இந்த நாள்
எல்லா நாட்களையும் விட
தடித்த நிறங்களால் ஆகியிருந்தது
இந்த நாளின் அமைதியில்
எத்தனை இராஜாளிப் பறவைகள்
மூர்ச்சையாகிக் கிடந்தன
முல்லைக் காடே மூர்ச்சையாகிப்
போன தினம்
விடுதலைக்கான தாகத்தை
பூர்த்தி செய்யாமல் போகிறோமே
என்னுகிற பெருமூச்சுகளின்
அதிர்வில்
முல்லைக்கடல் மூசி எழுந்த தினம்
வீர வரலாறுகளை வெவ்வேறு
திசைகளில் படைத்தவர்
உடல்களை நரபலிப் படையல் போல்
பார்த்த கணம்
இதயவறைகளுக்குள்
அமிலத்தை ஊற்றிய இரணம்
விடுதலைத் தீ என்பது
புனிதர்கள் குருதியால்
ஓங்கி எரிந்தது
அவர்களால்
அவநம்பிக்கை அற்று இருந்தது
எங்கள் ஜீவிதம்
பெருவீரக் காட்டில்
வெடிகள் வெடித்தபோது
எங்கள் வீட்டில்
உலைகள் எரிந்தது
எங்கள் மகிழ்வான
புன்னகைக்காய்
அவர்கள் குப்பி கடித்த
கொடுமையும் நிகழ்ந்தது
பின்னொரு நாள்..
துரோகம் கடித்ததில்
நொருங்கிய அப்பளம் போலானது
எங்கள் தேசம்
உப்புக் கடலுக்கும்
குருதிக்கடலுக்கும்
இடையே கிடந்த மணல்த்திட்டில்
திணிக்கப்பட்டதே
எங்கள் வாழ்வு அன்று
இறுதிவரை ஈழக்கனவுகளோடு
புதைந்துகிடந்த எமக்கு
இந்னாள் அவலம்
இழப்பின் உச்சம்
என் உயிராய் நேசித்த உன்னத
உறவொன்றையும்
மரணிக்க வைத்த இந்நாள்
வீர வரலாற்றில்
பொறிக்கப்படவேண்டிய நாள்
இவர்கள் பாதம் பதிந்த இடத்தில்
கால்களை வைக்க
தகுதியற்றவர்கள்
நாங்கள்
பெருவீரர்களே..!
அமைதியா உறங்குங்கள்
மீண்டும் ஒரு ஆற்பரிப்பு நாள்
விடியும் வரை..
– #அனாதியன்-