மண்மீட்க மங்கையிவர்
மரணத்தை வென்றே – தன்
மானமதை மலையளவாய்
மனதினில் கொண்டார்.
காடுமலை கடல்வெளிகள்
யாவிலும் நடந்தே- தம்
நாடுகாக்கப் படுதுயர்கள்
யாவையும் கடந்தார்.
தாயகத்துக் கனவுதனை
நெஞ்சினில் கொண்டே
கந்தகத்துக் குண்டுதனைத்
தோழ்தனில் சுமந்தார்.
பசி தின்ற போதினிலும்
படுகளம் நின்றே,
தாகமெங்கள் தாய்நிலத்தின்
விடுதலை என்றார்.
நட்டுநகை நகப்பூச்சை
நாடினாரில்லை – நெற்றிப்
பொட்டுப் பூவின் ஒப்பனையும்
சூடினாரில்லை.
குட்டைச் சட்டைக் கட்டழகைத்
தொட்டவரில்லை,
கட்டைப் பாவாடை கூடக்
கட்டினாரில்லை.
பட்டுச்சேலை கூறைகட்டிச்
சுற்றினாரில்லை,
கட்டுக்காளையோடு சோடி
கட்டினாரில்லை.
உதட்டினிலே சாயம் பூசித்
திரிந்தவரில்லை,
முகப்பொலிவுக் களிபூசி
அறிந்தாரில்லை.
கைப்பேசிக் குசுகுசுப்பை
அறிந்தவரில்லை – கண்
மைபூசிக் கிளுகிளுப்பாய்த்
திரிந்தாரில்லை.
குதியுயரக் கீல்சு போட்டுக்
குதித்தவரில்லை – குதிக்
காலுரசக் கொலுசு கட்டி
நடந்தாரில்லை.
தலைமுடியை அயனிங்கால்
பொசுக்கினாரில்லை – அதில்
அலங்கோலச் செம் மையைப்
பூசினாரில்லை.
அரைகுறையாய் இங்கிலீசும்
பேசினாரில்லை – அந்த
இங்கிலீசில் இங்கிதத்தை
தொலைத்தாரில்லை.
தம்மையீந்து தமிழைக்காத்த
அங்கையரை – உங்கள்
நெஞ்சில் கொண்டு
நடையைக் கட்டும் தங்கையரே!.
வன்னியூர்- வரன்
13/04/2018