மல்லாவி பகுதியிலும் அனேகமானோர் பணம் கொடுத்து ஏமாந்துள்ளதாக அறிய முடிகிறது. இந்த நிலையில் நேற்றையதினம் பிரமிட் கும்பலால் நடாத்தப்பட்ட ஆட்சேர்ப்பு கூட்டத்தில் அநேகமான மல்லாவி இளைஞர்கள் இணைந்து கொண்டிருந்ததாகவும் அறிய முடிகிறது.
இந்த வியாபாரமானது ஒரு பிரமிட் வடிவாக இருப்பதுடன் ஒரு தனி நபரிற்கு கீழ் மேலதிக நபர்களை இணைத்துவிடுவதன் முலம் இலாபம் உழைக்கும் முறையாகும்.
ஒரு தொகைப்பணத்தை செலுத்த வேண்டும் அல்லது இணையத்தளம் மூலமாக வைப்பிலிட வேண்டும்.
இத் திட்டத்தில் இணைவதற்கு மற்றவர்களை சேர்த்தல் வேண்டும் என மக்களுக்கு பணிப்பிக்கப்படுகின்றது.
நம்ப முடியாத வருமானங்கள் வளமானதும் சந்தோசமானதுமான வாழ்க்கை இலகுவில் புதிய ஆட்களை சேர்த்துக்கொள்ளமுடியும் போன்ற உறுதிமொழிகளால் கவரப்படுகின்றனர்.
நம்ப முடியாத வருமானங்கள் பற்றிய தவறான உறுதிகள்
சட்ட ரீதியாக மாதாந்தம் ரூ. 100,000 வருமானம் பெறுதல் என கூறுதல்
அல்லது ‘‘வளமானதும் சந்தோசமானதுமான வாழ்க்கை ’’,
‘‘இலகுவாக புதிய நபர்களை சேர்த்துக் கொள்ள முடியும்’’
போன்ற நன்மைகளைப் பெற முடியும் என உறுதிகளை அளிக்கின்றனர்.
இதனால் இலகுவாக பணம் சம்பாதிக்கும் ஆசையை கட்டுப்படுத்த முடியாமல் மக்கள் திண்டாடுகின்றனர்.
பெருமளவு எதிர் கால வருமானத்தை குறுகிய காலத்தில் அடைய முடியும் என ஊக்குவிப்பாளர்கள் பங்கேற்பாளர்களுக்கு உத்தர வாதம் அளிக்கின்றனர்.
இந்நிலையில் அவர்கள் நிறுவனத்தில் விற்பனையாகும் பொருட்களை பெருமளவு பணம் கொடுத்து வாங்குவதுடன் இத்திட்டத்தில் மற்றவர்களை சேர்த்துவிடுவதன் மூலம் வருகின்ற வருமானத்தின் ஒரு பங்கு பாவனையாளருக்கு வழங்கப்படும் என அறிவுறுத்தல் வழங்கப்படுகின்றது.
இருவரை ஒரு பங்காளர் சேர்க்கும் போது இரண்டின் அடுக்கில் எண்ணிக்கை பெருகிக் கொண்டு போகும். அப்போது இந்த பிரமிட் முறை 20 ம் அடுக்கில் பத்து இலட்சத்தைத் தாண்டிவிடும். இத் தொகை குடாநாட்டின் சனத் தொகையின் கிட்டத்தட்ட இரு மடங்காகும். குறித்த ஒரு நபரைத் தாண்டி இருபதாவது நபரின் அடுக்குக்குள்ளேயே இந்த பிரமிட் முறையால் ஏராளமானவா்கள் நடுத்தெருவில் வந்துவிடுவா். இந்த முறையால் இலாபமடையப்போவது 8 ம் அடுக்கு வரை உள்ளவா்கள் மட்டுமே. இது சாதாரணதர கணித அறிவு உள்ளவா்களே யோசித்துக் கண்டு பிடிக்கும் விடயமாகும்.
இதன்மூலம் பெறப்படும் வருமானங்கள் குறித்த திட்டத்தின் விரிவாக்கத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.
இப்பிரசாரத்தின்போது அவர்கள் அடிப்படைக் கோட்பாடாக, முன்வைப்பது உழைப்பின்றிகஷ்டப்படாமல் தாராளமாக பணம் ஈட்ட முடியும் ஒரு சில மாதங்களில் இலட்சாதிபதியாகி விடலாம் என்பதாகும்.
