போருக்குள் நசிந்த நானும்
நலிந்த மனம் சுமந்த வாதையும்
அழிக்க அழிக்க
எழுந்துகொண்டிருக்கிற
புற்களின் வேர்களில்
நீறு பூத்துக்கிடக்கிறது
போர்க்காலத் தமிழனின் குருதி
பச்சைக்கலர் புல்டோசர்கள் என்னை
கடக்கிற பொழுதெல்லாம் கொத்துக்கொத்தாய்
கூட்டியள்ளிய எம்மவர் சதைகளின்
வாடை நாசி தொடுகிறது
ஒரு புழுப்போல
துடித்துக்கொண்டிருந்த ஒருவர்
புலம்பினார்
” ஐயோ என்னை காப்பாத்துங்கோ”
ஆறுதல் கூறக்கூட முடியவில்லையே என்னால்
என் சிவந்த மடியில் காயப்பட்ட தாய் ;
பார்த்துக்கொண்டிருக்க
இழுத்து இழுத்து இறந்தார்களே
என்னை சுற்ற்றிலும் பலர்
எப்படிப்பட்ட ஒரு துர்பாக்கியசாலியிவன்
எப்படிப்பட்ட ஒரு இரக்கமற்றவன் இவன்
ஈரமில்லாத பாவி என அவர்கள்
நினைத்திருப்பார்களே!!
தம்மை யாரேனும் காத்துவிடுவார்கள்
என கண் அயரும் கடைசிக்கணத்திலும்
நம்பியிருப்பார்களே!!
நாலா புறத்திலும் சிதறிய உடல்களிலிருந்து
குருதி எனை நோக்கி ஆறுபோல்
ஓடி வருகிற போது
வாயடைத்து நின்றேனே!
வைத்திய சாலைகளிலேயே மருந்து இல்லாத போது
மறவர் உயிரை எப்படிக் காப்பேன்
அடுத்த வீட்டில் வீழ்ந்த குண்டில்
அறுந்து தொங்கியது
அத்தனை உடல்களும்
யாராவது காப்பாத்துங்கோ!!
கடவுளே!!
ஐயோ !! என்று அலற அலற
ஏதும் செய்ய முடியாது
பதுங்கு குழிக்குள் பதுங்கி இருந்தோமே!
இன்று நினைத்தாலும் இதயம்
கொதிக்கிறதே!
எப்படி மறப்பேன்
மாத்தளனை,
எப்படி மறப்பேன் வலைஞர் மடத்தில் கருகியவர்களை,
ஆச்சி தோட்டத்து தென்னைகளோடு
சேர்ந்து மடிந்தவர்களை
அப்படியே விட்டுவிட்டு வந்தோமே எப்படி மறப்பது,
எறிகணை வீழ இடமில்லாமல்
எரிந்து போன செந்தூரன் சிலையடியை எப்படி மறப்பேன்,
மூங்கிலாத்தில்
முன்னூறு எறிகணைகளுக்கு மத்தியில் பதுங்கியிருந்து
உயிர் பிழைத்த பயங்கரத்தை
எந்த வர்ணங்கொண்டு வரைவேன்
அறிந்தவன், தெரிந்தவன்
அத்தான், நண்பன்
உற்றவன் , மற்றவன்
தளபதி , கல்விமான்
அத்தனை பேரும் அடுத்தடுத்து
மடிய உடல்களை எடுத்து எரிக்க
நேரமின்றி
பதுங்கிய குழியிலே
போட்டுவிட்டு வந்தோமே
எந்தக்காலத்தில் இதை மறக்க
ஐயோ
என் இனத்தின் குருதியில் நடந்து
உயிர் மீண்டோமே
இப்பொழுதும் கால்களை யாரோ பற்றுவது போலவே உள்ளதே!!
பிணங்கள் வீழ்ந்த
காவலரண் பீலியில்
தேங்கிய நீரை அள்ளிக்குடித்தோமே!
உடலுக்குள் இன்னும் கொதிக்கிறதே குருதி
தையில் தொடங்கி வைகாசி வரையிலும்
பலிக்கடாக்களாய் கொலைக்குக் கொடுத்தோமே எம் இனத்தை
இந்த மாதம்
எம் தன்மானத்தை
ஆதிக்க வெறியர்களின் இரும்பு விதைகளுக்கு அடகு வைத்த மாதம்
வட்டியாய் இன்றும் சிறையில்
இருப்பவரின் வாதைகளை வழங்கிக்கொண்டுதானிருக்கிறோம்
விடியல் நிச்சயம் வரும்
அதற்கான வேள்வி
அடுத்து ஓர் தமிழச்சியின் துயிலுரிப்பிலிருந்து ஆரம்பமாகும்
– அனாதியன்