இலங்கையின் கண்டியின் சில பகுதிகளில் சிங்களப் பேரினவாதிகளால் இஸ்லாமி மக்கள்மீது தொடுக்கப்பட்டுள்ள இனவன்முறைகள் அந்த மக்களை பெரும் பதற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளன. ஈழத் தீவு எங்கும் வாழும் முஸ்லீம் மக்கள் இருப்பு குறித்த அபாய உணர்வுடன் வாழ வேண்டிய நிலைக்கு கண்டி வன்முறைகள் தள்ளியுள்ளன. கண்டியில் பற்றி எரியும் வீடுகளும் வியாபார நிலையங்களும் தமிழர்களுக்கு 1983ஐ நினைவுபடுத்துகின்றன.
இலங்கையில் முதன் முதலில் இன வன்முறையை எதிர்கொண்டவர்கள் இஸ்லாமியர்கள். 1915ஆம் ஆண்டில் இந்த வன்முறை மேற்கொள்ளப்பட்டது. 58 மற்றும் சில வன்முறைகளுடன் இலங்கைத் தீவின் வரலாற்றில் மிக மோசமான இனவன்முறையை ஈழத் தமிழ் மக்கள் 1983இல் எதிர்கொண்டார்கள். இதனை கலவரம் என்கிறார்கள். ஒருபோதும் இதனை கலவரம் என்று அழைக்க முடியாது. ஈழத் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டது கலவரமல்ல. கலவரம் என்பது இரு இனத் தரப்பினரும் மோதிக் கொள்ளுவதாகும். ஒரு இனத்தவர்களை இன்னொரு இனத்தவர்கள் தேடித் தேடி அழிப்பது இனக்கலவரமல்ல. அது இன அழிப்பு. அதுவே 1983 ஜூலையில் நடந்தது. ஈழத் தீவு முழுவதும் தமிழர்கள் தேடித் தேடி அழிக்கப்பட்டார்கள்.
உலகில் எங்கும் நடந்திராத வகையில் – மிக மோசமான முறையில் ஈழத் தமிழ் மக்கள் கொன்றழிக்கப்பட்டார்கள். வீதியில் ரயர்களில் போட்டு எரிக்கப்பட்டார்கள். வெட்டி கொன்று வீசியெறிப்பட்டார்கள். வாகனங்களுடன் வீடுகளுடன் கொளுத்தப்பட்டார்கள். பச்சைக் குழந்தைகள்கூட இவ்வாறுதான் நசித்து அழிக்கப்பட்டார்கள். ஜூலைப் படுகொலையில் சில ஈழத் தலைமுறைகளே அழிந்துபோயின. அதற்குப் பின்னரும்கூட ஈழத்தின் பல்வேறு பகுதிகளிலும் இலங்கை அரச படைகளால் உத்தியோகபூர்வமான முறையில் தமிழர்கள் அழிக்கப்பட்டார்கள். அதனையெல்லாம் பயங்கரவாத்திற்கு எதிரான நடவடிக்கை என்றே இலங்கை அரசு அழைத்தது.
இன்று நடப்பது இனக்கலவரங்கள் என்பதுபோலவே அவை பயங்கரவாத்திற்கு எதிரான யுத்தமாக காட்டப்பட்டது. 1983 ஜூலைப் படுகொலை அன்றைய அரசால் முன்னெடுக்கப்பட்டது. அதைப்போலவே அதற்குப் பிந்தைய அரசுகளாலும் ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக பல இனப்படுகொலைகள் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டன. பயங்கரவாத்திற்கு எதிரான யுத்தம் என்று சொல்லிக் கொண்டே எமது உரிமைகளை மறுத்துக் கொண்டும் எமது நிலங்களை சுருட்டிக் கொண்டும், நாம் வரலாறு முழுவதும் அழிக்கப்படோம். அதற்கு எதிராக அவசரகாலச் சட்டமும் பயங்கரவாத தடைச்சட்டமும் கொண்டுவரப்பட்டது. அந்த சட்டங்கள் ஊடாகவும் நாங்கள் அழித்தொழிக்கப்பட்டோம். எங்களை மிக இலகுவாக அழித்தன அந்தச் சட்டங்கள். எமை அழித்தவர்களை காப்பற்றின அந்தச் சட்டங்கள்.
