மே மாதம்!
“முழுநிலா வெண்பொங்கலுக்கு”முதல்;
“முள்ளிவாய்க்கால்” கஞ்சிதானே குடித்தோம்.
“பிரித்” ஓதும் சத்தத்தில்
“காணாமல் போனோரின்” கதறல்களை மறந்துவிடாதீர்கள்.
ஆரியகுளத்து மணிகளின் சத்தத்தில்
நல்லூரான் காண்டா மணி அடங்கிப்போகக்கூடாது!
தாமரைகள் குளத்தில் பூக்கட்டும்.
எங்கள் வேலிகளில் பூவரசே பூக்கட்டும்.
வேட்டிகள் எப்போதும் வெள்ளையாகவே இருக்கட்டும்.
காவி படிந்தால் அது நிறம் மாறிவிடும்.
“யாழ் தேவி” க்குப்பிறகு
“உத்தரட்ட தேவி” வரட்டும்.
“பற்றிக் சாரம்” கட்டுவதில் தப்பில்லை
“கோமணத்தை” மறப்பது தப்பு!
நாங்கள்;
அந்தியேட்டி அண்டு
தீபாவளி வந்தால்
ஆடு வெட்டுவதில்லை!
செத்தவீட்டு வளவுக்கு முன்னால
“பைலா” படிப்பதில்லை!
அழுதுகொண்டே இருப்பதும் பிழை
“அதை” மறந்துவிட்டு போவதும் பிழை!
கண்ணீரை கையால துடைக்கலாம்;
“கண்டின காயம்” காலத்தால் அழியாது!
வெடிச்சத்தம் கேட்டால்
மாடுகள் இப்பவும் வெருண்டுதான் ஓடும்.
சீருடைகளை கண்டால் நாய்கள்
இப்பவும் குரைக்கும்.
வாலாட்டுவதில்லை!
வெசாக் கூடுகளை கட்டுங்கள்..
கவனம்;
எப்போதும்…
பனையின் உயரத்துக்கு கீழேயே இருக்கட்டும்!
Via :- Balanathan Anoja