பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளித்த சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியின் மூலம் நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்ட காரணத்தினாலேயே ஜனாதிபதி இந்தத் தீர்மானத்தினை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், சுதந்திரக் கட்சித் தரப்பினருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டு வந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமை விடயத்தினை தான் மதிப்பதாக மைத்திரி, ரணிலிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அதேபோன்று, குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை மீளப் பெற்றுக் கொள்ள தான் எந்த வித அழுத்தங்களையும் பிரயோகிக்கப் போவதில்லை எனவும், இவ்வாறான நிலையில் அரசாங்கத்துடன் தொடர்ந்து பயணிக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை எனவும் ஜனாதிபதி, பிரதமரிடம் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி இணைந்த கூட்டு அரசாங்க ஒப்பந்தம் முடிவடைந்துள்ள நிலையில் அதன் புதுப்பிப்புகள் தொடர்பில் மந்த நிலையே தொடர்ந்து வருகின்றது.
இந்த நிலையில் குறித்த அரசாங்கம் பிளவடையுமாக இருப்பின் அது இலங்கை அரசியலில் பல்வேறுபட்ட மாற்றத்தை ஏற்படுத்தும் முக்கிய காரணியாக அமையும் என அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர்.
எவ்வாறாயினும் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, அதனைத் தொடர்ந்து அதற்கு ஆதரவளித்தவர்கள் மீது ஐக்கிய தேசிய முன்னெடுத்துள்ள செயற்பாடுகள் காரணமாக இரு கட்சிகளுக்கிடையேயான உட்பூசல்கள் அதிகரித்துள்ளதாகவே குறிப்பிடப்படுகின்றது.
மறுபக்கம், ஜனாதிபதியின் இந்த அதிரடி முடிவின் காரணமாகவே, தனக்கு எதிரானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் நிலைப்பாட்டில் இருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்த நிலைப்பாட்டில் இருந்து திடீரென மாறியுள்ளதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.