திட
மேதினி எம் கதை கேட்கலையே
எமை காத்தவன் உருப்பெற
காத்திட்ட கடவுள் உமை
பார்த்திடும் பாக்கியம் வாய்க்கலையே..!
கந்தகக் காட்டிடை வெஞ்சமராடிட
சிங்கத்தின் காதிலெம் வெற்றியைக் கூவிட
பொங்கிடும் கார்த்திகைக் கங்குலில்
எமக்கோர் பொக்கிசம் தந்த நின்
பொன்னடி தொட்டால்
நான் தன்னியன் ஆகுவேன்
அப்பெரும் பாக்கியம் அற்றவர் ஆக்கினர்
அன்னையுன் மேனியை
சிறையிலே வாட்டினர்
சிங்கத்தை புணர்ந்தவர்
வம்சம் அவ் வம்சம்
இந்த கீழ் நிலை மாந்தர்க்கு
புரியுமா தாய்ப் பாசம்
எங்கள் தேசத் தாயே..!
தங்கள் சேய்கண்ட கனவு
நனவாகும் நாளை
எதிர்பார்த்து காத்திருக்கும்
உங்கள் பேரப்பிள்ளை…
இவண்
– அனாதியன் –
இறைவனை வேண்டுகிறேன்
அமைதியாய் கண் உறங்குங்கள்