அண்மையில் லண்டனில் “கழுத்தை வெட்டி கொல்லுவோம் ” என்று சைகை மூலமாக மிரட்டல் விடுத்த இராணுவத் தளபதி பிரிகேடியர் பிரியங்கவின் மனிதமற்ற செயலை பலர் கண்டித்தார்கள். பலர் “அதில் என்ன இருக்கு இதையெல்லாம் பெரிசு படுத்த வேண்டாமே…, ” என்றார்கள். “புலி சீறிய தெருவில் ஒரு சிங்கம் சைகை தானே காட்டியது. ” என்று பிதற்றினார்கள் சிலர். “புலிக் கொடியை ஏன் தூக்கிப் பிடித்தார்கள் அதனால் தானே இவ்வாறு அந்த சிங்கள இராணுவத் தளபதி மிரட்டல் விட்டார் ” என்று கொல்வேன் என்று மிரட்டியவனுக்கே பரிந்து பேசினார்கள் சிலர்.
என பலவாறு பல கருத்துக்கள் வெளி வந்து கொண்டிருக்கிறது. இத்தகைய கொடூர முகத்தைக் கொண்ட சிங்களப் படைகளை எதிர்த்து நின்ற எம் வீரத்தளபதிகளின் மனிதமும் உயிர்கள் மீதான உயிர்ப்புள்ள பிடிப்பும் ஒப்பிட முடியாதவை.
“ஜூலியட் மைக்” (Juliet mig ) இந்த குறியீட்டுப் பெயருக்கு சொந்தக்காறனை பலருக்கு தெரியாமல் இருக்கலாம். அவரை பலர் காணாமல் கூட இருக்கலாம். ஆனால் அவரின் செயற்பாடுகளை, வீரத்தை, தமிழீழம் மீது கொண்ட பாசத்தை அறிந்து கொள்ளாதவன் எதிரியாக கூட இருக்க முடியாது என்றே நான் கூறுவேன். அவ்வளவு மனவலிமையும் உறுதியான தேசப்பற்றும் கொண்ட மூத்த தளபதி. விசேட வேவுப் பிரிவின் பொறுப்பதிகாரி. மன்னார் களமுனையின் நீண்ட நாள் நண்பன், தளபதி, பொறுப்பாளர், சண்டைக்காறன் என பல நூறு நிலைகளை வகித்தவர். இப்போது இந்த சங்கேத பெயரின் சொந்தக்காறன் பிரிகேடியர் ஜெயம் என்பது புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.
மூத்த தளபதி ஜெயம் அவர்களின் சண்டைகள், வேவுகள், கட்டளைகள் என பலரும் அவர் சார்ந்த பலவற்றை அறிந்தாலும், பகிரப்படாத மென்மையான பக்கமும் அவருக்கு உண்டு என்பதை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். அந்த உயர்ந்த இராணுவ மிடுக்கு கொண்ட திடமான மனிதன் மிகவும் மென்மையானவர் எளிமையானவர் என்பதை அறியாதவர்கள் இருக்க மாட்டார்கள்.
நான் அவரை முதன் முதலாக கண்ட காட்சி இன்றும் மனத் திரையில் பதிந்துள்ளது.
2000 ஆம் ஆண்டு காலப்பகுதி, நானும் என் நண்பனும் புத்துவெட்டுவான் கொக்காவில் வீதியூடாக முறிகண்டி சென்று அதனூடாக புதுக்குடியிருப்பு போவதற்காக கொக்காவில் தொலைத்தொடர்புக் கோபுரத்தடியில் போய்க் கொண்டிருந்தோம். அப்போது கொக்காவில் பகுதியில் எதிரே ஒரு MD90 உந்துருளி வந்து கொண்டிருக்கிறது. வெள்ளை நிற சாறமும் பழும்பு மஞ்சள் நிற சட்டையும்( Shirt ) போட்டுக் கொண்டு உயரமான ஒருவர் தனது நண்பனுடன் ( பாதுகாவலனுடன்) வந்து கொண்டிருக்கிறார். எம்மைக் கண்டவுடன் கையைக் காட்டி நிறுத்திய போது நான் எதுவும் விளங்காமல் முழிக்கிறேன்.
ஆனால்
“நிப்பாட்டு மச்சான் நிப்பாட்டுடா… “
என்று கத்துகிறான் என் நண்பன்.
