அமெரிக்காவில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலின் போது குடியரசுக்கட்சி வேட்பாளர் டிரம்பின் தேர்தல் பிரசாரத்துக்காக ‘கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா’ எனப்படும் இங்கிலாந்தை சேர்ந்த தேர்தல் பகுப்பாய்வு மையம் வேலை பார்த்தது. இந்த நிறுவனத்துக்காக பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் பயனாளர்கள் பதிவு செய்திருந்த தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டதாக சமீபத்தில் புகார் எழுந்தது.
இந்த புகாரை ஒப்புக்கொண்ட பேஸ்புக் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான மார்க் ஜூக்கர்பெர்க், சுமார் 8.70 கோடி பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதாக அறிவித்தார். இதற்காக மன்னிப்பு கோரிய அவர், இதுபோன்ற சம்பவங்கள் மேலும் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து பல தகவல் பகுப்பாய்வு மையங்களுக்கு பேஸ்புக் நிறுவனம் தடை விதித்து வருகிறது.
இந்த தகவல்கள் திருட்டு தொடர்பாக மார்க் ஜூக்கர்பெர்க்கிடம் அமெரிக்க பாராளுமன்றக்குழுவினர் விசாரணை நடத்த உள்ளனர். இதற்காக அவர் இன்று செனட் பிரதிநிதிகள் முன்பும், நாளை பிரதிநிதிகள் சபை முன்பும் ஆஜராக உள்ளார்.
இதற்கிடையே அமெரிக்காவில் கடுமையான தகவல் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்துமாறு சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக அமெரிக்க அரசும் பரிசீலனையில் ஈடுபட்டு இருப்பதாக தெரிகிறது.