ஆசிஃபா
அணைக்கப்பட்ட பின்னர்தான்
ஓங்கி எரிந்ததாம் ஆலய தீபம்
விழி பிறழ்ந்து வெளி வரும் வரை
திருகப்பட்ட சிறுமேனியின்
அலறலை பார்த்தவண்ணம் இருந்ததாம்
பக்கத்திலிருந்த தெய்வம்
முலையென உருப்பெறா மென் தோலில்
முன்னூறு கடி…..
ஒடிந்த வாழைத்தண்டாய்
குருதிதோய்ந்தப்பிய குழந்தைக் கால்கள்….
இனியேனும் இப்பிறவிவேண்டாமென
கோடிமுறை கொந்தளித்து அடங்கிய
உப்பிப்போன உடல்…
ஊன் தின்னி மிருகங்கள்
ஊற்றிய ஊத்தை…
இன்னும் இன்னும் நரகத்தின் சாட்சியாய்
அறையப்பட்டுக்கிடக்கும் இந்த
அப்பாவிச் சிறுமியை பார்க்கவா
எமக்கிந்த ஜீவிதம்….?
மொட்டவிழாதா மெல்லிய
பூவிலே கணக்கற்ற முறையில்
அறையப்பட்ட கறைபடிந்த
ஆணிகளை
ஒரு பெண்ணின் கரம் கொண்டு
பிய்த்தெறிய சம்மதிக்குமா
இந்தச் சாக்கடை சட்டம்…?
குதிரைகளின் பின்னால்
துள்ளிக்குதித்தாடிய ஒரு
குட்டி தேவதையின் மேல்
தெய்வத்தின் சாட்சியாய்
நிகழ்த்தப்பட்டது தேவ வதை
மரத்தில் பொம்மை செய்து
மணிக்கணக்கில் புணரும் வர்க்கம்
மழலை கிடைத்தால் விடுவார்களா….?
இவர்களின் மதர்த்த குறிகளில்
சுருக்கிட்டு தொங்கவிட்டு
வலிக்க கொல்லவேண்டும்
அதுவே மனுநீதிச் செயல்..!
இப்போதெல்லாம்
பெட்டை நாய்கள் கூட
வாலால் உறுப்பை மறைத்துச்
செல்லவேண்டிய நிலை
மாட்டிறைச்சிக் கடைக்காரர்களே..!
மாடுகளை முழுவதுமாக
தொங்கவிடாதீர்கள்
அவைகளைப் பார்த்துக்கூட
சில ஆண்குறிகள் அசைகிறதாம்
இதோ ஆசிஃபாக்கு இரங்கல்
எழுதிக்கொண்டிருக்கிறேன்
குஜராத்தில் 11 வயதுச் சிறுமி
கூட்டு பாலியல் பலாத்காரமாம்
இதற்குப் பிறகும்
நிமிர்ந்திருக்கிற என்
பேனாவை பார்க்கச்
சகிக்கவில்லை…
– #அனாதியன்-