“நில்லுடா வாறன் …”
என்று கூறிச் செல்கிறான். போனவன் 10 நிமிசமாக அவருடன் சிரித்து கதைத்தபடி நின்றான். எனக்கும் அவர்களுக்குமிடையே 40-50 மீட்டர் இடைவெளி இருந்ததால் எனக்கு எதைக் கதைத்தார்கள் என்று எதுவும் விளங்கவில்லை. இறுதியாக அவர் இவனின் முதுகில் தட்டிக் கொடுத்து பாராட்டியது மட்டும் புரிந்தது.
நண்பன் அவரை வழியனுப்பி விட்டு வந்தான்.
மச்சான் யார் என்று தெரியுமா?
இல்லையே….
மச்சி ஜெயம் அண்ணைடா…
என்னடா சொல்லுறாய்…?
நான் அதிர்ந்து போனேன். எமது விடுதலை அமைப்பின் மூத்த தளபதி. எந்த பாதுகாப்பும் இன்றி சாதாரணமாக எம்மைப் போல பயணம் செய்ததை என்னால் நம்பவே முடியவில்லை. பாதுகாப்புக்கு இடுப்பில் இருந்த கைத்துப்பாக்கி மட்டும் தான் இருந்திருக்கும் என்று நம்புகிறேன். ஏனெனில் வேறு எந்த ஆயுதங்களையும் நான் காணவில்லை. பாதுகாப்பு போராளியிடமும் எந்த ஆயுதங்களும் இருந்ததுக்கான அறிகுறி இல்லை.
அவ்வாறான எளிமை மிக்க எம் தளபதி வேவினூடாகவும் சண்டைகளின் ஊடாகவும் சாதித்தவை கொஞ்சமல்ல. அவற்றை பல இடங்களில் பலர் பகிர்ந்து கொண்டாலும், அவரது மென்மையான பக்கங்களை இப்போது பகிர வேண்டிய தேவை எழுந்திருக்கிறது. ஏனெனில் தமிழீழ விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் என உலகத்திடம் பரப்புரை செய்யும் நல்லாட்சி என்று தம்மைக் காட்டிக் கொண்ட இனவழிப்பு அரசுக்கு புரியாத புதிராக இருப்பது இவர்களிடம் எப்படி இத்தனை மென்மையான இதயம் என்பது மட்டுமே.
ஏனெனில் இன்றும் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட பல நூறு பொதுமக்கள் இன்றும் விடுதலை செய்யப்படாது அரசியல் கைதிகளாக சிறைகளில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் விடுதலைப்புலிகளிடம் சரணடைந்த இராணுவம் குறுகிய நாட்களில் தனது வீடுகளுக்கு விடுதலையாகிச் சென்றது வரலாறு. அதை விட அவர்கள் மீது விடுதலைப்புலிகள் என்றும் அடாவடித்தனத்தை பிரயோகித்தது இல்லை. கைதியாக சிறைகளில் இருந்தார்களே அன்று சித்திரவதைகளை அனுபவித்ததில்லை. ஆனால் எம் பொது மக்களையும் போராளிகளையும் இந்த அரசு எத்தனை கொடூரமாக வைத்திருந்தது என்பதை பல ஆவணங்கள் வெளிக் கொண்டு வந்திருந்தன.
அந்த நிலையில் தான் தளபதி ஜெயம் அவர்களின் மென்மையான இதயத்தை இங்கே குறிக்க வேண்டிய தேவை வருகிறது.
1999 ஆம் ஆண்டின் இறுதி மாதங்களில் ஒரு நாள். ( திகதி சரியாக தெரியவில்லை) ஓயாத அலைகள் 3 இன் தொடர் வெற்றியில் மகிழ்ந்திருந்த எம் தேசத்தில் மன்னார் களமுனை தனது போராளிகளுடன் மகிழ்வாக இருக்கிறது. அங்கு நடந்த ஒரு சண்டை ஒன்றில் சிங்களத்தின் ஊர்காவற்படையைச் சேர்ந்த இரண்டு பொதுமக்கள் ஜெயம் அவர்களின் கட்டளைக்குக் கீழ் நின்ற போராளிகளால் கைது செய்யப்படுகின்றனர். அதில் ஒருவர் சிறு காயங்களோடு தப்பி வந்திருந்தார். தனக்குத் தானே பச்சிலைகளை கசக்கி மருந்திட்டு காயத்தின் குருதிப் பெருக்கை கட்டுப்படுத்தி இருந்தார்.
