உலகில் தற்போது வெட்க மென்பது இல்லாமல் போய்விட்டது என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆனையாளர் கூறியிருக்கிறார். 37ஆவது மனித உரிமை கூட்டத் தொடர் ஆரம்பிக்கப்பட்டபோது இவ்வாறு குறிப்பிட்ட அல் ஹூசைன் நவீன காலத்திலும் ஏனையோரை ஒடுக்குவது புதியதொரு பாணிக்கு மாறிவிட்டதாகவும் ஒவ்வொரு பிராந்தியத்திலும் மனித உரிமை பின்னடைவை சந்தித்துள்ளதாகவும் கூறினார். சிரியா, மியன்மார், எல் சல்வடோர் முதலிய நாடுகளில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களை அடிப்படையாகக் கொண்டே அவர் இவ்வாறு கூறியிருந்தார்.
எனினும் இலங்கையில் நடந்துமுடிந்த இன அழிப்பு பற்றியோ, தொடரும் உரிமை மறுப்பு பற்றியோ அவர் எதனையும் கூறவில்லை. எனினும் உலகில் இடம்பெறும் எல்லா அழிவுகளுக்கும் வெறும் பார்வையாளராக இருந்து அறிக்கை எழுதும் கணக்கெடுப்பு செய்யும் வெற்று அமைப்பாகவே ஐ.நா இருந்து வருகிறது என்பதே மீண்டும் மீண்டும் உணர்த்தப்படுகின்றது. உலகின் மானுட நேயத்தை கொன்று புதைப்பதில் ஐ.நாவுக்கு பெரும் பங்குண்டு. ஈழ இனப்படுகொலையை சந்தித்த நாம், சிரிய மக்களுக்காக நாம் குரல் கொடுப்பது என்பதும் சிரியாவின் முள்ளிவாய்க்காலான கூட்டாவுக்காக நாம் குரல் கொடுப்பதும் இன்னொரு ஈழ, இன்னுமொரு சிரிய படுகொலைகளை தவிர்க்க உதவும்.
சிரியாவில் இருந்து நாளும் பொழுதும் வரும் செய்திகள் எல்லாம் அப்பாவி மக்கள் அழிக்கப்படுகிறார்கள் என்ற பேரழிவு பற்றிய செய்திகள்தான். காயம் பட்ட குழந்தைகளும் இறந்துபோன குழந்தைகளும் உயிர் பிச்சை கேட்டு கதறி அழும் குழந்தைகளும் நரகமாகிய நகரங்களும் என எத்தனையோ சாட்சியங்களாக புகைப்படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. மனசாட்சி உள்ளவர்கள் சிரியாவுக்காக குரல் கொடுத்தும் பிரார்த்தித்தும் நொந்தபடி இருக்கிறார்கள். யுத்தத்தின் முதலாளிகள் இவைகளை எல்லாம் ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஈழத்தில் நடந்த அத்தனை நிகழ்வுகளையும் சிரியா நினைவுபடுத்துகிறது. ஈழ இனப்படுகொலை நடந்தபோது உலகமும் என்ன செய்ததோ அதையே இப்போதும் செய்து கொண்டிருக்கிறது. முள்ளிவாய்க்காலைப்போலவே மனிதப் படுகொலைக் களமாக கூட்டா பிராந்தியம் மாறியிருக்கிறது.
