ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தேசிய அரசாங்கத்தில் நீடிப்பதா, இல்லையா? என்பது குறித்து ஆராயவும் அது தொடர்பான பரிந்துரைகளை முன்வைப்பதற்கும் கலாநிதி சரத் அமுனுகம தலைமையில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள குழு அடுத்த 18 மாதங்களில் தேசிய அரசாங்கத்தில் எவ்வாறு செயற்படவேண்டும் என்பது குறித்து ஒரு வரைபை தயாரித்திருக்கின்றது.
அந்த வரைபு குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதும் ஆராயப்படவுள்ளதுடன் அதனடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரிட்டனுக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொள்வதற்கு முன்பதாக கலாநிதி சரத் அமுனுகம தலைமையில் தேசிய அரசாங்கத்தில் சுதந்திரக்கட்சி நீடிப்பதா இல்லை என்பது குறித்து ஆராய குழுவொன்றை நியமித்தார்.
அந்தக்குழுவில் அமைச்சர்களான சரத் அமுனுகம, மஹிந்த சமரசிங்க, துமிந்த திஸாநாயக்க, மற்றும் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய ஆகியோரும் இடம்பெறுகின்றனர். இந்நிலையில் இந்தக் குழுவானது கடந்த சில தினங்களாக கூடி ஆராய்ந்து ஒரு வரைபை தயாரித்திருக்கின்றது.
அதாவது நல்லாட்சி அரசாங்கத்தில் எஞ்சியுள்ள காலப்பகுதியில் எவ்வாறு தேசிய அரசாங்கத்தை முன்னெடுத்து செல்வது, எவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது என்பது தொடர்பான ஒரு வரைபே இந்தக்குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதும் சுதந்திரக்கட்சி ஆராயவுள்ளதுடன் அதனையடுத்து அது குறித்து ஐக்கிய தேசியக்கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.
இவ்வாறு இந்த வரைபுக்கு ஐக்கிய தேசியக்கட்சியும் இணக்கும் பட்சத்தில் சுதந்திரக்கட்சியும் ஐக்கிய தேசியக்கட்சியும் இணைந்த தேசிய அரசாங்கம் நீடிக்கும். கடந்த 13 ஆம்திகதி புதிய அமைச்சரவையை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தபோதிலும் இறுதிக்கட்டத்தில் அந்த நடவடிக்கை பிற்போடப்பட்டது.
அதற்குப் பதிலாக அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்த சுதந்திரக்கட்சியின் ஆறு அமைச்சரவை அமைச்சுக்களின் பொறுப்புக்கள் ஏற்கனவே அமைச்சுப் பதவிகளை வகிக்கின்ற நான்குபேரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கலாநிதி சரத் அமுனுகம, ரஞ்சித் சியபலாப்பிட்டிய பைசர் முஸ்தபா, மற்றும் மலிக் சமரவிக்கிரம ஆகியோரிடமே குறித்த பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி நாடு திரும்பி புதிய அமைச்சரவை அமைக்கப்படும்வரை இவர்கள் நால்வரும் தற்காலிகமாக இந்தப் பதவிகளை வகிக்கின்றனர்.
அந்தவகையில் தற்போது சுதந்திரக்கட்சி அடுத்துவரும் காலப்பகுதியில் எவ்வாறு செயற்படுவது என்பது குறித்து வரைபை தயாரித்துள்ளதால் அடுத்த கட்டத்தில் என்ன நடக்கப்போகின்றது என்பதை ஜனாதிபதி நாடுதிரும்பியதும் தீர்மானிக்கவுள்ளனர் கடந்த 4 ஆம்திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பின்போது சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் 16 எம்.பி.க்கள் பிரதமருக்கு எதிராக வாக்களித்தனர். இதனையடுத்து தேசிய அரசாங்கத்தில் மேலும் நெருக்கடி நிலைமை ஏற்பட்டது.
குறித்த 16 பேரும் அரசாங்கத்தின் பொறுப்புக்களிலிருந்து விலகவேண்டும் என ஐக்கிய தேசியக்கட்சி வலியுறுத்தியது. இந்நிலையில் இந்த 16 பேரும் தமது பதவிகளை கடந்த வியாழக்கிழமை இரவு இராஜினாமா செய்தனர். இந்நிலையில் தற்போது புதிய அமைச்சரவை உருவாக்கப்படவேண்டியுள்ளது. இந்த 16 எம்.பி.க்களில் ஆறு பேர் அமைச்சரவை அமைச்சுக்களை வகித்த நிலையில் அவர்களின் பொறுப்புக்கள் ஏற்கனவே அமைச்சர்களாக இருக்கின்ற நான்குபேரிடம் தற்காலிகமாக ஒப்படைக்கப்பட்டுள்ளன.