யாராவது ஒரு நபரை இவ்வியாபாரத்திற்குள் உள்வாங்கியதன் பின்னர், அவரிடம் நூற்றுக் கணக்கானோருக்கு மத்தியிலேயே உங்களைத் தெரிவு செய்துள்ளோம் எனக் கூறி ஊக்குவித்து இந்நாசகார வியாபாரத்தில் மக்களை சிக்கவைப்பதற்காக வீடு தேடிச் சென்று மூளைச் சலவை செய்கின்றனர்.
தொழிலின்றி வீடுகளில் இருக்கின்ற இளைஞர், யுவதிகளே இவர்களது பிரதான இலக்காகும். ‘‘பணம் இல்லை என்று கவலைப்படாதீர்கள் அதனை ஒரு பிரச்சினையாகவே எடுத்துக் கொள்ளத் தேவையில்லை’’ என்று பசப்பு வார்த்தைகளைக் கூறி இத்தகைய தொழில் வாய்ப்பற்ற இளைஞர், யுவதிகளை ஊக்குவிக்கின்றனர். வீடு, காணி, வாகனம் அல்லது வேறு ஏதாவது சொத்துக்களை அடகு வைத்தாவது இவ்வியாபாரத்திற்கு பணத்தை முதலீடு செய்யுமாறும் அதன் மூலம் தாராளமாக சம்பாதிக்க முடியும் என்றும் கூறுகின்றனர்.
இத்திட்டத்தில் இணைந்து கொள்வதற்கு திட்டத்தின் ஊக்குவிப்பாளர்கள் புதிய பங்குபற்றுபவர்களை பொருட்கள் அல்லது சேவைகளை கொள்வனவு செய்வதன் மூலம் பணத்தை முதலீடு செய்யுமாறு வேண்டப்படுவதுடன் அப்பொருட்கள் அல்லது சேவைகளை விற்பனை செய்வதன் மூலம் இத்திட்டத்திற்கு மேலதிக பங்குபற்றுபவர்களைக் கொண்டுவருமாறும் வேண்டப்படுகின்றனர். சந்தையில் இப்பொருட்கள் அல்லது சேவைகளுக்கு பலமான கேள்வி இல்லாதிருப்பதுடன் ஊக்குவிப்பாளர்களினூடாக மட்டுமே இவை கிடைக்கக் கூடியதாகவும் இருக்கின்றன. இத்திட்டத்தில் இப்பொருட்களுக்கு இரண்டாந்தரச் சந்தை இல்லாதிருப்பதுடன், விற்கப்பட்ட பொருட்கள் அல்லது சேவைகளுக்கான விற்பனைகளுக்குப் பிந்திய சேவைகளுக்கான உத்தரவாதம் ஊக்குவிப்பாளர்களினால் ஒருபோதும் வழங்கப்படுவதில்லை.
திட்டத்தின் எதிர்காலம் திட்டத்தின் அடிமட்டத்திலிருக்கும் புதிய பங்குபற்றுபவர்கள் புதிய ஆட்சேர்ப்புக்களைச் செய்ய முடியாத நிலை எழும்போது அவர்கள் தமது முதலீட்டை இழக்க வேண்டி ஏற்படுவதுடன் அத்திட்டம் முறிவடையும் நிலையும் ஏற்படும். இதனால் அநேகமாக புதிய பங்கேற்பாளர்கள் எதிர்பார்த்த வருமானத்தை இழப்பதோடு கூடுதலாக விலை மதிப்பீடு செய்யப்பட்ட பொருட்களையும் வைத்திருக்க வேண்டியிருக்கும்
உதாரணமாக ஒரு சூரிய மின்கலத்தின் பெறுமதி 25 ஆயிரம் ரூபா எனின் குறித்த பிரமிட் மோசடி செய்யும் கும்பல் அதே சூரிய கலத்தை ஏதாவது ஒரு நாட்டில் இருந்து இறக்குமதி செய்து 50 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்கின்றது. இதை வாங்கும் ஒரு நபா் தனக்கு தெரிந்த இரு நபா்களை அந் நிறுவனத்திற்கு அறிமுகப்படுத்தினால் அந் நபருக்கு குறித்த ஒரு தொகை கொடுப்பதாக உறுதியளிக்கப்படுகின்றது. இதே வேளை அறிமுகப்படுத்தி நபா்களும் வேறு சிலரை அப் பொருளை வாங்கச் செய்தால் முதலில் அவா்களை அறிமுகம் செய்த நபரும் பின்னா் அறிமுகம் செய்த நபா்களும் புள்ளிகள் வழங்கப்பட்டு பெருமளவு நிதி வரும் என ஏமாற்றப்படுகின்றது.
