சிரியா சகோதரனே…!
உன் கைகளில் இருக்கும்
பிணத்தின் பெறுமதியை
நன்கு அறிந்தவர்கள்
நாங்கள் ஈழத் தமிழர்கள்
பெண்மை என்பதை
பொழுது போக்கிற்காய்
உச்சரிக்கும் உன்மத்த உலகத்தில்
அது பிறப்பின் மேன்மை
என்பதை நன்கு உணர்ந்தவர்கள்
நாங்கள்
நசுக்கப்பட்ட இனத்தின்
பிள்ளைகள்
எங்கள் குருதியின்
சூடு ஆறி முடியவில்லை
அதற்குள் உங்கள் இனத்தின்
உடல்களில் பிசுபிசுப்பு
இந்த அசிங்கத்தின் மீதுதான்
நிகழ்ந்தேறுகிறது
ஜனநாயக நாடகங்கள்
ஐநாவிடம் கேட்காதே..!
அத்தனையும் நாடகம்
அழுது வடிக்காதே..!
எங்கள் கண்ணீரையும்
கப்பம் கேட்கும் உலகிது
பிரசவ வலியினை
காகிதத்தில்கூட கற்றறியாத
மடையர்களின் முன்
உன்னுடையதும் என்னுடையதும்
கதறல்
கேளிக்கையின் உச்சமாககே தெரியும்
இது கேடுகெட்ட உலகு
அவலட்சண உலகத்தில்
அழுகுரல்களுக்கு மதிப்பில்லை
இங்கே மனிதமெல்லாம்
மன்மத லீலைக்குள் மழுங்கிக்கிடக்கிறது
மதங்கள் மனிதம் செய்தன
இங்கு அரூப அறிவிலிகளின்
அதிகாரத்தில்
அசுத்தப்படுகிறது மதம்
உங்கள் குருதிகளின் பெருக்கில்
எங்கள் இதயவறைகள்
ஈடாடிப்போகிறது
உங்கள் குழந்தைகளின்
மரணத்தில்
இன்னொரு முள்ளிவாய்கால்
கண்முன் தெரிகிறது
அசுத்தக் கருவறைகளில்
ஜனித்தவர்கள்தான்
தற்கால ஆட்சியாளர்கள்..!
அவர்கள் பொழுது போக்கு
விளையாட்டில்
சிதைக்கப்படுவதெல்லாம்
சிசுக்களின் உடல்கள்
அடிப்படை மனிதம்
கொஞ்சம் இருப்பது
ஆதிவாசியிடம்
அவர்களையும் அடித்து
கொல்கிறன
ஆண்மையற்ற பிண்டங்கள்
சிரிய உறவுகளே…!
உங்கள் சிசுக்களின் மரணம்
எங்களை சிதைத்துவிடுகிறது
உண்ணுகிற உணவில்
இரத்தமே தெரிகிறது
ஐயோ..!
அந்த நந்திக்கடல் பிணவாடை
ஆத்மாவின் அந்தரங்கத்திலிருந்து
மேலேறி வந்து மிரட்டுகிறது
உங்களுக்காக பிரார்த்திப்பதன்றி
வேறு வழி தெரியவில்லை
மனிதமற்று திரிகிற கொடியோரை
மனிதர்கள் என இனியும்
நினைக்கமாட்டோமென
விலங்குகள்
எம் முகத்தில் உமிழும் காலமிது
இறைவா…!
நீ..!
இருக்கிறாயா..? இல்லையா…?
– அனாதியன் –