தமிழீழ விடுதலைப்போராட்டப்பயணத்தில் சுமார் பதினெட்டு ஆண்டுகளாக ஓய்வின்றிஉழைத்த உத்தமத்தளபதிதான் லெப் கேணல் மங்களேஸ்அண்ணாஅவர்கள். 1990-ம்ஆண்டின் முற்பகுதிகளில் தனது பதினாறாவதுவயதில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு “மங்களேஸ்” என்ற நாமத்தைத் தனதாக்கிக்கொண்டு அன்றுமுதல் அவர் விழிமூடும்நாள்வரையிலும் அவர் விடுதலைக்காக ஆற்றிய பணிகள் மிகநீண்டது. தொடக்கத்தில் ஒரு போராளி பெற்றுக்கொள்ளவேண்டிய படையப்பயிற்சிகளை நிறைவுசெய்துகொண்டு இயக்கத்தின் அப்போதய பிரதித்தலைவர் திரு மாத்தையாஅவர்களின் தாக்குதலணியில் தனது களப்பணிகளை முன்னெடுத்திருந்தார். 1991-ம்ஆண்டு யூலைமாதத்தில் ஆனையிறவுப்படைத்தளம்மீது விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட “ஆகாயக்கடல்வெளி” நடவடிக்கையில் ஒருபோராளியாகப்பங்கெடுத்திருந்தவர். அதனைத்தொடர்ந்து மணலாற்றில் சிறிலங்காப்படைகளால் முன்னெடுக்கப்பட்டிருந்த “மின்னல்” இராணுவநடவடிக்கையை எதிர்த்து விடுதலைப்புலிகள் மேற்கொண்ட எதிர்த்தாக்குதல் நடவடிக்கையிலும் தனது போராற்றலை வெளிப்படுத்தியிருந்தார் மங்களேசண்ணா.
1992-ம்ஆண்டுகாலப்பகுதியில் கடற்புலிகள் அணிக்கு பிரிவுமாற்றம்பெற்றுவந்த மங்களேசண்ணா வேவுநடவடிக்கைகளில் ஈடுபட்டு அதைத்தொடர்ந்து கடற்புலிகளின் ஆழ்கடல் விநியோகநடவடிக்கையின் பிரதானதளமான சாலைத்தளத்தில் நின்று விடுதலைப்போராட்டத்திற்கு வளம்சேர்க்கின்ற பலம்சேர்க்கின்ற நடவடிக்கையான ஆழ்கடல் விநியோகநடவடிக்கைகளில் திறமையுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்டு சிறப்புத்தளபதி சூசைஅவர்களின் நம்பிக்கைக்குப்பாத்திரமாகவிளங்கினார். அவரது ஆளுமையை இனம்கண்டுகொண்ட சூசைஅவர்கள் விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணத்தை தளமாகக்கொண்டு செயற்பட்ட காலப்பகுதியில் மங்களேசண்ணா கடற்புலிகளின் வன்னிமாவட்டத்தளபதியாகவும் குறிப்பிட்டகாலம் செயற்பட்டிருந்தார். அதைத்தொடர்ந்து 1996-ம்ஆண்டு ஏப்ரல்மாதத்தில் யாழ்குடாநாடு முழுமையாக அரசபடையினரால் ஆக்கிரமிக்கப்பட்டதையடுத்து விடுதலைப்புலிகள் வன்னிப்பெருநிலப்பரப்பை தளமாகக்கொண்டுசெயற்பட்டகாலப்பகுதியிலும் ஆழ்கடல் விநியோகநடவடிக்கைகளை முன்னெடுத்துக்கொண்டிருந்த மங்களேசண்ணா 1996-ம்ஆண்டு யூலைவமாதத்தில் விடுதலைப்புலிகளால் “ஓயாதஅலைகள்-01” எனப்பெயரிடப்பட்டு முல்லைத்தீவுப்படைத்தளத்தை மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்ட வெற்றிச்சமரின்போதும் படையினருக்கு உதவுவதற்காக கடல்வழியாக கடற்படையினர் மேற்கொண்ட முயற்சிகளை முறியடித்து குறித்த முல்லைப்படைத்தளம் வெற்றிகொள்ளப்படுவதற்கு மங்களேசண்ணாவின் உழைப்பும் அர்ப்பணிப்பும் மிகவும் காத்திரமானது. இதன்பின்னரான காலப்பகுதியில் மணலாறு-செம்மலையைத்தளமாகக்கொண்டு செயற்பட்ட கிழக்குமாகாணத்திற்கான கடல்வழி விநியோகஅணிக்குப்பொறுப்பாளராகச் செயற்பட்ட மங்களேசண்ணா அந்த விநியோகநடவடிக்கைகளிலும் பங்கெடுத்திருந்தார். குறித்த இந்த கிழக்குமாகாணத்திற்கான கடல்வழிநடவடிக்கையின்போது