இவ்வாறான ஒரு நிலை குறித்த ஒரு மட்டத்துடன் நின்று விடும். ஏனெனில் இவற்றை வாங்குவதற்கு ஆட்கள் இல்லாத காரணத்தாலும் போட்டி நிலை ஏற்படுவதாலும் இவா்களது நோக்கம் தடைப்பட்டுவிடும். இதே வேளை இவா்களது தலையில் பெறுமதி இல்லாத சூரிய மின்கலத்திற்கு மேலதிக தொகையும் கட்டப்பட்டு நிர்க்கதியில் நிற்கும் நிலை தோன்றும்.
இம் மோசடிக் கும்பல்களுக்கு சில படித்த யாழ்ப்பாணத்து முட்டாள்களும் துணை போவது வேதனையளிப்பதாக உள்ளது. இவ்வாறான பிரமிட் முறையில் கொள்ளையடிக்கும் கும்பலுக்கு யாழ் பலலைக்கழக மாணவா்கள், மாணவிகள், அரச அதிகாரிகள் ஆகியோரும் ஒத்துழைப்பு வழங்குவது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கின்றது.
எனினும் 1988 ஆம் ஆண்டு 24 ஆம் இலக்கஅந்நிய செலாவாணி கட்டுப்பாட்டுச் சட்டம் மற்றும் 2006 ஆம் ஆண்டு 05 ஆம் இலக்க பணம் தூயதாக்கல் தடைச்சட்டம் ஆகியவற்றின் கீழ் சில கொடுப்பனவுகள் மற்றும் கொடுக்கல் வாங்கல்கள் தண்டிக்கப்படகூடிய குற்றங்கள் ஆகும்.
இச் செயல்கள் மூலம் ஏதாவது ஒரு நபர் இப்படிப்பட்ட தடை செய்யப்பட்ட திட்டத்தில் பணம் செலுத்தி பங்குபற்றிய குற்றவாளியாக கண்டுபிடிக்கப்பட்டால் அவருக்கு 3 வருடங்களுக்கு குறையாத சிறைத்தண்டனை அல்லது ஒரு மில்லியன் ரூபாய்க்கு குறையாத அபராதம் என்பன நீதிமன்றத்தால் விதிக்கப்படும்
மேலும் மற்றைய ஒரு நபருக்கு இழப்பு அல்லது தீமையை உண்டுபண்ணும் விதத்தில் குற்றங்களானது வேண்டுமென்றோ அல்லது தெரிந்து கொண்டோ புரிந்திருந்தால் 3 வருடங்களுக்கு குறையாத மற்றும் 5 வருடங்களுக்கு மேற்படாத கடூழியச் சிறைத்தண்டனை மற்றும் 20 மில்லியன் ரூபாய் அபராதம் அல்லது திட்டத்தின் பங்குபற்றுபவர்களிடம் இருந்து பெறப்பட்ட இலங்கை நாணயத்தின் முழுத் தொகையின் இருமடங்கு என்பவற்றில் எது கூடியதோ அத்தொகையை கொண்ட அபராதம் நீதிமன்றங்களால் விதிக்கப்படும்.
இந்த திட்டம் 84 சீ பிரிவின்கீழ் மத்திய வங்கியால் தடைசெய்யப்பட்டுளது. என்றால் இந்த செயற்பாடு தண்டனைக்குரிய குற்றம் என்றால் எவ்வாறு அவர்களால் சுதந்திரமாக நடமாடி பொது இடம் ஒன்றில் எல்லோரையும் கூப்பிட்டு கூட்டம் வைக்க முடிகிறது என்றொரு கேள்வி எழுகிறது. மறைமுகமாக. ஆதரிக்கிறார்களோ தெரியவில்லை.
ஏற்கனவே யாழ்ப்பாணம், வன்னி ஆகிய இடங்களில் உள்ள மக்களை ஆட்டிப்படைக்கும் லீசிங், சீட்டு, மற்றும் தரமற்ற பொருட்கள் விற்பனை ஆகியவற்றுடன் இந்த பிரமிட் என்னும் அரக்கனும் சோ்ந்துள்ளதை அனைவரும் உணருதல் அவசியம். நவீனரக கார்களிலும் ஆடம்பரத் தோற்றங்களுடனும் இவ்வாறான கள்ளா்கள் உங்களை நோக்கி வரலாம். அவா்களுக்கு நீங்கள் காட்ட வேண்டியது உங்களின் செருப்பை மாத்திரமே!!! அப்படி இல்லாது அவா்களின் தோற்றத்திலும் பேச்சிலும் மயங்கினால் உங்களுக்கு செருப்பும் இல்லாத நிலை ஏற்படும்.
நமது பணத்தை நாமே காப்போம்.
நன்றி – நிரஞ்சன் தங்கராஜா