ஏமனில் தென்மேற்கு நகரான டாயிஜ் மற்றும் கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள வடக்கு நகரான சாடா ஆகியவை மீது சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணி படைகள் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டன.
சவூதி ஆதரவு பெற்ற அரசு படைகள் மற்றும் ஈரான் நாட்டுடன் கூட்டணியாக உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்கள் இடையே டாயிஜ் நகரின் திம்னத் காதிர் மாவட்டத்தில் கடும் சண்டை நடந்து வருகிறது.
இந்த நிலையில், சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணி படைகள் இப்பகுதியில் நடத்திய வான்வழி தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
இதேபோன்று சாடா நகரில் பணிமனை ஒன்றின் மீது நடந்த மற்றொரு வான்தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர். 8 பேர் காயமடைந்து உள்ளனர். இதில் பள்ளி மாணவிகளும் அடங்குவர்.
இந்த தகவலை கிளர்ச்சியாளர்களுக்கான மனித உரிமைகள் துறை மந்திரி அல் ஷாபி தெரிவித்துள்ளார். பொதுமக்கள் மற்றும் ஆயுதமற்ற ஏமன்வாசிகள் மீது படுகொலைகள் நடத்தப்படுகின்றன. இதுபற்றி விசாரணை நடத்த தனி ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
ஏமனில் பல வருட போரில் 10 ஆயிரத்திற்கும் கூடுதலானோர் பலியாகி உள்ளனர். உலகில் குடிமக்களுக்கு பாதுகாப்பற்ற மோசமிக்க நாடாக ஏமன் உள்ளது. அந்நாட்டில் 2.22 கோடி பேர் வரை உதவியற்ற நிலையில் உள்ளனர். காலரா போன்ற பிற நோய்களால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.