ஒருசந்தர்ப்பத்தில் திருகோணமலை-புடவைக்கட்டுக்கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட கடற்சமரில் மங்களேசண்ணா வயிற்றுப்பகுதியில் விழுப்புண்பட்டிருந்தார். தீவிரமருத்துவச்சிகீச்சைகளின்மூலம் தேறிய மங்களேசண்ணா மீண்டும் களப்பணிகளிலேயே தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இதனைவிட வேறுபல தாக்குதல்களிலும் மங்களேசண்ணா விழுப்புண்பட்டிருந்ததுவும் குறிப்பிடத்தக்கது. கிழக்குமாகாண விநியோக நடவடிக்கையைத்தொடர்ந்து மன்னார் மாவட்டத்தைத்தளமாகக்கொண்டு இந்தியா-தமிழ்நாட்டிலிருந்து எமது போராட்டடத்திற்குத்தேவையான மருந்துப்பொருட்கள் உபகரணங்கள் மற்றும் ஏனையமூலவளங்களையும் கடல்வழியாகத் தாயகத்திற்குக்கொண்டுவந்துசேர்க்கின்ற உயரியபணிகளையும் செவ்வனேசெய்திருந்தார் மங்களேசண்ணா. ஆழ்கடல்நடவடிக்கை கிழக்குமாகாணத்திற்கான கடல்நடவடிக்கை மன்னார்-தமிழ்நாடு கடல்நடவடிக்கை என அனைத்து சவால்கள்நிறைந்த கடல்நடவடிக்கைகளிலும் பங்குகொண்டிருந்த மங்களேசண்ணா அந்த நடவடிக்கைகளில் பல கடற்சமர்களையும் கண்டிருந்தார்.
1999-ம்ஆண்டு டிசெம்பர்மாதத்தில் விடுதலைப்புலிகளால் முன்னெடுக்கப்பட்டிருந்த ஓயாதஅலைகள்-03 நடவடிக்கையில் வெற்றிலைக்கேணி-கட்டைக்காடு படைத்தளங்கள் விடுதலைப்புலிகளால் வெற்றிகொள்ளப்பட்டபோது சமநேரத்தில் கட்டைக்காட்டிற்கும் ஆனையிறவிற்கும் இடைப்பட்டபகுதியிலுள்ள புல்லாவெளி என்னும் இடத்தில் அமைந்திருந்த படையினரின் முகாமை கைப்பற்றுகின்ற பொறுப்பு மங்களேசண்ணாவிடம்தான் ஒப்படைக்கப்பட்டிருந்தது. புல்லாவெளிக்கு தாக்குதலணிகளை நகர்த்துவதானால் சுண்டிக்குளம் நீரேரியூடாக படகுகளில்த்தான் அணிகளை நகர்த்தவேண்டியிருந்தது. அதற்கமைவாக மங்களேசண்ணா தலைமையிலான தாக்குதலணி இயந்திரங்கள் பொருத்தப்பட்ட சிறியவகைப்படகுகளில் சுண்டிக்குளம நீரேரியூடாகச்சென்று முகாமை அண்மித்ததும் இயந்திரத்தின் சத்தங்கள் படையினருக்கு கேட்கும் என்பதால் குறிப்பிட்ட தூரம்வரைக்கும் தண்ணீருக்குள்ளால் படகுகளை தள்ளிச்சென்று புல்லாவெளியில் தரையிறங்கி புல்லாவெளி படைமுகாம்மீது தாக்குதல்களைத்தொடுத்து அந்த முகாமை வெற்றிகொண்டனர். வெற்றிலைக்கேணி கட்டைக்காடு புல்லாவெளி படைத்தளங்களின் வெற்றியே தொடர்ந்துவந்த ஆனையிறவுப்படைத்தளத்தின் வெற்றிக்கு திறவுகோல்களாக அமைந்திருந்தன.
ஆனையிறவுப்படைத்தளத்தை வெற்றிகொள்வதற்காக 26-03-2000அன்று விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட வரலாற்றுமுக்கியத்துவம்வாய்ந்த குடாரப்பு தரையிறக்கத்தின்போது வெற்றிலைக்கேணியைத்தளமாகக்கொண்டு தரையிறங்கவேண்டிய அணிகளை படகுகளில் ஏற்றி அனுப்புகின்ற பிரதானபொறுப்பாளராக மங்களேசண்ணா தேர்வுசெய்யப்பட்டிருந்தார். லெப் கேணல் பாக்கியண்ணாவின் உதவியோடு தரையிறங்கவேண்டிய ஆயிரத்துஇருநூறு போராளிகளையும் குறித்தநேரத்திற்குள் படகுகளில் ஏற்றி அனுப்பிவைத்து குடாரப்பு தரையிறக்கநடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு மங்களேசண்ணாவின் அர்ப்பணிப்பும் உழைப்பும் மிகவும் முக்கியமானது.
