மருந்துகள் வழங்கல் பிரிவில் கடமையாற்றுகின்ற பிராந்திய மருந்தாளர் தொடக்கம் அனைத்து உத்தியோகத்தர்கள் ஊழியர்களும் விநியோகிக்கப்படும் மருந்துகள் குறித்து மிக விழிப்பாக இருத்தல் அவசியமாகும் என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு பிராந்திய மருந்து வழங்கல் பிரிவு கட்டடத்தொகுதி திறப்பு விழா இன்று காலை இடம்பெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,
அண்மையில் கண்சத்திர சிகிச்சையை புரிவதற்காக தனியார் மருத்துவ மனையொன்றில் அனுமதிக்கப்பட்ட சுமார் 10 பேரின் கண்கள் கெட்டுப்போன மருந்துகளைப் பாவித்த காரணத்தினால் முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ பாதிப்பிற்கு உள்ளானமை பற்றி வெளிவந்த செய்திகளை அவதானித்திருப்பீர்கள்.
எனவே மருந்து வழங்கல் பிரிவில் கடமையாற்றுகின்ற பிராந்திய மருந்தாளர் தொடக்கம் அனைத்து உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களும் விநியோகிக்கப்படும் மருந்துகள் குறித்து மிக விழிப்பாக இருத்தல் அவசியமாகும்.
மருந்துகள் கிடைக்கப்பெறும் போது தருகைப்பட்டியலில் குறிக்கப்பட்டுள்ளவாறு சரியான மருந்துகள் குறிப்பிடப்பட்ட கம்பனிகளால் தரப்பட்டுள்ளனவா என்பதனை அவதானிப்பதுடன் அவற்றின் காலாவதி தினம் பற்றியும் மிகக் கூடிய கவனம் செலுத்துதல் வேண்டும்.
அதே போன்று வழங்கப்பட்ட இந்த மருந்து வகைகள் நோயாளர்களுக்கு வழங்கப்படுவதற்கு முன்பதாக அவற்றின் தரம் மற்றும் கலாவதித்திகதி போன்றவை அவதானிக்கப்படுவதுடன் மருத்துவர்களின் சிபார்சுகளிற்கேற்பவே வழங்கப்படுதல் வேண்டும்.
தற்போது பின்தங்கிய பகுதிகளிலும் மருத்துவமனைகள் புதிதாக அமைக்கப்பட்டு மருத்துவ சேவைகளுக்காக திறந்து வைக்கப்பட்டு வருகின்றன.
எனினும் இம் மருத்துவமனைகளில் கடமை புரிவதற்கு மருத்துவர்கள் இல்லாத குறை தொடர்ந்த வண்ணம் உள்ளது.
எமது இன மருத்துவர்களின் விருப்பமின்மையால் அல்லது வேறு காரணங்களினால் தென்பகுதியிலிருந்து மருத்துவ சகோதர சகோதரிகள் இப்பகுதிகளில் கடமையாற்றுவதற்காக அனுப்பி வைக்கப்படுகின்றார்கள்.
அந்த மருத்துவர்கள் எங்கள் கிராமப்புற வைத்தியசாலைகளில் நியமிக்கப்படுகின்ற போது எமது கிராமத்து மக்களின் தமிழ் மொழி அவர்களுக்குப் புரிவதில்லை.
அதே போன்று அம் மருத்துவர்களின் தாய் மொழி எமது மக்களுக்குப் புரிவதில்லை. அதனால் முழுமையான மருத்துவ சேவைகளை வழங்க முடியாது சிரமப்படுவது பல சந்தர்ப்பங்களில் உணரப்பட்டுள்ளது.
சில காலங்களுக்கு முன்பு ஒரு மருத்துவ மனையில் கடமைக்கு அனுப்பப்பட்ட நான்கு மருத்துவர்களும் புதிதாக இணைந்து கொண்ட தென்பகுதியைச்சேர்ந்த மருத்துவர்கள்.
அவர்களுக்கு தமிழ் ஒரு சொல் கூடத் தெரியாதிருந்தது. அவர்கள் கடமையாற்றிய மருத்துவமனையோ மிகவும் பின்தங்கிய பகுதி.
ஆனால் அந்த மருத்துவமனைக்கு ஒரு நோய்காவு வண்டி வழங்கப்பட்டிருந்தது. அந்த மருத்துவர்கள் புதிய ஒரு யுக்தியை கையாண்டார்கள். எந்த நோயாளியாக இருந்தாலென்ன, காய்ச்சல் என்றாலும் சரி, வயிற்று நோவு என்றாலும் சரி, கைகால்களில் நோவு என்றாலும் சரி மருந்தெடுக்க வந்தவுடன் ஆஸ்பத்திரி நோயாளர் விடுதியில் மறித்து விடுவார்கள்.
இப்படி நான்கு பேர் சேர்ந்தவுடன் நோயாளர் காவு வண்டி மூலமாக மாவட்ட வைத்திய சாலைக்கு அனுப்பி விடுவார்கள்.
அங்கு இருந்த வைத்தியர்கள் சிரித்துவிட்டு அவர்களுக்குரிய மருந்துகளை கொடுத்து திரும்பவும் அதே காவு வண்டியில் திருப்பி அனுப்பி விடுவார்கள். இவ்வாறே மருத்துவர்கள் நிலைமையைச் சமாளித்தார்கள்.
இது யாரையும் குறைகூறவோ அல்லது எள்ளிநகையாடுவதற்காகவோ இங்கு தெரிவிக்கவில்லை. மாறாக மொழித்தேர்ச்சி இன்மையால் ஏற்படக்கூடிய சிரமங்கள் பற்றி எடுத்துக் கூறுவதற்காகவே இதனை குறிப்பிட்டிருந்தேன் என குறிப்பிட்டுள்ளார்.