இலங்கையில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா கலந்து கொள்ளக் கூடாது என வலியுறுத்திஅவரது வீட்டினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் ஜூலை மாதம் இசையமைப்பாளர் இளையராஜா யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இசை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், அவர் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளக் கூடாது என வலியுறுத்தி அவரது வீட்டினை எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை(14) முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளதாக தந்தை பெரியார் திராவிடர் கழகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தந்தை பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
இலங்கையில் தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட இனப்படுகொலையை எதிர்த்தும் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பை நடாத்தக் கோரியும் தமிழர்கள் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் அதைக் கருத்தில் கொள்ளாமல் சிறீலங்கா உலகை ஏமாற்றும் நல்லிணக்கம் என்ற போர்வைக்குள் இருந்துகொண்டு இசை நிகழ்வு நடாத்துகின்றது.
இந் நிகழ்வில் இளையராஜா அவர்கள் பங்கு பற்றக்கூடாது என முற்றுகைப் போராட்டம் நடைபெறவுள்ளது.
தமிழீழத்தில் இலங்கை இராணுவத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி இரவு பகலாக பெண்கள் சிறுவர்கள் என மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதே போல் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அங்கு நடை பெற இருக்கும் இசை நிகழ்வில் இளையராஜா அவர்கள் கலந்து கொண்டு இசை நிகழ்வு நடாத்துவது தமிழர்களின் போராட்டங்களை கொச்சைப்படுத்துவதாக அமையும். எனவே உலகத் தமிழர்களின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்து இந் நிகழ்வை புறக்கணிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.