2001-ம்ஆண்டு செப்ரெம்பர்மாதத்தில் மங்களேசண்ணா கடற்புலிகளின் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். (அதாவது சிறப்புத்தளபதிக்கு அடுத்தநிலையான பொறுப்பு) கடற்புலிகளின் நிர்வாகச்செயலகம் கடற்புலிகளின் அரசியல்த்துறை கடற்புலிகளின் புலனாய்வுத்துறை கடற்புலிகளின் மருத்துவப்பகுதி முதலான கடற்புலிகளின் நிர்வாகக்கட்டமைப்புக்கள் அனைத்தையும் நேர்த்தியுடன் நிர்வகித்தமை. மக்கள் சந்திப்புக்கள். மக்கள் அபிவிருத்திக்கட்டமைப்புக்கள். மீள்குடியேற்றம். சுனாமிஆழிப்பேரலைஅனர்த்தம் ஏற்பட்ட காலப்பகுதியில் சுனாமி மீள்கட்டுமானப்பணிகள். 2005 2006-ம்ஆண்டுகாலப்பகுதிகளில் மணலாறு-நாயாற்றுப்பகுதியைத்தளமாகக்கொண்டு திருவடி மக்கள்படைக்கட்டுமானப்பயிற்சிப்பாசறையை நிறுவி முல்லைத்தீவுமாவட்டத்தின் கரையோரப்பகுதிகளைச்சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு மக்கள்படைப்பயிற்சிகளை வழங்கி ஒருவலுவான மக்கள்படைக்கட்டுமானத்தை உருவாக்கியது என அவர் கடற்புலிகளின் தளபதியாகப்பொறுப்புவகித்த சுமார் ஐந்துஆண்டுகளுக்கு மேலாகவும் அவர் எமது விடுதலைப்போராட்டத்திற்கு ஆற்றிய பணிகள் நீண்டுகொண்டேசெல்கின்றது. இந்தக்காலப்பகுதியில் தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரன்அவர்கள் கடற்புலிகளில் முதன்மையாகச்செயற்பட்ட பதினொரு இளநிலைத்தளபதிகளை அழைத்து அவர்களை கௌரவித்து கைத்துப்பாக்கிகள் (பிஸ்ரல்) வழங்கியபோது அந்த அணியில் மங்களேசண்ணாவும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2006-ம்ஆண்டு டிசெம்பர்மாதத்தில் பணிநிமிர்த்தமாக போர்க்கருவித்தொழிலகத்திற்கு பிரிவுமாற்றம்பெற்றுச்சென்று அங்கு குறுகியகாலம் கடமையாற்றிவிட்டு பின்னர் தேசியத்தலைவர் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக படையப்புலனாய்வுப்பிரிவில் மங்களேசண்ணா உள்வாங்கப்பட்டு மன்னார்மாவட்டத்தில் குறித்த ஒருபகுதிக்களமுனைக்கு கட்டளைத்தளபதியாக மங்களேசண்ணா நியமிக்கப்பட்டு அங்கு களநடவடிக்கைகளை முன்னெடுத்துக்கொண்டிருந்தார்.
08-03-2008அன்று அரசபடையினர் ஆக்கிரமித்திருந்த ஒருபகுதியை மங்களேசண்ணா தலைமையிலான அணி அரசபடையினர்மீது தாக்குதலைத்தொடுத்து படையினரை அங்கிருந்து விரட்டியடித்ததையடுத்து அந்தப்பகுதியை கிளியர்பண்ணிக்கொண்டிருக்கையில் படையினர் புதை;துவிட்டுச்சென்ற மிதிவெடிகள் அடுத்தடுத்து வெடித்ததில் போராளிகளாலும் பொதுமக்களாலும் ஆழமாக நேசிக்கப்பட்ட எங்கள் மங்களேசண்ணா தாய்மண்ணை முத்தமிட்டு வீரச்சாவைத்தழுவிக்கொண்டார். சுமார் பதினெட்டு ஆண்டுகளாக தமிழீழமண் விடுதலையே உயிர்மூச்சாக வாழ்ந்து அந்த மண்ணினதும் மக்களினதும் விடுதலைக்காக விழிமூடிக்கொண்ட மங்களேசண்ணாவினதும் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தங்களது இன்னுயிர்களை ஆகுதியாக்கிக்கொண்ட ஆயிரமாயிரம் மாவீரர்களினதும் நினைவுகளுடன் எமது விடுதலைப்பயணத்தைத்தொடர்வோமாக…
நினைவுப்பகிர்வு:
– கொற்றவன்.