கைதாகியவர்கள் சாகப் போகிறோம் என்று பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வகையில் அவர்களை பொதுமக்கள் என்று கூறவும் முடியாது. அதே வேளை இராணுவம் என்றும் சொல்ல முடியாது. அவர்களும் எங்களின் நடவடிக்கைகளை எதிர்த்து நிற்பவர்கள் தான். ஆனாலும் மக்கள் அதனால் அவர்கள் தொடர்பாக முடிவுகள் எடுக்கும் போது கவனமாக எடுக்க வேண்டிய தேவை இருந்தது. விடுதலைப்புலிகள் கைதானவர்களை கைதிகளாக வைத்திருப்பார்கள் அல்லது உடனடியாக விடுதலை செய்வார்கள். இது விடுதலைப் போராட்ட வரலாற்றில் பல காலங்கள் பதிவாகிய நிகழ்வுகள்.
ஆனால் சில போராளிகள் அந்த ஊர்காவற்படையைச் சேர்ந்த இருவரும் எமக்கெதிராக சண்டை போட்டவர்கள். இவர்களால் கூட எம் பல போராளிகளை நாம் இழந்திருக்கிறோம். அவர்களை எதற்காக உயிருடன் வைத்திருக்க வேண்டும்? என்று கொதித்தார்கள்.
அப்போது வன்னி மேற்குப் பிராந்தியத் தளபதியாக இருந்த ஜெயம் அவர்கள் அமைதியாக போராளிகளுடன் கதைக்கிறார்.
“அவர்கள் பொதுமக்கள் அதுவும் இப்போது எம் கைதிகள் அவர்களை சுட்டுக் கொல்வது மனிதம் அற்ற செயல். அவர்களை பாதுகாப்பாக திருப்பி அனுப்ப வேண்டும். எங்களுடைய மக்களைப் போலத் தான் இவர்களும். ஆனால் ஒரு வித்தியாசம் எங்கட மக்கள் உரிமைக்காக போராடுகிறார்கள். இவர்கள் எங்கட உரிமைகளை பறிக்க வந்திருக்கிறார்கள். என்றாலும் அவர்களை உயிருடன் அனுப்ப வேண்டியது எமது கடமை. அதனால் அவர்கள் மீது எந்த விதமான தண்டனைகளும் வழங்க வேண்டாம் உடனடியாக அரசியல் துறை மூலமாக குடும்பங்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
என்று அறிவுறுத்துகிறார்.
போராளி மருத்துவர் தணிகையை அழைத்த தளபதி உனடியாக இருவருக்கும் மருத்துவசிகிச்சை செய்யும் படி பணித்தார். எதிரி எனிலும் உயிரைக் காக்க வேண்டும் என்ற மேன்நிலை நோக்கத்தோடு அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கினார் இராணுவ மருத்துவர் தணிகை.
அப்போது “யூலியட் மக் ” சண்டையில் எவ்வளவு உக்கிரமமான தளபதி என்றாலும் மக்கள் மீதும் போராளிகள் மீதும் எவ்வளவு பாசத்தை வைத்துள்ளார். அதே நேரம் எதிரிகளின் உதவிக்காக வந்திருந்தவர்களைக் கூட இவ்வாறு நேசிப்பது என்பது எந்த நாட்டிலும் எந்த இராணுவத் தளபதியாலும் செய்ய முடியாத பெரும் மென்நடவடிக்கை என்பதையும் அவர் எவ்வளவு மென் உள்ளம் படைத்த தளபதி என்பதை அந்த ஊர்காவற் படையை சேர்ந்தவர்களும் அன்று உணர்ந்திருப்பர். மருத்துவர் தணிகை மற்றும் மூத்த போராளி மார்ஷல் ஆகியோரை அழைத்த தளபதி ஜெயம் கைதியாக இருந்த இரு ஊர்காவற் படை உறுப்பினர்களையும் பொறுப்பளிக்கிறார்.
“கவனமாக கொண்டு போங்கோ … கல்விளானில் இருக்கும் அரசியல் துறை நடுவப்பணியகத்தில் ஒப்படையுங்கள்” என்று கட்டளையிடுகிறார்.
கட்டளையை ஏற்று போராளி மருத்துவர் தணிகையும், மார்ஷலும் அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு மன்னாரில் இருந்து எமது பொது மக்களின் வாகனம் ஒன்றை உதவிக்கு வரு மாறு அழைத்துக் கொண்டு கல்விளானுக்கு வருகிறார்கள். அப்போதெல்லாம் இயக்கத்திடம் வாகனப்பற்றாக்குறை இருந்த காரணத்தால் மக்களின் வாகனங்களே அதிகமாக பயன்படுத்தப்படுவது வழமை. அதுவும் சாரதிகளும் பெரும்பாலும் மக்களாகவே இருப்பார்கள். போராளிகளின் ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் எம் மக்கள் பிரிக்கப்படாத அளவுக்கு பிணைந்திருந்தற்கு இந்த வாக சாரதிகளும் ஒரு சான்றாகின்றனர்.
