நிராசையின் சாட்சியாய்
நீண்டிருக்கும் கடல் முன்றலில்
நான் யோகிக்கிறேன்
வரப்போகும் எனது வாழ்வைப்பற்றி
சாவின் விழிம்பின்
சகதியில் நின்றுநான்
எஞ்சிய வாழ்வின் பாதியை
மறுபடி நினைக்கிறேன்
குண்டு துளைக்குமா
பகை கொண்டுபோகுமா
சண்டைக்களத்தில்
நான் சாக நேருமா – இல்லை
முதற்போல் எமை வந்து அலைகொண்டு போகுமா
பாம்பு கடிக்குமா
பசி என்னை வாட்டிடுமா
மருந்து இன்றி நான் மாண்டு போவேனா
நிமிடத்திற்கொன்றாய் சாவின் அவதாரம்
கூரிய கத்தியாய் என்
குரல்வளை தொடுகையிலும்
வரப்போகும் வாழ்வை நான்
மறுபடியும் யோசிக்கிறேன்…
காயம் வந்திடுமா
அதனால் களைப்பு வந்திடுமா
வெய்யில் சாலையில் சென்று
என் சாயம் போய்விடுமா
கோலம் மாறிடுமா
நம் குடிகள் அழிந்திடுமா
கடைகளின் தெருக்கள் எல்லாம்
காணாது போய்விடுமா
கண்முன் உயிர்கள் தினம்
களப்பலியாகிடுமா..?
என்று என்னுள் பலவித எண்ணங்கள்
தோன்றிடினும்
வரப்போகும் வாழ்வை நான்
மறுபடியும் யோசிக்கிறேன்
யுத்தமது ஓய்ந்தால்…..
காடு நகரமாகும்
கண்ட காட்சிகள் மாறிப்போகும்
ஊர்கள் ஒளிகொள்ளும்
இந்த உலகெல்லாம் எமை எண்ணும்
நாளை ஈழத் தாயவள் எங்கள்
சந்ததியை சுமந்து நிற்பாள்
நாங்கள் வாழ்ந்த வாழ்வையெல்லாம்
வரலாறு கூறிப்போகும்
ஆனால் மாண்டுபோய்
நானும்,நாமும்
மண்ணுக்குள் போனபின்பும்
ஊர் சுற்றும் என்(ம்) ஆவி
நான்(ம்) வாழ்த்தவறிய வாழ்வுபற்றி
மறுபடியும் யோசிக்கும்…
– அனாதியன்-