8 மார்ச் 2018
நானொரு பெண்ணாக இருப்பதால்…..
எத்தனை சம்மட்டிகள் அறைந்தபொழுதிலும்
நான் மேலே மேலே எழுந்துநிற்கிறேன்…
வலிகளும் வேதனைகளும்
எனக்குப் புதியவையல்ல…….
என்கனவுகளைப் பற்றிய அச்சுறுத்தல்கள் குறித்து
ஒருபோதும் நான் கலங்கியதில்லை…..
நானொரு பெண்ணாக இருப்பதால்.
எத்தனை முறை துண்டித்தாலும் எவருக்கும்
தாழ்ந்து போகாமல் தலை நிமிர்ந்துள்ளேன்…….
புதைக்கப்படும் போதெல்லாம் பூமிபிளந்து
முளைக்கின்ற வீரியம் கொண்டிருக்கிறேன் …..
திசைமாற்றும் போதெல்லாம்
திரும்பிவரும்பாதையை தெரிந்திருக்கின்றேன்….
நானொரு பெண்ணாக இருப்பதால்.
என்நட்சத்திரங்கள் பறிக்கப்படும் வேளைகளில் என்
சூரியனை உற்பவிக்க முடிகிறது என்னால்……
என்சூரியன் மறைக்கப்படும் போது
எரிமலையாகிவிடுகிறேன் நான்………
தோல்வியை எனக்கு பரிசளிக்க எண்ணும்போது
வெற்றியின் விளிம்புக்கு சென்றுவிடுகிறேன் நான்…..
நானொரு பெண்ணாக இருப்பதால்.
என்னைப்பற்றிய பொய்கள் புனையப்படும்போது
மௌனமாய் அவற்றை தகர்த்துவிடுகிறேன்………..
கண்களில் துளிகள் கருவுறும் கணங்களில்
புன்னகையால் அவற்றை மூடிவிடுகிறேன்……..
சிலுவைகளை எந்தன் தோளேற்றும்போது
பஞ்சென அவற்றை ஊதிவிடுகிறேன்………
நானொரு பெண்ணாக இருப்பதால்.
எனக்கானகுழிகள் தோண்டப்படும் போதே
என் வெற்றிப்படிகளை கட்டமைத்துவிடுகிறேன்…
முகங்களைப் பார்த்தே அகங்களைப் படிக்கும்
வல்லமையை நான் வளர்த்திருக்கிறேன்…..
இன்னா செய்தார்க்கும் இரங்குகின்ற
எளிமையையும் நான் பெற்றிருக்கிறேன்
நானொரு பெண்ணாக இருப்பதால்.
– ஆதிலட்சுமி சிவகுமார்.