சிரியா ஓரு மத்திய கிழக்கு நாடு. வடக்கே துருக்கியையும், கிழக்கில் ஈராக்கையும், மேற்கில் லெபனானையும்,தென்மேற்கில் இஸ்ரேலையும், யோர்தானையும் எல்லைகளாகக் கொண்ட நாடு. 1936இல் பிரான்சிடமிருந்து விடுதலை பெற்ற சிரியாவை 1963இலிருந்து பாசாட் கட்சி ஆட்சி செய்து வருகிறது. அத்துடன் எழுபதுகள் தொடக்கம் அசாத் குடும்பத்தை சேர்ந்தவர்கள் சிரியாவை ஆட்சி செய்து வருகின்றனர். அரசியலமைப்பில் பல மாற்றங்களை ஏற்படுத்தி தமக்குச் சாதமாக அதனை மாற்றிய அசாத் குடும்பம் நாட்டை முப்பது ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகின்றது. தற்போது அசாத்தின் மகன் பஷர் அல்-அஸாத் ஜனாதிபதியாக ஆட்சி புரிந்து வருகின்றார். 1962 முதலே சிரியா நெருக்கடியின் மத்தியிலேயே பயணம் செய்தது.
2011ஆம் ஆண்டு துனிசியா புரட்சியை தொடர்ந்து அரபுபப் புரட்சி பரவியது. லிபியா, எகிப்து முதலிய நாடுகளிலும் புரட்சி ஏற்பட்டதுபோன்றே சிரியாவிலும் 2011 ஜனவரி 26 புரட்சி வெடித்தது. அசாத் மற்றும் அவரது பாத் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதுவே சிரிய உள்நாட்டுப் போராக மாறியது. சிரிய அரசாங்கத்திற்கு எதிராக பெரும்பான்மையின சன்னி முஸ்லீம்கள் ஆயுதப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். சிறுபான்மையினரான அலாபிகளின் ஒடுக்குமுறை காரணமாகவே ஆயுதம் ஏந்தும் நிலை ஏற்பட்டதாக சன்னி முஸ்லீம் ஆயுதப் போராளிகள் கூறுகின்றனர். இந்த முரண்பாடுகளை சில சர்வதேச நாடுகள் பயன்படுத்தி தமது அரசியல் நலன்களை சாதிக்கும் முயற்சியில் ஈடுபடுவதும் சிரியாவின் இன்றைய நிலைக்கு காரணம் ஆகும்.
சீனாவும் ரஷ்யாவும் தமது வர்த்தக நண்பரான பஷர் அல் அசாத்திற்கு ஆதரவை வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் சிரிய ஆதரவாக ரஷ்யா சிரியப் போராளிகளுக்கு எதிரைாக போரில் ஈடுபட, அமெரிக்கா, துருக்கி, குர்திஸ்தான், ஈரான் முதலிய நாடுகள் சிரிய அரசுக்கு எதிராக அந்நாட்டிற்குள் புகுந்துள்ளன. இவர்கள் அனைவருக்கும் எதிராக ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது. இதனால் நாலு முனைப் போரை சிரியா சந்தித்துள்ளது. பழமை வாய்ந்த அலப்போ நகரம் போர்க்களமாக மாறிக் காட்சி அளிக்கின்றது. 2012ஆம் ஆண்டில் இந்த நகரை கிளிர்ச்சியாளர்கள் கைப்பற்றியிருந்தனர். அப்போது 21 லட்சம் மக்கள் வாழ்ந்த நிலையில் தற்போது வெறும் மூன்று லட்சம் மக்களே எஞ்சியுள்ளனர்.
ரஷ்யப் படைகள் கிளர்ச்சியாளர்களிடமிருந்து அலப்போ நகரத்தை கைப்பற்றியுள்ளனர். தற்போது, சிரியாவின் தலைநகர் டாமஸ்கஸுக்கு அருகில் இருக்கும் கிழக்கு கூட்டா பிராந்தியத்தை கைப்பற்றுவதற்காகவே யுத்தம் நிகழ்கிறது. சிரியப் போராளிகளிடம் எஞ்சியிருக்கும் ஒரே பகுதி இதுவே. முள்ளிவாய்க்காலைப் போலவே சுமார் மூன்றரை லட்சத்திற்கும் அதிகமான சனங்கள் தஞ்சமடைந்திருக்கும் பகுதி அது. முப்பது நாட்கள் போர் நிறுத்திற்கு ஐ.நா பாதுகாப்பு சபையில் ரஷ்யா ஒப்புதல் அளித்தது. எனினும் சிரிய அரச படைகளின் வான்தாக்குதல்கள், சிரியப் போராளிகள் வசமுள்ள கூட்டாவில் தொடர்கின்றன.
