எங்கள் நிலங்களின் மேல்
நாங்கள் வளர்ந்தபடியிருக்கிறோம்
ஒரு புல்லென
ஒரு மரமென
ஒரு புற்றென
நாங்கள் மேலெழுந்து
மீண்டும் வீழ்ந்தபடி…
நீங்கள் மகிழ்ந்திருக்கும் நிலத்தின் கீழே
ஆறாய் ஓடும் குருதியில்
இன்னும் வலித்தபடிதானிருக்கிறது
எங்கள் உயிர்கள்
எங்கள் நிலம்
மூதாதையர்களின் குருதியால்
குழைத்து வார்க்கப்பட்டது
பின் எங்கள் சதைகளால்…
பின் எங்கள் பிள்ளைகளின்
பிதுங்கிய மூளைகளால்…
நீங்கள் மறந்துவிட்டீர்களா…?
எங்கள் மேல் வீழ்ந்த சன்னங்களால்
உங்கள் உயிர் காக்கப்பட்டதை….
எங்கள் மரணங்களால்
உலக அரங்கில் நீங்கள்
மதிக்கப்பட்டதை….
நீங்கள் உலக அரங்கில்
உரிமைக் குரல் எழுப்ப
நாங்கள் பிணமானதை…..
தேசமெனும் பரந்த
பிணக்காட்டில் ஒலிக்கும்
குரல்கள் பற்றி
நீங்கள் அறியப்போவதில்லை
இந்தக் குரல்கள்
உங்கள் உல்லாசங்களில்
செயலற்றுப்போவது
ஜீரணிக்கமுடியாத ரணம்
நாங்கள் கேட்பதெல்லாம்
இதுதான்
எங்கள் பேரப்பிள்ளைகளின்
குருதியால்
மீண்டும் தேசம் செய்ய
அனுமதிக்காவிடினும்
அவர்கள் மேலேறி மிதிப்பது
எங்கள் உடல் புதைந்து
சிவந்த உரமான மண்ணில்
என்பதை உரக்கச் சொல்லுங்கள்
என்றேனும் ஒருநாள்
நில மேற்பரப்பில்
சுதந்திரமாய் நடமாட
ஈழம் செய்யுங்கள்
– #அனாதியன்-
மே 18 இன அழிப்பு நாள் அல்ல ஒவ்வொரு நாளும் இனவழிப்பு நாள்தான் இந்த நாட்களில் நான் பல நூறு பிணங்களைப் பார்த்தவன். அழியாத நினைவுகளை ஆறாத ரணங்களை மறந்து போனால் அது மடமையே..!
இன்றிலிருந்தே தொடங்குவோம் எம் மக்களுக்குக்கான நீதிக்கும் அஞ்சலிக்குமாக….