இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளின் சிறப்பு தளபதி ஒருவரால் தாக்குதல் கட்டளை வழங்கிய நிலத்தடி காவலரண் ஒன்று முல்லைத்தீவு பெருங்காட்டு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் கட்டளைத்தளபதி ஒருவர் இந்த காவலரணில் இருந்து கட்டளைகளை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கேப்பாப்புலவு – புதுகுடியிருப்பு பிரதான வீதியில் இருந்து தெற்கு பக்கமாக உள்ள பெருங்காட்டு பகுதிக்கு விறகு சேகரிக்கச் சென்றவர்களினால் இந்த காவலரண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2009ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் கேப்பாப்புலவில் இருந்து புதுகுடியிருப்பு நோக்கி படையெடுத்த இலங்கை இராணுவத்தினரின் நகர்வை எதிர்த்து விடுதலைப் புலிகளின் மூன்று சிறப்பு படையணிகள் அந்தப் பகுதியில் எதிர்ப்பு தாக்குதல்களை தொடுத்திருந்தனர்.
கிழக்கு பக்கமாக சோதியா படையணியும், பிரதான வீதி களமுனையில் ராதா படையணி மற்றும் லெப். கேணல் விக்ரர் கவச எதிர்புப் படையணியும் தெற்கு பக்கமாக சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியும் இணைந்து இராணுவ நகர்வை எதிர்த்து தாக்குதல் தொடுத்திருந்தனர்.
இவ்வாறு ஒருங்கிணைந்த படையணிகளின் தாக்குதலை முறியடிப்பதற்கு இலங்கை முப்படையினரும் இணைந்து ஒரு மாதத்திற்கும் மேலாக அந்தப்பகுதியில் பல்வேறு தாக்குதல்களை தொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் குறித்த காவலரணை மீட்பதற்காக இலங்கை முப்படையினரும் இணைந்து இறுதி நேரத்தில் சுமார் 6 மணித்தியாலங்கள் அந்த பகுதியில் பாரிய யுத்தம் ஒன்றை தொடுத்திருந்தனர்
இந்த இறுதி நேரச்சமரின் போது ஒரு மணித்தியாலத்திற்கு சராசரி 12 விடுதலை போராளிகள் அந்த பகுதியில் மரணித்துள்ளதாக விடுதலைப் புலிகளின் மருத்துவப் பிரிவு முன்னாள் போராளி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை குறித்த கட்டளைத் தளபதியும் அவ்விடத்தில் மரணித்துள்ள நிலையில் இராணுவத் தரப்பினரால் அந்த பகுதி கைப்பற்றப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.