வானொலி ஒன்றில் இரண்டு அறிவிப்பாளர்களின் உரையாடல்,
” கணவனை இழந்த பெண்ணை விதவை என சமூகம் பெயரிடுகிறது.
ஆனால் மனைவியை இழந்தவனை இவ்வாறு ஒரு பெயரிட்டு அழைப்பதில்லை என்கிறார் ஒருவர் .
மற்றவர் அதுதான் ஆண் ஆதிக்க சமூகம் என சாடுகிறார் .
தபுதாரன் என்ற சொல் பற்றி தெரியாது இருவரும் நேயர்களின் தலையில் மிளகாய் நன்றாக அரைக்கிறார்கள் ”
இது நண்பர் ஒருவர் தந்த தகவல்.
வானொலி தொலைக்காட்சிகளில் ஆளுமை பதித்த கமலா தம்பிராஜா காலமாகிய போது நண்பர் வரதராஜன் மரியாம்பிள்ளை ஆழ அகலமான குறிப்பு ஒன்றை வரைந்திருந்தார்.
அது போல சற்சொரூபவதி நாதன் காலமாகிய போது அவரது திறமை குறித்த ஆக்கங்கள் பலவற்றை வாசித்தேன்.
இது போலவே வானொலி தொலைக்காட்சிகளில் தமது திறன்களால் முத்திரை பதித்தவர்களது எண்ணிக்கை ஏராளம்.
இப்போது மட்டும் ஏன் இப்படி ஒரு வறுமை வந்தது.
” சிவராத்திரிக்கு வாழ்த்துச் சொல்லுங்கள். நவராத்திரிக்கு வாழ்த்துச் சொல்லுங்கள்.
ஏதேதோ தினங்களுக்கு எல்லாம் வாழ்த்துச் சொல்லுங்கள்.
இலங்கை,உலக விடயங்கள், பாடல்களின் தராதரம் தெரியாதவர்களால் ஏன் ஒலி,ஒளி ஊடகங்கள் தமது மானத்தை கப்பல் ஏற்றுகின்றனவோ தெரியவில்லை.
போதாக்குறைக்கு இவர்கள் தங்களைத் தாமே ஊடகவியலாளர்கள் எனச் சொல்லித் திரிகின்றனர்.
திறமையானவர்களைச் சுண்டிப் பார்த்து எடுக்க வானொலிகளுக்கு தெரியாதா?
அல்லது திறமை குறைந்த ஒருவர் தலைமைப் பொறுப்பில் இருந்தால் தம்மை விடத் திறமை கூடியவரை எடுக்கக் கூடாது என நினைக்கின்றனரோ?
எது எப்படியோ இலங்கை ஒலி,ஒளி ஊடகங்கள் விதவை, தபுதாரன் போன்ற சாதாரண விடயங்களைக் கூடத் தெரியாத குரல் வல்லாளர்களால் தமது தரத்தைக் குறைக்கின்றன.
விதி விலக்காக ஆங்காங்கே சில திறமைசாலிகளும் இருக்கத் தான் செய்கின்றனர்.