கல்விளானுக்கு மக்களின் உதவியோடு வந்த போராளிகள் இருவரும் ஊர்காவற்படையின் இரு உறுப்பினர்களையும் அரசியல்துறையின் மக்கள் தொடர்பகப் பிரிவில் பொறுப்பாக இருந்த போராளி தயா மாஸ்டரிடம் ஒப்படைக்கிறார்கள்.
மரணம் வரும் தருவாயை எதிர்பார்த்து பயந்து இருந்த சிங்களத்தின் ஊர்காவற்படையை சேர்ந்த இருவரும் தமக்கு என்ன நடக்கிறது புரியாமல் நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் குறிப்பிட்ட சில மணி நேரத்துக்கு பின் சர்வதேச செஞ்சிலுவை சங்கப் பிரதிநிதிகள் வந்து அவர்களைப் பொறுப்பெடுப்பார்கள். அப்போது தான் அந்த அப்பாவி ஊர்காவற்படை உறுப்பினர்களுக்கு நிம்மதியாக இருந்திருக்கும். அவர்கள் தமது குடும்பங்களுடன் இணைவதற்கான நடவடிக்கைகளை எம் மொழி பெயர்ப்பு போராளிகள் அவர்களுக்கு விளங்கப்படுத்தி இருப்பார்கள். அதன் பின்னான நாள் ஒன்றில் அவர்கள் நிட்சயமாக விடுதலை செய்யப்பட்டு இன்றும் எங்கோ ஓர் இடத்தில் வாழ்வார்கள்.
உண்மையில் அவர்கள் புரிந்திருப்பார்கள். தம்மை உயிருடன் விடுவித்த பிரிகேடியர் ஜெயம் அவர்களின் மென்மையையும் தமது சிங்களத் தளபதி பிரியங்காவின் கொலை வெறியையும். அதோடு மட்டுமல்லாது, தான் நேசித்த தமிழீழ மண்ணை அள்ளி நெஞ்சில் அணைத்தபடி தன்னைத் தானே சுட்டும், குப்பி கடித்தும் தனது உயிரை மண்ணுக்காக வித்தாக கொடுத்த பிரிகேடியர் ஜெயம் அவர்களின் புகைப்படத்தைப் பார்த்து கட்டாயம் விழி கலங்கியிருப்பர். எம்மைக் காத்த தெய்வம் தமது கண்முன்னே தான் நேசித்த மக்களுக்காக வீழ்ந்து கிடப்பதை உணர்ந்திருப்பர்.
எந்த விடுதலை இயக்கமும் சரி, இராணுவக் கட்டமைப்பும் சரி அதிலும் சிங்கள அரச படைகள் தன் எதிரே துப்பாக்கியுடன் நிற்கும் எதிரிகளை மட்டுமல்ல அப்பாவி மக்களையும் கொன்று குவிக்க வேண்டும் என்பதையே தம் நிலைப்பாடாக கொண்டிருப்பர். ஆனால் விடுதலைப் புலிகளின் தளபதிகளோ போராளிகளோ அவ்வாறானவர்கள் இல்லை. மனிதமும் உயிர்களை நேசிக்கும் உயரிய பண்பையும் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். என்பதை புரிந்து கொள்ள எந்த சிரமமும் இருக்கவில்லை.
சிங்கள இராணுவத் தளபதி இறுதி யுத்தம் என்ற பெயரில் இனவழிப்பை நிறைவேற்றி முடித்தது காணாது என்று, இன்றும் தமிழர்களை கொல்வதற்காகவும் தமிழ் நிலங்களை அபகரிப்பதற்காகவும் தயாராகவே இன்றும் இருக்கிறோம் என்பதை நிரூபிக்கிறார்கள். ஆனால் எம் போராளிகளோ அவ்வாறு இல்லை என்பதை நிரூபித்தார்கள். அவர்கள் எதிரியையும் எதிரிகளின் உயிரையும் மதிக்கத் தவறியதில்லை. இதை எம் தளபதி பிரிகேடியர் ஜெயம் அவர்களும் நிரூபிக்கத் தவறவில்லை…
கவிமகன்.இ
10.03.2018