எல்லையில்லா கலவரங்களுக்கு
மத்தியில்
புத்தனுக்கான தாமரைகள்
மலர்ந்துகொண்டுதான் இருக்கின்றன
ஆதிக்கம் மூட்டிய தீயின்
ஆக்ரோச நடனத்திலும்
அல்லாவின் முன் மண்டியிடுகின்றன
முழந்தாள்கள்
கொத்தாய் சிதைக்கப்பட்ட
பிணக்கடலின் நீர் எடுத்து
இவ்வருடமும் எரியவிருக்கிறது
வற்றாப்பளை அம்மன் விளக்கு
தாமரைகள் மலர்வதற்கு முன்னரே
பறித்துவிடுகிறார்கள்
புத்தனின் காலடியில் பதிக்க
ஆயுள் முடியமுன் சிசுக்களை
கொலை செய்து போட்ட
அதே கரங்கள்
இந்த இராச்சியத்தின்
பூர்வீகம்
சுயாதீனச் சக்கரங்களால்
நகர்ந்ததை நீங்கள் மறுதலிக்கிறீர்கள்
ஊரடங்குச் சட்டத்தின் மூலம்…
அவசரகாலச் சட்டத்தின் மூலம்….
எங்கள் தலைகளை அறுத்த
கத்திகளை சுத்தம் செய்து
பத்திரப்படுத்திவிடுகிறீர்கள்
நாங்களும் குறைந்தவர்கள்
அல்ல
என்றோ ஒருநாள் நிகழ்ந்தேறிய
அறியாமையின்
கொடும் பரிசில்களை
காலகாலத்திற்கும்
கடத்திக்கொண்டுதான் இருக்கிறோம்
தலைவர்கள் தலைவர்களாக
இருப்பதற்கு
தலைவர்களின் வங்கிப் பெறுமதி
பெருகுவதற்கு
சில கடைகள், சில தலைகள்
சிதைக்கப்படுவது ஆச்சரியமல்ல
சோரம் போகாத தேசியத் தலைவனை
துரோகத்தால் வீழ்த்தியவர்
மத்தியில்
நிகழ்ந்தேறுகிற
நல்லாட்சி நாடகத்தில்
நசுங்குவோம் வாருங்கள்
நாங்கள் முட்டாள்கள்
யாரோ ஒருவர்
கொழுத்திவிட்ட நெருப்பில்
எங்களில் ஒருவரை
மாறி மாறி தள்ளி வீழ்த்துகிறோம்
வடக்கிலிருந்து தெற்கு நோக்கி
ஓடும் சிவந்த ஆற்றிற்கு
மரணம் கிடையாது
அதை வற்றவிடாமல் பார்ப்பதற்கு
நாங்கள் எல்லோரும் தயார்
எங்களிடம்
நிறையவே இருக்கிறது
துரோகம்
– அனாதியன் –