இரவு முழுக்க கடுமையான மனஅழுத்தத்தில் உழன்றுகொண்டிருந்தேன். நெஞ்சுள் கலவரப்படும் வலியை தொட்டுவிடக்கூடியதாய் இருந்தது. ஆயுதங்களின் இரைச்சல் மழை பூமியில் விழுந்து குழந்தைகளின் குருதிகளை வெள்ளமாக்கி வல்லரசு நாடுகளின் கொடியில் சிவப்பு வண்ணம் தீட்டும் இந்தக் கொடிய நூற்றாண்டின் இயல்பை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.யுத்தங்களின் கோட்டையாகி விட்ட இந்தவுலகில் உயிர்கள் வெறும் எண்ணிக்கையாகிவிட்டது.
கடந்த ஏழுநாட்களுக்குள் சிரியாவில் கொல்லப்பட்ட ஐநூறு பேரில் பெருமளவிலானவர்கள் குழந்தைகள்.ஐக்கிய நாடுகள் சபை வேடிக்கை பார்த்துக்கொண்டு கண்டனம் தெரிவிக்கும் தன்னுடைய பாணியிலான கொலைக்குச சான்றிதழ் வழங்கும் நாடகத்தை அரங்கேற்றம் செய்துள்ளது. யுத்தம் எப்போதும் கைவிடப்பட்டவர்களையே பழிதீர்க்கும்.கட்டற்ற வல்லமை கொண்டவர்களை வெல்லச்செய்யும்.சிரியக் குழந்தைகளின் குருதியில் எஞ்சிய சிரியக்குழந்தைகளே மூழ்கியபடிக்கு ஓடிவருகிற புகைப்படங்களை இந்த உலகத்தின் பரிதாபக்குரல்கள் சில்லிடச்செய்து சவங்கள் ஆக்கும்.
யுத்தம் ஒரு சாட்டு. இங்கு கொலை தான் திண்ணமான நிலைப்பாடு. கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான யுத்தத்தை அப்பாவி மக்களைக் கொன்று தான் நடத்தவேண்டுமென உலகத்தின் படுபயங்கரமான வல்லரசு ரஷ்யா முடிவெடுத்திருக்கிறது. அச்சந்தரும் இவ்வுலகின் புதிய அமெரிக்காவாக ரஷ்யா உருக்கொண்டுவிட்டது. “கிழக்கு கூட்டா” நகரவீதிகளில் கட்டிட இடிபாடுகளுக்கு மத்தியில் இருந்து மீட்கப்படும் குழந்தைகளின் கைகளில் தெரியும் நடுக்கத்தை எனது கைகளும் ஒருநாள் கொண்டிருந்தன.
அப்போது
எங்கள் வீடு பதுங்குகுழியாக இருந்தது.
எங்கள் கழிவறை பதுங்குகுழியாக இருந்தது.
எங்கள் படுக்கையறை பதுங்கு குழியாக இருந்தது. எங்கள் பிரசவ விடுதி பதுங்கு குழியாக இருந்தது. எங்கள் புதைகுழியும் பதுங்குகுழியாகவே இருந்தது.
எனக்குப் பின் பிணமாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சிரியக் குழந்தைகளே, நாம் முதலில் இந்தப் பூமியின் கடவுளரைக் கொல்லவேண்டும். அவர்கள் நமது சாவை கிசுகிசுக்கும் செய்திகளைப் போல கடக்கப்பழகியதை நான் முள்ளிவாய்க்காலில் கண்டேன்.இப்போது கிழக்கு கூட்டாவிலும். பாலச்சந்திரனின் இறந்த உடலையும், காஸாவின் பள்ளத்தாக்கையும், அயலான் குர்தியின் உப்பிய உடலையும், சிரியவீதிகளையும் காட்டுப்பூனை போல பதுங்கிக் கொண்டு கடவுளின் கால்கள் கடந்து போவதை நான் கண்ணுற்றேன். நம்மை நமது குருதிகளும் கண்ணீரும் கதகதப்பாக்கி உயிருடன் மிஞ்சச்செய்யும் கனத்த கொடூரத்தையும் இந்த கொலைகாரர்கள் செய்வார்கள்.
ஆயுதத்தின் ஒவ்வொரு சிதறலிலும் வல்லமையற்ற எங்கள் பெயர்கள் எழுதப்பட்டிருக்கும் இந்த நூற்றாண்டில் எங்கள் வாழ்வு சாத்தியமற்றது. எங்களை சாவின் வழியாக நடத்திச்செல்லும் இந்த யுத்தத்தின் பேரை சலசலப்பு எதுவுமில்லாமல் வேடிக்கை பார்க்க இவ்வுலகில் எத்தனையோ தத்துவங்கள் இருக்கின்றன.ஒருவேளை அந்தத் தத்துவங்கள் அனைத்துமே எங்கள் தலையில் சீப்பு போடுவதைப் போல குண்டுகளை வீழ்த்தலாம்.நாம் இரைச்சல் மிக்க போர்விமானங்களின் சத்தம் கேட்டு விழிப்பதற்குள் எங்களுடல் பிய்த்தெறியப்பட்ட இறைச்சித்துண்டங்களாய் எமது படுக்கையறையில் விரவிக்கிடக்கும்.
இதோ இன்றைக்கு ஜோர்ஜ் மன்னனை மட்டுமல்ல அவன் வளர்த்த நாயைக் கூட சுட்டுக்கொன்ற புரட்சியாளர்கள் உருவாக்கிய தேசத்தின் குண்டுகள் எங்கள் மேல் விழத்தொடங்கிற்று.சிரிய மக்களுக்கு மரணத்தை பொதுவுடைமை செய்யும் ரஷ்யாவின் சிவப்பு நிறத்தில் இனி எத்தனை எத்தனை சிரியக்குழந்தைகளின் பசும் இரத்தம்.
ஆசிர்வதிக்கப்பட்ட வானத்தின் கீழே ஆயுதங்கள் வீழ்ந்து வெடித்த பள்ளங்களிற்குள் நின்று கொண்டு எமது உற்றார்களின் இறைச்சிகளைப் பொறுக்கி பூமியின் நீதிக்கு படையிலிடுவோம். அப்போதேனினும் அதற்கு வாயுண்டா என்று நாம் தீர்மானித்துக்கொள்ளலாம். ஆயுதங்களே! எமக்கு பதிலாய் சாவதற்கு இங்கு எவருமிலர், ஏனெனில் நாம் குழந்தைகள் என்று வெடியாத குண்டின் முனையில் ஏறி நின்று நாம் உரத்துக் கூறுவோம்.அப்போதும் அவர்கள் இன்னொரு குண்டை வீசி களங்கமற்ற யுத்தம் என்று அறிக்கை வெளியிடுவார்கள்.
எண்ணத்தெரிந்தவர்கள் எங்கள் பிணங்களை எண்ணிக்கொண்டு நீரை அருந்துவார்கள்,குருதி என்று அறியாமல்.
-அகரமுதல்வன்
02.26.2018