தமிழ் தேசியமும் தேசியக்கொடியும்.
ஒரு மனித இனத்தின் அடையாளமாக அவர்களது இனம், மொழி, பண்பாடு, கலாச்சாரம், இயல் இசை, விளையாட்டு, மற்றும் சம்பிதாயங்கள் விளங்குகின்றன.
ஒரு தேசிய இனம் அல்லது ஒரு நாடு தங்களை பிரதிபலிப்பதற்கு தங்களின் தேசியக்கொடியையே முன்னிலைப்படுத்துவார்கள். ஒரு நாடு,அந்த நாட்டினதும் அந்த நாட்டு மக்கள் சம்பந்தமான அணைத்து நிகழ்வுகளையும் தங்கள் தேசியக்கொடியை ஏற்றுவதோடு ஆரம்பிக்கும்.
இதே போல் ஈழத்தமிழர்கள் ஆகிய நாங்கள் ஈழத்திலும் சரி புலம்பெயர் தேசங்களிலும் சரி எங்களுடைய இனத்தின் அடையாளங்கள்- மொழி, கலாச்சாரம், பண்பாடு மற்றும் இதர விழுமியங்களை பேணிப்பாதுகாக்கவேண்டிய கட்டாயத்திலும் எங்கள் இனத்தின் விடுதலைக்கும் எங்கள் மக்கள் மீது நடத்தப்படட கொடுமைகளுக்கும் தொடர்ந்து போராட வேண்டிய கட்டாயத்திலும் இன்னும் இருக்கிறோம்.
உலகமெங்கும் நீதி கேட்டு போராடும் எங்களின் அடையாளம் என்பது எங்கள் தேசியக்கொடியே. எந்தவொரு நாடும் அல்லது எந்தவொரு அமைப்பும், நாங்கள் ஏற்றும் தேசியக்கொடியை தவிர்க்கக்கூறுவது, எங்கள் உரிமைகளை கைவிடக்கோருவதற்கு ஒப்பானது.
கடந்த ஆண்டு மே 18- முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வில் தமிழ் தேசியக்கொடியேற்றுவது தொடர்ப்பாக லண்டனில் ஏற்படட கருத்து முரணப்பாடுகள் தமிழ் மக்களை பெருங்கவலைகளுக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கி இருந்தது மட்டுமல்லாமல், மக்களின் பங்களிப்பையும் வெகுவாக குறைத்திருந்தது.
எனவே இந்தவருடம் எந்தவித மாற்றுக்கருத்துக்களுக்கும் இடமளிக்காமல் கட்சி பேதங்கள் எதுவுமின்றி தமிழ் தேசியக்கொடியேற்றலுடன் ஆரம்பிக்கும் மே 18- முள்ளிவாய்க்கால்- தமிழ் இனவழிப்பு நிகழ்வில் அனைத்து மக்களையும் கலந்து கொண்டு, அநியாயமாக படுகொலை செய்யப்படட எம்மக்களை நினைவு கூர்வதோடு , அதற்கான நீதியையும் வேண்டி, எம்மக்களின் விடிவுக்காக தொடர்ந்தும் குரல் கொடுக்க ஒற்றிணையுமாறு அன்போடும் உரிமையோடும் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி !
– Dr.து. வரதராஜா