பொது மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் வீதிகளைத்தான் இராணுவமும் பயன்படுத்துகிறது. பொது மக்களுக்கு வாகனம் செலுத்துவதற்கான போக்குவரத்து விதிமுறைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த வீதிப்போக்கு வரத்து விதி முறைகளை இராணுவத்தினர் மதிப்பதில்லை. அவ்வாறு சட்டத்தை மதிக்காமல் வாகனங்களை செலுத்தும் இராணுவத்தினரை யாரும் தட்டிக்கேட்பதுமில்லை,அவர்களுக்கு தண்டனை வழங்குவதுமில்லை.
வீதிகளில் வேகக்கட்டுப்பாட்டு குறியீடுகள் வைக்கப்பட்ட போதும் இராணுவ வாகனங்கள் அந்த வேகக்கட்டுப்பாடுகளை கவனத்தில் கொள்வதில்லை. குறிப்பாக வேகக்கட்டுப்பாட்டை கண்காணிக்கும் போக்குவரத்து காவல் துறையினர் கடமையில் இருக்கும் போது கூட வேகக்கட்டுப்பாட்டை இராணுவத்தினர் பின்பற்றாமல் செல்வதும் அவர்களுக்கு சைகை காட்டி அனுப்பிவைக்கும் போக்குவரத்து காவல்துறையினரது செயற்பாடும் நாள்தோறும் நடக்கும் சம்பவங்களாக இருக்கின்றன.
அது மட்டுமன்றி இரவு வேளைகளில் வேகமாக செல்லும் இராணுவ வாகனங்களுக்கு முன்பக்க விளக்குகள் சரியாக ஒளிர்வதில்லை. சில வாகனங்கள் ஒரு பக்க மின்விக்குகளுடன் வீதிகளில் பயணிப்பதை அவதானிக்க முடிகிறது. இவ்வாறான வாகனங்களைக் கூட போக்கு வரத்து காவல்துறையினர் கண்டுகொள்வதில்லை. வீதிகளில் திரும்பும் போது சைகை விளக்குகளை ஒளிர விடாமல் வாகனங்களை திருப்புதல்,நகர் பகுதியிலும் வேகக்கட்டுப்பாட்டை பின்பற்றாமல் விடுதல்,ஏனைய வாகன சாரதிகளுக்கு இடம் வழங்காமல் தொந்தரவு செய்தல்,வீதிகளில் பயன்படுத்த முடியாத அளவுக்கு பழுதடைந்த வாகனங்களை வீதிகளில் பயன்படுத்துதல் என குற்றச்செயல்கள் நீண்டு செல்கின்றன.
இவ்வாறான இராணுவத்தினரின் செயற்பாடு காரணமாக வடக்கு மாகாணத்தில் மாதந்தம் நடக்கும் வீதி விபத்துக்களில் ஐந்திற்கு மேற்பட்ட விபத்துக்களை இராணுவத்தினர் ஏற்படுத்துகின்றனர். இந்த விபத்துக்களில் இரண்டுக்கும் குறையாத உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன.
சட்டம் என்பது இந்த நாட்டுப்பிரஜைகள் அனைவருக்கும் பொதுவானதே. எனவே இராணுவத்தினரும் அந்த சட்டத்தை மதிக்க வேண்டும். அவ்வாறு மதிக்காமல் செயற்படும் இராணுவத்தினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
போர் இடம்பெற்ற காலப்பகுதியில் இராணுவ வாகனங்களுக்கு முன்னுரிமை கொடுத்தல் என்பது ஒருவகையில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தாலும், போர் முடிந்து பத்து ஆண்டுகளை எட்டப்போகும் நிலையிலும் அதே செயற்பாட்டை இராணுவத்தினர் கடைப்பிடிப்பதென்பது பொது மக்களுக்கு பெரும் இடையுறாகவே இருக்கின்றது.