நிலமை நாளுக்கு நாள் கடும் மோசமடைந்து வருகின்றது. ஐ.நா மனித உரிமை பாதுகாப்பு சபை கூட்டத்தில் பேசிய ஐ.நா செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், “பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை திறம்பட செயல்படுத்தினால் மட்டுமே அவை அர்த்தமுள்ளவையாக இருக்கும் என்றும், அதனால்தான் இந்த தீர்மானங்களை உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும், கிழக்கு கூட்டாவால் இதற்கு மேல் காத்திருக்க முடியாது. பூமியில் இருக்கும் நரகத்தை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்றும் கூறியிருந்தார். அத்துடன் போர்நிறுத்த அறிவிப்பை உடனடியாக அமல்படுத்தி அதனை உறுதி செய்ய வேண்டும் என ஐ.நா பாதுகாப்பு சபை தீர்மானம் வலியுறுத்தியது.
உணவு, மருந்து, காயப்பட்டவர்களை காப்பாற்றும் மருத்துவக் கருவிகள் எதுவுமின்றி மக்கள் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். முதலாம் உலகப் போரை நினைவுபடுத்தும் வகையில் கூட்டா காணப்படுவதாக அங்குள்ள மருத்துவப் பணியாளர்கள் கூறுகிறார்கள். இதேவேளை சிரிய அரசாங்கம் நஞ்சு வாயு குண்டுத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாகவும் இதனால் பாதிக்கப்பட்டு பல குழந்தைகள் இறந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இராசயனத்தாக்குதலில் சிலர் மூச்சுத் திணறி இறந்துள்ளதாகவும் சிரியப் போராளி ஆதரவு மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் 4ஆம் திகதி வட-மேற்கு நகரமான கான் ஷேக்ஹூன் நகரத்தில் நடாத்தப்பட்ட கொடிய ரசாயன தாக்குதலை சிரிய அரசாங்கம்தான் நடத்தியது என ஐ.நா கூறியிருந்தது.
2011ஆம் ஆண்டில் இருந்து 12 ஆயிரத்து 763 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக சிரிய மனித உரிமைகளுக்கான குழு கூறுகிறது. எனினும் 20 ஆகஸ்ட் 2014 அன்றைய ஐக்கிய நாடுகள் சவையின் ஆய்வின்படி, 1,91,369 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைய தாக்குதலில் மாத்திரம் சுமார் 700பேர் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழப்புக்கள் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. நாட்டில் வாழ முடியாத நிலையில் கடல் வழியாக படகில் செல்லும்போது படகு விபத்துக்களில் பலர் மாண்டுள்ளனர். சொந்த நாட்டில் வாழவும் முடியாமல் நாட்டை விட்டு வெளியேறவும் முடியாத நிலையில் கூட்டா மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தம் நடக்கிறது என்று கூறுகிறது சிரிய அரசு. இலங்கையில் சிங்கள அரசு கூறிய அதே காரணம்தான். சிரியாவில் இன்று நடக்கும் போர் ஈழத்தில் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்தவையையே நினைவுபடுத்துகின்றது. ஈழ இனப்படுகொலையில் ஐ.நா அன்று வகித்த பாத்திரத்தையே இன்றும் சிரியப் படுகொலைகளில் வகிக்கிறது. ஐ.நா பாதுகாப்பு செயலாளர் கூறினார் சிரியா பூமியின் நரகம் என. எனினும் அதனை நரகமாக்கியவர்கள் பற்றி எதுவும் கூறவில்லை. அத்துடன் அதற்கான தீர்வையும் ஐ.நா நடைமுறைப்படுத்தவில்லை. அதில் தமக்குள்ள பங்கை குறித்தும் குற்ற உணர்வு கொள்ளவில்லை. ஆனால் உலக வல்லாதிக்கப் போட்டிக்கான போரினால் ஒரு தலைமுறையே அழிக்கப்படுகின்றது. ஏதும் அறியாத அப்பாவிக் குழந்தைகள் கொன்று தீர்க்கப்படுகிறார்கள்.