அதற்கான நீதியை கோரும் ஒரு காலப் போராட்டத்தில் ஈழத் தமிர்கள் உள்ளன. உலகில் அதிகம் விபத்துக்கள் இடம்பெறும் நாடுகளில் இலங்கை முதல் நிலையில் உள்ளது. அரச போக்குவரத்தின்மை, தொடருந்து போன்ற வசதிகளின்மை, அகலமற்ற வீதிகள், தனியார் வாகனப் பயன்பாடு அதிகரித்தமை போன்ற காரணங்களால் இலங்கையில் விபத்துக்கள் அதிகம் நிகழ்கின்றன. அத்துடன் வடக்கு கிழக்கில் விபத்துக்கள் மேலும் அதிகரித்துக் காணப்படுகின்றன. இலங்கைளில் விபத்துக்கள் சாதாரணமாக கருதப்பட்டுள்ள நிலையில் அண்மையில் நடந்த ஒரு விபத்து ஒன்றில் இருந்தே இந்த இன வன்முறை வெடித்துள்ளதாக காட்டப்படுகிறது.
குறித்த விபத்தை யாரேனும் தமக்காக பயன்படுத்துகிறார்களா? தமது அரசியலுக்காகப் பயன்படுத்துகிறார்களா என்பதே இங்கு முக்கியமான சந்தேகமாகும். தென்னிலங்கையைப் பொறுத்த வரையில் ஈழம் மலர்ந்துவிட்டது என்று அரசியல் செய்பவர்களும் அதனை நம்பி கொந்தளிப்பவர்களும் உண்டு. எனவே இந்தப் பின்னணியிலேயே இதனை ஆராய வேண்டும். தமிழ் பேசும் மக்கள் எப்போதுமே சிறுபான்மையராக ஒன்றுபட்டிருக்க வேண்டும். முள்ளிவாய்க்கால் யுத்தம் நடந்தபோது – அதன் வெற்றியின்போது சில இஸ்லாமியர்கள் சிங்களவர்களுடன் பாற்புக்கை காய்ச்சி உண்டார்கள் என்றால் அதைப்போலவே நாமும் நடந்து கொள்ள வேண்டியதில்லை. நாம் ஈழத் தமிழர்கள்.
இன வன்முறையின் -பேரினவாத்தின் கொலைக் குணங்களால் அதிகமும் பாதிக்கப்பட்டவர்கள். அதற்கு எதிராக உன்னதமாகப் போராடியவர்கள். எங்கள் போராட்டத்தின் நியாயத்திற்கும் போரில் இழைக்கப்பட்ட இனக்கொலை அநீதிக்குமாகப் போராடுபவர்கள். எமது போராட்டம் வன்முறையானதல்ல. வன்முறைக்கு எதிரானது. வன்முறைக்கு எதிரான போராட்டமே ஈழப்போராட்டம். இதனால் சிங்களப் பேரினவாதிகளின் வன்முறைகளை நாம் ரசிப்பது எமது இலட்சியத்திற்காக மாண்டவர்களை அவமதிக்கும் செயல். இந்த நாட்டில் முதல் வன்முறையை எதிர்கொண்ட இஸ்லாமியர்கள் அதனை மறந்து பெரும்பான்மையினருக்கு நெருக்கமாய் இருக்க முடியும் என்றால் மொழியால் தாய் மூலப் பிறப்பால் ஒன்றுபட்ட தமிழர்களுடன் தமிழ் மக்களாய் ஏன் ஒன்றுபட்டு பயணிக்க முடியாது.
தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை ஒடுக்குவதிலும் தமிழ் ஈழ நிலத்தை அபகரிப்பதிலும் அதனை சுருங்கச் செய்வதிலும் சிங்கள அரசுக்கு முண்டு கொடுத்த சில இஸ்லாமியத் தலைவர்கள் இப்போது ஆயுதம் ஏந்தப் போகிறோம் என்று சொல்வது எத்தனை வேடிக்கையானது? அன்று தமிழ் மக்கள்மீது குண்டுகள் கொட்டப்பட்டபோது, அதனை நியாயப்படுத்தினர். தமிழர் ஆயுதம் ஏந்திப் போரிட்டமைக்கு எதிராக பிரச்சாரம் செய்தவர்கள் எப்படி இவ்வாறு பேச இயலும்? கொஸ்கமவில் வன்முறை நிகழ்ந்தபோதும் நாம் அதற்காக கொந்தளித்தோம். ஆனால் கிழக்கு மாகாண சபையிலும் வடக்கின் எல்லைகளிலும் சிலர் தமிழ் சமூகத்தில் மத முரண்பாட்டை ஏற்படுத்தி தமது சுயநல அரசியல்களை செய்கின்றனர். ஆனால் தழிமர் தரப்பு கிழக்கு மாகாண சபையில் விட்டுக்கொடுப்பை செய்தது.
சிங்களப் பேரினவாத்தின் எழுச்சியும் வரலாற்று ரீதியாக அது கொண்டிருக்கும் பலமும் தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக நடக்கும் இன வன்முறைகளும் தமிழ் பேசும் சமூகமாக இஸ்லாமியர்களும் ஈழத் தமிழர்களும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டிய அவசியத்தையே மீண்டும் மீண்டும் உணர்த்துகின்றன. இதற்குப் பிறகேனும் அந்த மாற்றம் என்கிற ஒற்றுமை ஏற்படுமா? விட்டுக்கொடுப்பு ஏற்படுமா? எவ்வாறெனினும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகள் கண்டிக்கப்படவேண்டியவை. பாதிக்கப்பட்ட, பாதிக்கப்படும் இனமாக இதற்கு எதிராக குரல் கொடுப்பது எமது கடமை.
வன்முறையை தூண்டியவர்கள் சமூக வலைத்தளங்களில் அப்படியே உள்ளனர். ஆனால் வன்முறைக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள்தான் சமூக வலைத்தளங்களுக்கு வர முடியாமல் தடுக்கப்பட்டுள்ளனர். இன்று உலகில் அரசுகளும் ஜனாதிபதிகளும் பிரதமர்களும் சமூக வலைத்தளங்களின் துணையுடன் ஆட்சி செய்கின்றனர். சில நாடுகளில் சமூக வலைத்தளங்களால் புரட்சியும் ஆட்சி மாற்றமும் ஏற்பட்டுள்ளது. ஏன் இலங்கையின் ஆட்சி மாற்றத்திற்னேக சமூக வலைத்தளங்கள் கணிசமான பங்களிப்பை வழங்கியுள்ளன.
இன்று சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையம் ஊடாக ஊடகங்கள் மாத்திரமின்றி அரச நடவடிக்கைள் தனியார் நிறுவன இயக்கங்கள் மற்றும் வணிக நடவடிக்கைகள் என்பன முன்னெடுக்கப்படுகின்றன. இந்த நிலையில் சமூக வலைத்தளங்களை தடைசெய்வதும் இணைய வேகத்தை குறைப்பதும் வன்முறைகளை குறைக்கும் என்பது வேடிக்கையானது. சீப்பை எடுத்து ஒளித்து வைத்துக் கொண்டால் கலியாணம் நின்று விடும் என்பதற்கு ஒப்பான கேலிக்கூத்தாக அமைகிறது இலங்கை அரசின் சமூக வலைத்தளங்கள்மீதான கட்டுப்பாடு. ஒடுக்க வேண்டியது சமூக வலைத்தளங்களையல்ல, இலங்கை அரசாலும் அரசியல் அமைப்பு ஊடாகவும் வரலாற்று ரீதியாகவும் மிக ஆழமாகவும் பரந்து விரிந்துள்ளதுமான சிங்களப் பேரினவாதத்தைப் போக்கையே ஒடுக்க வேண்டும்.
-தீபச்செல்வன்.
மூலம்
குளோபல் தமிழ் .