ஈழமும் அன்று பூமியின் நரகமாக மாறியிருந்தது. ஈழத் தமிழர்களை மாத்திரமல்ல உலகத் தமிழர்களையே சிரியப் போர் பெரும் உளவியல் தாக்கத்திற்கு உள்ளாக்கியுள்ளது. உலகிலேயே சிரியா பற்றி கூகிளிலில் அதிகம் தேடியவர்கள் தமிழர்கள் என்றும் தேடிய பகுதி தமிழகம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. ஈழப் போர் ஏற்படுத்திய தாக்கமே சிரியப் போர் தொடர்பில் தமிழர்கள் தேடுவதற்கும் துயரம் கொள்ளுவதற்குமான உளவியல் காரணங்கள் ஆகும். உலகத்தின் எல்லா இனப்படுகொலைகளும் இவ்வாறே நடந்து முடிந்தன. ஒரு இனப்படுகொலையை தடுக்கத் தவறுவதே இன்னொரு இனப்படுகொலையை செய்ய தூண்டுதலாகவும் வழியாகவும் அமைகின்றது. ஈழம், மியன்மார், சிரியா என்று நீதியற்ற படுகொலைகள் இவ்வாறே தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
இவை எல்லாவற்றுக்கும் உலகம் பதிஅளிக்க வேண்டும் . ஈழத்தில் இனப்படுகொலைக்கு நீதி வேண்டியும் இலங்கை அரசை ஐ.நா குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்கக் கோரியும் கையெழுத்துப் போராட்டம் தொடங்கியுள்ள நிலையில் அதனை குறித்து சலிப்பாக ஒரு சகோதரர் பேசினார். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஒரு வருடமாக தெருவில் இருந்து போராடுகிறார்கள். நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான். எமது மக்கள் நீதிக்கான போராட்டத்தில் ஒருபோதும் பின் நிற்கப்போவதில்லை. இனப்படுகொலைக்கான நீதியில்தான் எஞ்சியிருப்பவர்களின் வாழ்வு தங்கியிருக்கிறது. மக்களின் உணர்வுகளுக்கும் கோரிக்கைக்கும் ஏற்ப செயற்படுவதே நம் அனைவரதும் முக்கிய பணியாக இருக்க வேண்டும்.
ஈழ இனப்படுகொலை வரலாறு மறவாத வடு. மன்னிக்கவும் மறக்கவும் முடியாத பெருங்குற்றம். நேற்று நடந்து இன்று தீர்வு பெறும் விடயமல்ல இது. அத்தகைய இனப்படுகொலைக்கான நீதியை பெறுவதும் அவ்வளவு எளிதல்ல. அதற்காக தமிழர்கள் அறிவுபூர்வமாகவும் ஜனநாயக வழியிலும் கடுமையாக போராட வேண்டும். சிங்கள அரசிடம் இழந்த உரிமையை பெறுவது எவ்வளவு கடினமானதோ, அதைப்போலவே இழந்த நீதியை இந்த உலகத்திடம் பெறுவதும் கடினமானது. இதற்கு இடையிலான சூழ்ச்சிகளில் நாம் பலியடைந்தால், இன்னும் நிறைய ஈழப் படுகொலைகளையும் சிரியப்படுகொலைகளையும் சந்திக்க வேண்டும். ஈழ இனப்படுகொலைக்கான தீர்வுக்காக நாம் போராடுவதுதான் இன்னுமொரு சிரிய, ஈழ படுகொலைகளை தடுக்கும் அரணாக அமையும்.
– தீபச்செல்வன்
மூலம் – குளோபல் தமிழ்